•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Friday, August 2, 2019

"அப்பாலும் அடிசார்ந்தார்" -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-


லகை உய்விக்கவே சமயங்கள் தோன்றின.
ஆன்ம முதிர்ச்சி எய்திய ஞானியரால் தோற்றுவிக்கப்பட்ட,
உயர் சமயங்கள் பல,
பின்நாளில் அவற்றைப் பின்பற்றியோரால் மாசுண்டன.
பற்று அறுக்க உரைக்கப்பட்ட அந்த ஞானியரின் அருள் நெறிகளுள்,
ஏதோ ஒன்றைப் பற்றி,
தாம் கொண்ட அந்நெறி ஒன்றே,
இறையை எய்துதற்காம் வழியென்று பிடிவாதம் செய்து,
தம் மதத்தில் மிகை அன்பும்,
பிற மதங்களில் பகையும் கொண்டு உழல்வோரே,
நற் சமயங்களை மாசுபடுத்துவோராம்.
உண்மைச் சமயம் எனப் போற்றப்படும் நம் சைவசமயம்.
ஆன்ம ஈடேற்றம் நோக்கி அமைத்த படிமுறை,
அற்புதத்திலும் அற்புதமானது!
நம் சைவசமயத்தில் தோன்றிய ஞானியர்.
பகை கடந்த ஞானமார்க்கத்தை,
தெளிவுற உரைத்துச் சென்றனர்.
அன்பையே சிவமாய்க் கண்ட அவ் ஆன்றோர்கள் வகுத்த சைவ நெறியில்,
பேதமோ? பகையோ? கிஞ்சித்தும் இல்லையாம்!தம் சமயம் தவிர்ந்த மற்றைச் சமயங்களை உறவாய்க் கண்டதே,
சித்தாந்த சைவத்தின் தனிச்சிறப்பாம்!
கொள்கை நெருக்கம் நோக்கி,
மற்றைச் சமயங்களை,
நான்கு வகை உறவு நிலையாய் சைவம் வகுத்துக் கொண்டது.
அகச்சமயம், அகப்புறச்சமயம், புறச்சமயம், புறப்புறச்சமயம்,
என்பனவே அவ் வகுப்புக்களாம்.
இவ் வகுப்புக்கள் ஒவ்வொன்றும் ஆறாறு சமயங்களாய் விரிவன.
சைவத்தின் இறுதி நிலை உறவாய் அமையும்,
புறப்புறச் சமயங்கள் ஆறின்,
இறுதிச்சமயமாய் அங்கீகரிக்கப்பட்டது நிரீச்சுவரவாத கொள்கையாம்.
நிரீச்சுவரவாதத்தினை அங்கீகரித்த சைவத்தின் விரிந்த கொள்கை,
வியத்தகு அதிசயமே!
இறைமறுப்புக் கொள்கையாளரையே அந்நாளில் நிரீச்சுவர வாதிகள் என்றனர்.
(நிரீச்சுவரம்-நிர்-ஈச்சுவரம்).
இறைவன் என்றொருவன் இல்லை என்பாரையும்,
சமயவாதிகளாய் ஏற்றுக்கொண்டமை,
நம் சித்தாந்த சைவத்தின் உன்னத சிறப்புக்களில் ஒன்றாம்.கடவுள் இல்லை என்பவரை சமயிகள் என்றுரைப்பது,
சைவத்தின் பொய்மை கலந்த மிகைப்பட்ட சமரசமாய்த் தோன்றும்.
நம் சைவ ஞானியர்தம் பொறுமை உணர்த்த,
இறை இல்லை என்பாரையும் உறவாய் ஏற்று,
மேற் பொய்மை சமரசத்தைச் செய்தனரா?
அத்தகு வஞ்சகம் அவர்கள் அறியாதது.
பின்னர் இச்சமரசத்தின் காரணம் யாதாயிருக்க முடியும்.
அதற்காம் விடைகள் இரண்டாம்.ஓர் உண்மையை நிரூபிக்கும் பிரமாணங்களில்,
'இன்மை'யையும் ஒன்றாய்க் கொண்டனர் பேரறிஞர்.
அதனை சற்று விரித்தறிவோம்.
இவ்விடத்தில் வீடு இல்லை எனும் கூற்றில் வரும் இல்லை எனும் சொல்,
வேறெங்கோ வீடு என்ற ஒன்று உண்டென்பதை நிரூபணம் செய்கிறது.
இஃதே இன்மை உணர்த்தும் உண்மையாம்.
இவ் அடிப்படை கொண்டே, கடவுள் இல்லை என்பாரையும்,
அதன் உண்மை உணர்த்தும் சமயிகளாய்,
நம் சைவச்சான்றோர் கொண்டனர்.
இஃது மேற்குறித்த விடைகளில் ஒன்று.ஓர் ஆசிரியனிடம் ஐந்து மாணவர்கள் கணித பாடம் கற்கின்றனர்.
ஒரு நாள் ஆசிரியர் அம் மாணவர்களிடம்,
ஐந்தும், மூன்றும் எத்தனை? எனக் கேட்கிறார்.
ஆற்றல் மிகு மாணவன் ஒருவன் எட்டு எனச் சரியாய் விடை பகர்கிறான்.
இரண்டாமவன் ஆறு என விடை பகர்கிறான்.
மூன்றாமவன் நான்கு என விடை பகர்கிறான்.
நான்காமவன் ஒன்று என விடை பகர்கிறான்.
ஐந்தாமவன் பூச்சியம் என விடை பகர்கிறான்.
சரியாய் விடை பகர்ந்த முதலாமவனை நோக்க,
பிழையாய்ப் பதில் உரைத்த மற்றையோரில்,
இரண்டாமவன் சரியான விடைக்கு மிக அருகில் இருந்தனன்.
மூன்றாமவன் சரியான விடைக்கு சற்றுத் தூரத்தில்  இருந்தனன்.
நான்காமவன் சரியான விடைக்கு அதிக தூரத்தில்  இருந்தனன்.
ஐந்தாமவன் சரியான விடைக்கு மிக அதிக தூரத்தில் இருந்தனன்.
இங்ஙனமே இறைத்தேடலில் சரியான விடை கண்ட சைவம்,
அவ் விடைக்கு அருகிருந்த தூரம் பற்றி,
மற்றைச் சமயங்களை,
அகச்சமயம், அகப்புறச்சமயம், புறச்சமயம், புறப்புறச்சமயம் என,
பிரித்து உறவு கொண்டாடிற்று.
மேல் உதாரணத்தில்,
பிழையாய் விடை சொன்னோரில்,
பூச்சியம் என விடை பகர்ந்தவனே உண்மைக்கு அதிக தூரத்தில் உள்ளவனாம்.
அவன் பிழையாய் விடை பகரினும் அவனும் மாணவனேயாம்.
திரிபறிவால் அவன் பிழையாய் விடை பகரினும்,
உண்மையைத் தேடியவன் எனும் உரிமையால் அவனும் மாணவன் ஆகின்றான்.
அவ் உரிமை பற்றி அவனும் சரியாய் விடை பகர்ந்தவனும் உறவாதல் கண்கூடு.
இது போலவே,
இறைத்தேடலில் கடவுள் இல்லை என்பானும்,
திரிபு விடை பகரினும், தேடிய உரிமையால் சமயி ஆகின்றான்.
அது நோக்கியே நம் சைவச்சான்றோர்.
அவனையும் புறப்புறச் சமயியாய் உறவோடு அங்கீகரித்தனர்.
இச் சிறப்பு சித்தாந்த சைவத்திற்கே உரிய தனிச் சிறப்பாம்.
இஃது இரண்டாம் விடை.மற்றைச் சமயங்களோடு இவ் உறவுரிமையைப் பெற,
சித்தாந்த தத்துவம் வகுத்துக் கொண்ட கொள்கை ஒன்றும் காரணமாயிற்று.
இறை நிலையை வகுத்த நம் தத்துவவியலாளர்கள்,
அதனை சொரூபம், தடத்தம் என இரண்டாய் உரைத்தனர்.
சொரூபநிலையாவது, அறிவைக் கடந்த இறைநிலையாம்.
தடத்தநிலையாவது, அறிவுக்குட்படும் இறைநிலையாம்.
அத்தடத்த நிலையை,
அருவம், அருவுருவம், உருவம் என பின் மூன்றாய் வகுத்தனர்.
அருவம் வடிவமற்ற நிலை,
அருவுருவம் வரையறுக்கப்பட்ட வடிவமற்ற நிலை,
உருவம் வரையறுக்கப்பட்ட வடிவமுள்ள நிலை.
வடிவமற்றதான அருவ நிலையும் நம் புத்தியால் பற்றப்படுதலால்,
அஃதும் இறையின் தடத்த வடிவங்களுள் ஒன்றாயிற்று.நம் தெய்வச் சேக்கிழார்,
இவ் அடிப்படைகள் கொண்டே தனது முதற் பாடலில்,
'உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன்' என,
இறையின் சொரூபநிலையை உரைத்துப் பின்,
'நிலவுளாவிய நீர்மலி வேணியன்' என உருவத்தினையும்,
'அலகில்ச் சோதியன்' என அருவுருவத்தினையும்,
'அம்பலத்தாடுவான்' என அருவத்தினையும் கூறி,
சொரூப, தடத்தநிலைகளின் முழுமை உரைக்கின்றார்.
அம்பலத்தாடுவான் என்பது உருவமன்றோ? எனின்,
அற்றன்றாம்.
அம்பலம் என்பது ஆகாயத்தைக் குறிக்கும் சொல்.
அங்கு இறைவன் அரூப நிலை கொண்டே நடனம் புரிகிறான்.
இஃதே சிதம்பர இரகசியமாம்.அறிவைக் கடந்தது எனும் சொரூபநிலையை இறைக்கு உரைத்ததன் மூலம்.
சித்தாந்த சைவம்,
இறையின் உண்மை ரூபம் இது என,
எவராலும் வரையறுக்க முடியாது என்பதை வெளிப்பட ஒத்துக்கொண்டது.
அங்ஙனம் உரைத்ததால்,
இறைக்காய் வழங்கப்படும் எச்சமய வடிவங்களும்,
நம் சமயம் வகுத்த சொரூபநிலைக்குள்,
பொருந்துதல் கூடும் எனும் ஊகத்தில்,
மற்றைச் சமயங்களையும், அவை கூறும் வடிவங்களையும்,
நம் சித்தாந்த சைவம் அங்கீகரித்து நின்றது.
அவ் அடிப்படையிலேயே,
இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன்,
இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொனாதே,
தென்னாடுடைய சிவனே போற்றி,
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி,
போன்றதான அருள் வாசகங்களை நம் சைவம் அங்கீகரித்து நிற்கிறது.இவ் அரிய சைவ உண்மைகளை உள்வாங்கி,
இறையின் உண்மை நிலையை உணர்ந்த,
நம் நால்வர் பெருமக்களுள் ஒருவரான சுந்தரர்,
தேவாசிரிய மண்டபத்தில் தொண்டர்களை வழிபடாமல்,
ஆலயத்துள் சென்று குறை தீர்க்க,
இறைவன் ஆணைப்படி,
திருத்தொண்டர் தொகையினைப் பாடத்தொடங்குகிறார்.
அறுபத்தியொரு தனி அடியார்களைப் பாடி முடித்தவர்,
அவ் அடியாரோடு தொகை அடியார் ஒன்பதின்மரையும்,
அப் பதிகத்தில் இணைத்துப் போற்றுகிறார்.
அங்ஙனம் அவர் போற்றும் தொகை அடியார்களில் நிறைவில் வருபவர்,
'அப்பாலும் அடிசார்ந்தார்' எனும் ஒரு பகுதியினர்,
அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கும் அடியேன் என,
அவர் தமை சுந்தரர் போற்றுகிறார்.இப் பாடல் அடி சைவப் பற்றாளர்களைக் குழப்புவது.
அப்பாலும் அடிசார்ந்தார் என சுந்தரர் போற்றியது யாரை? எனும் கேள்விக்கு,
சைவத்தின்  மீதான பற்று நிலையில் நின்று,
அவர்களுள் சிலர் பொருள் கண்டனர்.
அப்பாலும் அடிசார்ந்தார் என்று சுந்தரர் உரைத்தது,
சைவ அடியார்களைத்தான் என்பது அவர் தம் கருத்து.
சைவ அடியார் அறுபத்தொருவரை தனித்தனி போற்றிய பின்,
தனித்து, அப்பாலும் அடிசார்ந்தார் என,
தொகை அடியார் சிலரை சுந்தரர் போற்றிய காரணம் யாது?
அத் தொகை அடியார் யாவர்? இக் கேள்விகளுக்கு,
அச் சைவப்பற்றாளர் கூறும் விடை ஒன்றேயாம்.
மேல் அறுபத்தொருவர்க்கு,
காலத்தாலும், இடத்தாலும் முன்னும், பின்னும் வாழ்ந்து சிவனடி சேர்ந்தவர்களையே,
சுந்தரர், அப்பாலும் அடிசார்ந்தார் என உரைத்ததாய்க் கூறி,
அவர்கள் நம் சைவத்தின் விரிவை சுருக்கி இழிவு செய்கின்றனர்.
உண்மை அதுவன்றாம்.சைவத்தின் உண்மை வேரோட்டத்தினை அறிந்தவரான,
தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.
சுந்தரரின் ஆழ்ந்திருக்கும் கவி உளம் அறிந்து,
அப்பாலும் அடிசார்ந்தார் எனும் தொடரின் உண்மைக்கருத்தினை,
தனது பெரியபுராணக் காப்பியத்தில் தெளிவு செய்கிறார்.
அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கும் அடியேன் எனும்,
சுந்தரர் தம் பாடல் அடிக்கு,
ஒரே பாடலால் விளக்கம் செய்கிறார் சேக்கிழார்.
அப்பாடலை முதலில் காண்பாம்.

மூவேந்தர் தமிழ் வழங்கு நாட்டுக்கப்பால்
முதல்வனார் அடிசார்ந்த முறைமையோரும்
நாவேய்ந்த திருத்தொண்டர் தொகையிற் கூறும்
நற்றொண்டர் காலத்து முன்னும் பின்னும்
பூவேய்ந்த நெடுஞ்சடை மேல் அடம்பு தும்பை
புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த
சேவேந்து வெல் கொடியான் அடிசார்ந்தாரும்
செப்பிய அப்பாலும் அடிச்சார்ந்தார் தாமே!

இப் பாடலில் அப்பாலும் அடிசார்ந்தாரை,
தெய்வச் சேக்கிழார் இரு வகையாய்ப் பிரிக்கின்றார்.
மூவேந்தரால் ஆளப்பட்ட தமிழ் நாட்டிற்கு அப்பால் வாழ்ந்தார் என ஒரு பகுதியினரையும்,
திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அடியார்க்கு,
காலத்தால் முன்னும் பின்னும் வாழ்ந்தார் என ஒரு பகுதியினரையும் தான்,
அப்பாலும் அடிசார்ந்தார் எனச் சுந்தரர் கூறியதாய்,
தெய்வச் சேக்கிழார் உரைப்பது சிந்திக்கத் தக்கது.இப் பாடலில் சில விடயங்களை நாம் குறிப்பாய்க் காணுதல் அவசியம்.
சுந்தரரின் அப்பாலும் அடிசார்ந்தார் எனும் தொடரிற்கு,
விரிவுரைக்கத் தலைப்படும் நம் தெய்வச் சேக்கிழார்,
தமிழ் நாட்டுக்கு அப்பால் இருந்த அடியார்கள் என,
இட எல்லையால் ஒரு பகுதியினரைப் பிரித்து விட்டு,
அதன் பின்னர் முன் தாம் கூறிய சிவனடியாரின்,
முன்னும், பின்னும் வாழ்ந்த அடியார் என,
கால எல்லையால் மற்றொரு பகுதியினரைப் பிரித்துக் காட்டுகிறார்.
இடத்தால் வேறுபட்ட அடியார்களும்,
காலத்தால் வேறுபட்ட அடியார்களும்,
இறைவனடி சேர்ந்ததைக் குறிப்பிடும் போது,
இடத்தால் வேறுபட்டவர்கள் அடைந்த இறைவனை முதல்வன் எனவும்,
காலத்தால் வேறுபட்டவர்கள் அடைந்த இறைவனை சிவன் எனவும்,
குறிப்போடு தெய்வச் சேக்கிழார் வேறுபடுத்தி உரைக்கின்றார்.பாடலின் முதலடியில், முதல்வனார் எனச் சேக்கிழார் உரைப்பது,
சொரூபநிலையுற்ற நம் அறிவைக் கடந்த இறையினையேயாம்.
மூன்றாம், நான்காம் அடிகளில்,
கொன்றை, தும்பைப் பூக்களையும்,
மதியையும், நதியையும் சூடிக்கொண்ட,
காளைச் சின்னம் எழுதப் பெற்ற கொடியை உடையவன் என அவர் குறிப்பது,
தடத்த நிலையில் பொருந்தும் உருவ நிலைச் சிவனையேயாம்.
இவ் வேற்றுமை உரைப்பு நிகழ்ந்தது எதனால்?
அறிதல் அவசியமாம்.அப்பாலும் அடிசார்ந்தாரைக் காலத்தாலும், இடத்தாலும்,
வேறுபட்டவர்கள் எனும் பேதத்தினால் மட்டுமன்றி,
முதல்வனார் அடிசேர்ந்தார், சிவனடி சேர்ந்தார் எனும் பேதத்தினாலும்,
சேக்கிழார் வேறுபடுத்துகிறார்.
ஆழ்ந்து நோக்க இடத்தால் வேறுபட்ட அடியார் என,
சேக்கிழார் உரைப்பது மற்றைச் சமயங்களிலிருந்து,
இறைத் திருவடியை அடைந்த வேற்று மத அடியார்களைத்தான் என்பது,
தெற்றெனப் புரிகின்றது.
அதனால்தான் அவர் சார்ந்த இறையடியை,
சிவனடியாய் உரைக்காமல் முதல்வனார் திருவடியாய் உரைக்கின்றார் சேக்கிழார்.
எல்லாச் சமயங்களுள்ளும்,
அவ்வச் சமயங்களில் நின்று இறையடியைச் சார்ந்தார் இருத்தல் வெளிப்படை.
சமய வேறுபாடுகளாலும், அவ்வவர் தொழுத வடிவ வேறுபாடுகளாலும்,
முடிவில் அடைவதான முத்திப்பேறு வேறுபடாதென்பது திண்ணம்.
எச்சமயத்தினூடும்,  எவ்வடிவத்தினூடும், இறையை வழிபடும் எவரும்,
சொரூபநிலையுற்ற மூல முதற் பொருளையே,
நிறைவில் சென்றெய்துகின்றனர்.
எனவே இங்கு அப்பாலும் அடிசார்ந்தார் எனச் சுந்தரர் போற்ற நினைத்தது,
நம் சைவச் சிவனடியார் திருவடிகளை மட்டுமன்றி,
எச் சமயத்தினின்றும் இறையைச் சேர்ந்தார் தம் திருவடிகளையுமாம்.
நிரீச்சுவர வாதத்தினையும் உறவாய்க் கொண்ட நம் சைவத்தின் விரிவறிந்தே,
சுந்தரர் இப் புரட்சியைச் செய்தனர்.
அவர் தம் அடிபற்றி நம் தெய்வச்சேக்கிழாரும்,
அப்பாலும் அடிசார்ந்தாருள் தமிழ் நாட்டுக்கப்பால் இருந்தோரை குறிக்கும் போது,
முதல்வனார் அடிசார்ந்தார் எனக் குறித்ததன் மூலம்,
மற்றைச் சமய அடியார்களையும் அப்பாலும் அடிசார்ந்தாருள் உள்வாங்கி உரைத்து,
சுந்தரர்க்கும், சைவத்திற்கும் நீதி செய்தனர்.

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...