•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Saturday, June 15, 2019

காதலாகி..... -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-தமிழ்நாட்டைச் சேர்ந்த எனது ரசிகர்களும் என் ஆக்கங்களை இப்போது அதிகம் படிக்கத்
தொடங்கியிருக்கிறார்கள். இந்தக்கதை எங்கள் கிராமிய மணம் பொருந்திய கதை. இதனை
ஊர்ப்பாஷையில் எழுதினால்த்தான் கதை சிறக்கும். ஆனால் எங்கள் பேச்சுவழக்குச் சொற்கள் சில தமிழ்நாட்டு மக்களுக்குப் புரிய வாய்ப்பில்லை. அதனால் அவர்களுக்குப் புரியாத சொற்களை
தெளிவுபடுத்தியிருக்கிறேன். நவீனங்களுக்கு அகராதி போடுவதில் எனக்கு உடன்பாடில்லை.
ஆனாலும் பலருக்கும் விளங்கவேண்டும் என்பதால் இக்காரியத்தைச் செய்யவேண்டியிருக்கிறது.

கொண்ணன்மார்- அண்ணன்மார்கள்
உவன-அவனை
உவள்- அவள்
விசரன்-பைத்தியக்காரன்
அல்லனிக்காணி- ஒருநிலத்துண்டின் பெயர்
கதியால்- வேலிக்கு இடும் மரம்
ஆய்க்கினை-கரைச்சல்
எக்கணம் - ஒருவேளை
கேக்கிறனெண- கேக்கிறேன் அம்மா
கதைத்தல் - பேசுதல்
கொப்பன், தேப்பன்- தகப்பன்
கொம்மா - அம்மா
படலை - ஓலைகளால் செய்யப்பட்ட தடுப்பு
போட்டினமே-போய்விட்டார்களா?
அவையள் -அவர்கள்
பிரேதம் - பிணம்
வேலிப்பொட்டு -வேலியிலிருக்கும் ஓட்டை
வெருட்டல் - மிரட்டுதல்
குமர்- குமர்ப்பிள்ளை
உத- அதனை
அரியண்டம்- கரைச்சல்
வளவு - காணி
பெடியன் - மகன்
நிரவுதல் - மூடுதல்
பேயன் -அறிவில்லாதவன்

💢💖💢
லகம் முழுவதும் இன்ப மயமாய்த் தோன்றியது கலாவுக்கு.
இன்றோடு அவள் துன்பங்கள் தொலையப்போகின்றன.
முதன் முதலாய் வசந்த வயலுக்குள் கால் வைக்கப் போகிறாள்.
நினைப்பு, சிலிர்ப்பைத் தர, தலையசைத்துக் கொள்கிறாள் அவள்.
காலைப்பொழுது தாண்டிய வெயிலின் மெல்லிய சூடு,
அவள் உள்ள உணர்ச்சிக்குச் சுவையூட்டுகிறது.
இதுவரை தன் சோகங்களின் பதிவேடாய் இருந்த முல்லைத்தீவு,
சொர்க்கமானாற்போல் ஓர் உணர்வு.
அமைதியுற்றிருந்த கடலை நோக்கியிருந்தன அவள் கண்கள்.
வழக்கத்திற்கு மாறான அலையின்றி வெறித்து உள்வாங்கிய கடல்,
அவளது கவனத்தை ஈர்க்கவில்லை.
அவள் உள்ளத்துள் ஆயிரம் நினைவலைகள்.
இருபதாண்டுகளைத் தாண்டி அவள் எண்ணங்கள் பின் செல்ல,
அமைதியாய்க் கண் மூடுகிறாள்.
அவ்வெண்ணங்களை அசை போட்டது அவள் மனநாக்கு.

💢💖💢

வீடு கொந்தளித்தது.
அப்பாவும், அம்மாவும் கோபத்தின் உச்சத்தில்.
பதினைந்து வயதில் காதல் என்றால் யாருக்குத்தான் கோபம் வராது.
'நான் அப்பவே சொன்னனான் சனியனை வீட்டோட வைச்சிரு எண்டு.
நீதான் ஏதோ அவளைப் படிப்பிச்சுக் கிழிக்க வேணுமெண்டு,
ஒற்றக்காலில நிண்டனி.
இப்ப குடும்ப மானம் கப்பலேறப்போகுது.
எல்லாரும் ஒண்டாத் தூங்கிச் சாகவேண்டியதுதான்'
அப்பா தலையிலடித்துக் கொண்டு அழ,
'குடிகேடி குடிகேடி அந்த மனிசனை வருத்திப் போட்டியே!
பார் இப்பவும் குமர்ப்பிள்ளையில தொடக்கூடாதெண்டு,
தன்ர தலையில அடிச்சுக்கொண்டு அந்த மனுசன் அழுகுது.
அந்த மனிசனுக்கு வந்து நீ பிறந்தியே!
படிக்கவெண்டு அனுப்பினா,
இந்த வயசில உனக்குக் காதல் கேட்குதோடீ?'
படார் படாரென அம்மா முதுகில் அடித்த அடிகள்,
கலாவுக்கு வலிக்கவில்லை.

💢💖💢

'சொல்லடி அப்பாட்டைச் சொல்லடி!
நான் அவன மறந்துபோடுவனெண்டு அப்பாட்டைச் சொல்லடி!
கொண்ணன்மாருக்குத் தெரிஞ்சா எக்கணம் உன்னைக் கொண்டு போடுவாங்கள்.
கொப்பன் மானஸ்தன்.
அந்தாள் சத்தியமாய்த் தூங்கிச் செத்துப்போம்.
நான் எல்லாம் மறந்துபோறனெண்டு அவற்ர காலில விழுந்து சொல்லடி!'
அசையாமல் நின்றாள் கலா.
கோபத்தை விட்ட அம்மா திடீரெனக் கெஞ்சத் தொடங்கினா.
'என்ட குஞ்செல்லே என்ட தலையில அடிச்சுச் சத்தியம் பண்ணு!
என்ட ராசாத்தி எதக்கேட்டாலும் நாங்கள் தருவம்.
உவன மட்டும் மறந்திடுவனெண்டு,
என்ட தலையில அடிச்சு சத்தியம் பண்ணாச்சி'
அம்மா கெஞ்ச, கலா தொடர்ந்தும் அசையாமல் இருந்தாள்.
அவள் முகத்தில் எந்த சலனமுமில்லை.

💢💖💢

'பார் பார் உவள் திருந்த மாட்டாள்.
அவள் கல்லு மாதிரி நிக்கிறதைப் பாக்கத் தெரியேலயே?
காதலிக்கிறாளாம் காதல்.
அதுவும் ஆர, அந்த விசரனை.
எங்கட அப்பர் காலத்திலயிருந்து,
அந்தக் குடும்பத்தோட நாங்கள் பகை.
எங்கட வயலுக்கை ஆடு, மாடுகளை அவுத்து விடுறதும்,
'அல்லனிக்' காணிக்க கிடக்கிற
எங்கட தென்னைமரங்களில களவாத் தேங்காய் பிடுங்கிறதும்,
தங்கட ஆட்டுக்கு எங்கட கதியால் இலுப்பங்குழையை ஒடிக்கிறதும்,
வேலிக் கதியால்களத் தள்ளிப்போடுறதும் எண்டு,
அவங்கள் தந்த ஆய்க்கினைகள் கொஞ்ச நஞ்சமே?
எங்கட வீட்டு நல்லது கெட்டதுகளக் குழப்புறதுதானே அவங்கட வேலை.
அந்தக் குடும்பத்தில போய் காதலிக்கிறாளாம் காதல்.
அந்தப் பறப்பயல் சித்தன ஊரே சண்டியன் எண்டு சொல்லுது.
தேடிப்பிடிச்சு அவனைப்போய்க் காதலிக்கிறன் எண்ணுறாளே.
புத்தகத்துக்குள்ள காதல் கடுதாசியைக் கண்டு,
சோமு வாத்தியர் மட்டும் சொல்லாம இருந்திருந்தால்,
இது எங்கபோய் முடிஞ்சிருக்குமோ?
அவர் என்னோட படிச்சவரெண்டபடியா,
என்ன ரகசியமாய்க் கூப்பிட்டுச் சொன்னவர்.
எக்கணம் மற்றவயளுக்குத் தெரிஞ்சா,
ஐயோ! ஐயோ! நான் ரோட்டில எப்படி நடப்பன்.'
அப்பா திரும்பவும் தலை தலையா அடிக்க,
அம்மா பதறுகிறா.

💢💖💢

'மேனை அப்பாட்டை அவன மறந்திடுறன் எண்டு சொல்லு குஞ்சு.
அந்தாள் எக்கணம் அதிர்ச்சியில சாகப்போகுது.
பெத்ததாய் தாலிப்பிச்சை கேக்கிறனெண.
வாய் திறந்து சொல்லாச்சி!'
தாய் காலில் விழுந்து கெஞ்ச,
அதிர்ந்து காலைப் பின்னுக்கு இழுக்கிறாள் கலா.
குனிந்து கிடந்த அவள் தலை மெல்ல நிமிர்கிறது.
முகம் கல்லாய்க் கிடக்க அவள் வாய் மெல்ல அசைகிறது.
பலயீனமாய் ஆனால் உறுதியாய்ச் சொற்கள் வருகின்றன.
'கட்டினா அவரத்தான் கட்டுவன்.
இல்லாட்டி இப்படியே இருந்து செத்துப்போவன்.'
அவள் கண்களிலிருந்து கண்ணீர் பொல பொலவென உதிர்கிறது.

💢💖💢

'பாருங்கோப்பா அவள் கதைக்கிறதை.
பொம்பிளப்பிள்ளை வேணும் பொம்பிளப்பிள்ளை வேணுமெண்டு
தவமிருந்து பெத்ததுக்கு எனக்கு இது நல்லா வேணும்.
சனியனே! உதுதான் உன்ட முடிவெண்டா இப்பவே செத்துப்போ.
பெத்த தாய்தேப்பனை அழவைச்சு எக்கணம் நீ வாழவே போற.
துலைஞ்சு போ! துலைஞ்சு போ!'
கையில் கிடந்த அகப்பையால் அம்மா படீர், படீர் என அடிக்க,
அசையாது நிற்கிறாள் கலா.

💢💖💢

அல்லனி' வளவுக்குள குஞ்சு மாமா கட்டிக்கொண்டிருக்கிற அரைகுறை வீடு.
சாமான்கள் களவுபோகுமெண்டு கட்டிக்கிடக்கும் படலை.
அந்த அரைகுறை வீட்டின் கதவு போடாத 'பாத்றூமு'க்குள்,
தலை குனிந்து நிற்கிறாள் கலா.
அவள் முன்னால் பிடரியின்பின் கைகோர்த்தபடி சுவரில் சாய்ந்து நிற்கிறான் சித்தன்.
கையில்லா 'பெனியனைத்' தாண்டித் தெரிந்த,
மார்பின் உரோமங்களும், திரண்ட தோள்களும் அவனது வலிமை பேசின.
மடித்த கைகளில் மாங்காயாய்த் தசை திரண்டு கிடக்க,
அவன் உடல் வீரம் பேசிற்று.
மெல்லத் தொண்டையைச் செருமுகிறான் அவன்.
'என்ன, நல்லா அடிச்சுப் போட்டினமே? கேள்விப்பட்டனான்.'
அவளை அறியாமல் அழுகை பொங்குகிறது.
'அரக்கச்சாதி என்ட குஞ்சை இப்பிடிப்போட்டு அடிச்சிருக்கினம்.'
சொல்லியபடி கண்டிக் கிடக்கும் அவள் கைகளை,
தொடப் போகிறான் சித்தன்,

💢💖💢

சரேலென்று கையைப் பின்னுக்கு இழுத்து,
'உதுதான் வேணாமெண்ணுறது,
தாலியேறுறதுக்கு முதல் என்னைத் தொடப்படாதெண்டு
சொல்லியிருக்கிறனெல்லே.
அவையள் பெத்த பிள்ள, அவையள் அடிக்கினம்.
அதைக் கேக்க நீங்கள் ஆர்?
உங்கட குடும்பம் சரியா இருந்திருந்தால் ஏன் அவையள் அடிக்கப்போயினம்.?
அவையள மீறி இங்க வந்திருக்கமாட்டன்.
உங்களுக்கு, ஒண்டு சொல்லிப்போட்டுப் போகத்தான் வந்தனான்.
அதுகள் என்னை என்ன அடிச்சாலும் அதுகள் என்ட கடவுள்கள்.
உங்கட ஆக்களின்ட பிழையாலதான் அதுகள் கோவிக்குதுகள்.
எல்லாம் என்ட விதி,
இந்த நாசமாப்போன மனம் உங்களில விசராகிக் கிடக்கு.
கெதியில எல்லாத்துக்கும் ஒரு முடிவு வரவேணும்.
இல்லாட்டி என்னைப் பிரேதமாத்தான் பாப்பியள்.'
அவளின் கவலை கோபமாய் வெளிப்பட,
தலைகோதி முகடு பார்க்கிறான் சித்தன்.

💢💖💢

பிறங்கையால் கண்ணைத் துடைச்சு,
கலா தொடர்ந்து பேசுகிறாள்.
'ஒண்டு சொல்லிப்போட்டன்,
நான் வேணுமெண்டா கொப்பர் கொம்மாட்டைச் சொல்லி,
எங்கட அப்பா என்ன பேசினாலும் பொறுத்துக்கொண்டு,
வந்து பொம்பிள கேக்கச் சொல்லுங்கோ.
அவையளிட சம்மதம் இல்லாம,
கலியாணம் மட்டும் நடக்காது'
அவன் பதிலுக்குக் காத்திராமல் வேலிப் 'பொட்டு'க்குள்ளால் ஓடுறாள் கலா.

💢💖💢

பத்து வருஷம் ஓடியிருந்தது.
கலாவுக்கு இப்பொழுது இருபத்தைந்து வயது.
அதற்குள் ஆயிரம் பிரச்சினைகள்.
விசயம் தெரிஞ்சு சித்தனுக்கு கலாவின் அண்ணன்மார் அடிக்க,
குடும்பப் பகை பெரிதாகியிருந்தது.
இந்தப் பிரச்சினை தந்த கவலையாலே,
கலாவின் தகப்பனார் காலமாகியிருந்தார்.
கலாவை ஒத்த உறவுப் பிள்ளைகள் எல்லாம்,
கலியாணமாகிப் பிள்ளை குட்டியுடன் இருந்தார்கள்.
தொடர்ந்து அடி, உதை, வெருட்டல் என ஆயிரம் நெருக்கடிகள்.
கலா அசைந்து கொடுக்கவில்லை.
பெண் பிள்ளைக்கு இருபது வயது கடந்தாலே,
கலியாணம் பிந்தி விட்டதாய்ப் பதறுகிற காலமது.
'தேப்பனில்லாப் பிள்ளையடா, சொல்லுக்கேக்கிறாளில்ல.
குமர வைச்சுக்கொண்டு எத்தனை நாளைக்கு இப்பிடி இருக்கிறது.
பெண்ணைப் பெத்த நாங்கள் தான் இறங்கிப்போகவேணும்.
தேப்பனையும் கொண்டுட்டாள்.
உது அவளாத் தேடிக்கொண்டது.
அவளிட வாழ்க்கை எப்படியும் நாசமாப் போகட்டும்.
நீங்கள் மானத்தைப் பாக்காமல் ஒருக்காப் போய்க் கதைச்சு,
உத முடிவுக்குக் கொண்டு வாருங்கோ.'
அம்மாவின் அரியண்டம் தாங்காமல் அண்ணன்மார் இறங்கி வந்தனர்.

💢💖💢

இரண்டாம் பிரளயம் அங்கு தொடங்கியது.
வேண்டா வெறுப்பாய் வந்திருந்த கலாவின் தமையன்மாரிடம்,
சித்தன்ர தகப்பன் நிபந்தனைகள் போட்டார்.
'காசு ஐம்பதாயிரம் தரவேணும்.
இருபது பவுண் நகையெண்டாலும் போடவேணும்.
'அல்லனி'த் தென்னை வளவை எழுதித் தரவேணும்.
உதுகள் சரியெண்டாச் சொல்லுங்கோ, பிறகு பேசுவம்.'
அண்ணன்மாரின் கோபம் உச்சத்திற்குப் போக,
மூத்தவன் முணுமுணுத்தான்.
'தேங்காய் களவெடுத்த ஆசை இன்னும் போகேல்லப் போல.'
முணுமுணுத்த அவனைக் கலாவின் தாய் கண்ணாலே அடக்கினாள்.
'உதெல்லாம் பிறகு,
முதலில எங்கட கந்தப்புச் சாத்திரியார் சாதகம் பாத்துச் சொல்லவேணும்,
பிறகுதான் மற்றப்பேச்சு.'
சித்தனின் தாய் பேச்சை முறித்து முற்றுப்புள்ளி வைத்தாள்.

💢💖💢

'கலாவினுடைய சாதகத்தில செவ்வாய்க் குற்றமாம்.
கலியாணம் செய்தாக் குடும்பம் விளங்காதாம்.
சாத்திரியார் சொல்லிப்போட்டார்.
உந்தக் கதையை உந்தளவில விடுங்கோ!'
சித்தன்ர தாய் கோயிலில் கண்டு சொல்ல,
வீடு பழையபடி கொந்தளித்தது.

💢💖💢

'அவங்களத் திருத்த முடியாது.
இனியாவது உந்தக் கதையை விடு.'
கெஞ்சிய அண்ணன்மாரை முறைத்து,
'வாழ்ந்தா அவரோடதான் இல்லாட்டிச் செத்துப் போடுவன்.'
கலா பிடிவாதம் பிடித்தாள்.
'சனியனே! இப்பவே சாவன்.
அப்பா, அம்மாவை வருத்திட்டு எக்கணம் நீ வாழவே போற?'
அண்ணன்மார் மாறி மாறி அடிக்க,
'ஐயோ என்ர பிள்ளையக் கொல்லாதைங்கோடா.'
பாசம் மாறாத தாய் குறுக்கே விழுந்து தடுத்தாள்.

💢💖💢

ஐயனார் கோயில்ப் பூந்தோட்டம்.
வேலிக்குப் பின்னால் கலா.
உள்ளே சித்தன்.
மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காக,
காற்றில் பேசுவதுபோல் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கின்றனர்.
'என்ன கொண்ணமார் அடிச்சுப்போட்டாங்களாம்?
என்ட கோபத்த உன்னில காட்டுறாங்கள் போல.
நீ ஓம் என்டு சொல்லு,
நான் அவங்களுக்குப் படிப்பிச்சுக் காட்டுறன்.'
கோபத்தில் கண்கலங்கக் கைமுறுக்கியபடி பேசினான் சித்தன்.

💢💖💢

'ஓம் ஓம் உங்கட வீரமெல்லாம் எங்கட ஆக்களிட்டைத் தானாக்கும்.
அந்த வீரத்தை உங்கட வீட்டிலயும் காட்டுறதுதானே.
அப்பர் வளவைத் தரட்டாம், அம்மா செவ்வாயாம்.
எங்கள வருத்த எண்டு பிறந்ததுகள்.
நீங்கள் உப்படியே உழைப்பில்லாமற் திரியுங்கோ.
உது சரிவராது.
உயிரோட இருந்தாத்தானே பிரச்சினை.
இருக்கவே இருக்கு பூந்தோட்டத்துக்குள்ள அலரி விதை.
ஒருவருக்கும் பிரச்சினை இல்லாம நானே முடிச்சுவைக்கிறன்.'
கோபமும் விம்மலுமாய்க் கலா சொல்ல,
'உதென்ன விசர்க்கதை கதைக்கிற,' என்று பதறுகிறான் சித்தன்.

💢💖💢

'எல்லாம் என்ட பிழைதான்.
உன்னை விட்டிட்டுப் போகமுடியாமத்தான்,
இவ்வளவு நாளும் இங்க சுத்திக்கொண்டு இருந்தனான்.
இப்ப நீயே பேசிற,
இனிச் சரிவராது.
எனக்கு ஒருத்தரும் தேவையில்லை,
நீ மட்டுந்தான் தேவை.
அஞ்சு வருஷம் எனக்காகப் பொறுத்திரு.
வெளிநாடு போய் உழைச்செண்டாலும் உன்ட கை பிடிக்கிறன்.
நம்பினா நம்பு, நம்பாட்டி விடு.
அதுவும் நடக்காட்டி அலரி விதையை எனக்கும் சேர்த்து அரை.'
ஆகாயம் பார்த்து, கலங்கும் கண்களை மறைக்கிறான் சித்தன்.

💢💖💢

அவன் கலங்குவதைக் கண்டு சகிக்காத கலா,
'உதென்ன கதை,
ஏன் இப்பிடிச்சொல்லுறியள் கட்டாயமா நான் காத்திருப்பன்
அவன் கண்களில் உறுதி.

💢💖💢

காசோடு சித்தன் வருவதாய்,
போன கிழமை தான் கடிதம் வந்திருந்தது.
வழக்கமாய்ச் சந்திக்கிற கடற்கரைக் கல்லிலை,
தனக்காகக் காத்திருக்க வேணுமாம்.
ஐந்து வருஷத்தில் ரோஷமாய்ச் சொன்னதை செய்து,
சவூதியில் போய்ப் படாதபாடுபட்டு உழைத்துக்கொண்டு வந்திருக்கிறான்.
சித்தன் வந்ததைப் பற்றி ஊரெல்லாம் ஒரே கதை.
அவன் கை மோதிரங்கள் பற்றியும்,
கழுத்துச் சங்கிலி பற்றியும்,
கனகம் அக்கா கோயிலடியில் நின்று பேசியது,
கலாவின் காதில் விழுந்தது.
தனக்குள் பெருமைப்பட்டாள்.
கடற்கரையில் காலை சந்திப்பதாய்,
சின்னான்ட பெடியனிடம் சொல்லி அனுப்பியிருந்தான் சித்தன்.
அவனுக்காகத்தான் கடற்கரையில் காத்திருக்கிறாள் கலா.

💢💖💢

பட .... பட் ...... படபட .......
முதல் நாள் 'கிறிஸ்மஸ்சின்' மிச்சமான பட்டாசுகள் வெடிக்க,
எண்ணப் பறவை எங்கோ மறைகிறது.
மீண்டும் நனவுலகத்திற்கு வருகிறாள் கலா.
எல்லாம் நேற்று நடத்தாற் போலிருக்கிறது.
அதற்குள் எவ்வளவு காலம் ஓடிவிட்டது.
'எத்தனை சண்டை? எத்தனை வேதனை? எத்தனை இழப்பு?
அத்தனையையும் நிரவி வாழ்ந்து காட்டவேணும்.
அதிசயமாய் வற்றிக் கிடந்த கடலை,
தன் வாழ்வின் துன்பத்தோடு ஒப்பிட்டு வருந்துகிறாள் அவள்.

💢💖💢

'என்ன, கனநேரம் காத்திருக்கிறீரோ?'
நிமிர்ந்தவள் முன் சித்தன்.
பணம் அவன் தோற்றத்தில் மாற்றம் ஏற்படுத்தியிருந்தது.
அவன் முரட்டு உடம்பு மட்டும் மாற்றமில்லாமல் அப்படியே.
மெல்லிய 'சென்ட்' வாசனை தன்னைச் சூழ,
அவள் உள்மகிழ்ந்தாள்
உரசிக்கொண்டு உட்கார்ந்தவனை,
முறைத்து,
'தாலி கட்டுறதுக்கு முதல் தொடக்குடாதெண்டு,
சொல்லியிருக்கிறனெல்லே.'
அவள் பொய்யாய் முறைக்கிறாள் என்பதை முகத்தின் சிரிப்புக் காட்டுகிறது.
'உந்தச் சேட்டையெல்லாம் இனி வேறயாரிட்டையும்,
பதினைஞ்சு வருஷமா உந்த வெருட்டுக்குப் பயந்து காத்துக் கிடந்திட்டன்.
இனியும் விட்டிட்டிருக்க நான் பேயனில்ல'
அவள் திமிரத் திமிர இழுத்துக் கன்னத்தில் முத்தமிடுகிறான் சித்தன்.

💢💖💢

'உதென்ன முரட்டுத்தனம், ஆரும் பார்க்கப்போயினம்.' - கலா பதற,
'நல்லாப் பாக்கட்டும்.
நான் என்ட பெண்சாதியைத்தான் தொட்டனான்.
மீண்டும் கொஞ்சப்போன சித்தனைத் தள்ளி,
'பெண்சாதியோ, கலியாணம் எப்ப நடந்தது?'
முகம் நிறைந்த சிரிப்புடன் கேட்கிறாள் கலா.
'இத நான் உழைச்சு வாங்கேக்கையே நடந்திட்டுது' என்று சொன்னபடி,
பொக்கற்றுக்குள் இருந்து பளபளக்கும் தாலிக்கொடியை வெளியில் எடுக்கிறான்.
'ஓ! மாப்பிளை அப்ப எல்லாத்துக்கும் தயாராய்த்தான் வந்திருக்கிறார் போல.'
கலாவின் முகம் நிறைய மகிழ்ச்சி.
ஆனந்தத்தில் அவள் கண்கள் கலங்குகின்றன.
இரு கைகளாலும் அவள் முகத்தை ஏந்தி,
உதட்டில் சூடாய் முத்தமிடுகிறான் சித்தன்.
இப்பொழுது கலாவிடம் எதிர்ப்பில்லை.
உணர்ச்சி வேகத்தில் கண்ணீர் கொட்டுகிறது.

💢💖💢

'இனி ஏன் அழுவேணும்?
பட்ட கஷ்டமெல்லாம் முடிஞ்சுபோச்சு.
இனி ஒருத்தரும் எங்களுக்குத் தேவையில்லை.
நீரும், நானும், சந்தோஷமும் மட்டுந்தான்.'
அவன் தோளில் சாய்கிறாள் கலா.
'உதென்ன தாலி கட்டுறதுக்கு முன்னால தோளில சாய்றீர்?
இப்ப நீர் மட்டும் தொடலாமே?'
சித்தன் சொல்ல இருவரும் சிரிக்கிறார்கள்.
அவள் கைகளைத் தன் கைகளுள் பொத்தியபடி,
'இனி உம்மட வாழ்க்கையில சந்தோஷம் பொங்கவேணும்.
அதுக்குத்தான் இவ்வளவு நாளும் போய்ப் பாடுபட்டு உழைச்சனான்.
அங்க பாரும் எங்கட சந்தோஷத்தைப் பாத்துப்போல,
கடலுமெல்லே வழக்கத்தை விடப் பொங்குது.'
கடலலைகள் மெல்ல மெல்ல உயர்வதை,
இருவரும் வியப்பாய்ப் பார்க்கின்றனர்.

💢💖💢

அன்றைய திகதி,
26.12.2004,
சுனாமி வந்த நாள் அது.

💢💢💢💢

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...