•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Sunday, May 5, 2019

முன்னாள் வழிப்போக்கனின் உடன்போக்கு - ஸ்ரீ. பிரசாந்தன்

நீ பார்த்தறியாத துப்பாக்கி
உணர்வுள் ஒன்றிய உறவைத் துளைத்துவிடுமா?
அந்நியன் இல்லை நீ
இஸ்லாமிய நண்பனே!
என்னை நோக்கத் தயங்குவதேன்?
நீயுமிந்தத் தேசத்தின் வளம் அல்லவா?


நீ தெரிந்தறியாத ஒரு குண்டு
இத்தனை கால உரிமையைச் சிதறடித்திடுமா?
கலங்கியறியாத உன்
முகத்தில் அச்சத்தின் வியர்வைத் துளிகள்.
வெட்கத்தின் விழித் தாழ்வு.
தழுதழுத்த குரல் நடுக்கம்.
நீ கண்டறியாத ஒரு வாள்
உன் தொப்புள் பந்தத்தைத் துண்டித்து விடுமா?
பேருந்தில் யாரோ ஒருத்தனின்
சந்தேக அருவருப்பு,
எடுத்தெறியும் பஸ் நடத்துனனின்
அலட்சிய இறுமாப்பு,
பயணியரின் குத்தல் உரையாடல்,
வழியில் இறக்கும் காக்கிச் சட்டையின்
நம்ப மறுக்கும் சோதனை வருடல்கள்..
ஆம், பாதை நெடிது பயணங் கொடிது.
அனுபவித்த வழிப்போக்கன் நான்,
அறிவேன்
சந்தேக உதாசீனங்களின் சாத்துயரை..
உன்னையும் அத் துயர் உறவிடேன்.
ஆறுதல் தோள் தரும்
அடுத்த இருக்கைப் பயணியாய்
உன்னுடன்
என் உடன்போக்கு.

                               ★★★

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...