•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Friday, August 23, 2019

"அறமும் ஆண்டவனும்" -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-


லகு இறைவனின் படைப்பு.
அவ்வுலகின் இயக்கமே இயற்கையாம்.
இயற்கையுள் காணப்படும் ஒழுங்கே அறம் எனப்படும்.
அந்தரத்தில் இயங்கும் இவ்வுலகின் நிலைத்தல் தன்மை,
யாராலும் உறுதிப்படுத்த முடியாதவொன்று.
ஆயிரமாய் விரிந்த அண்டங்கள் நிறைந்த பால் வெளியில்,
அவ்வண்டங்களின் ஒழுங்கமைந்த இயக்கமே,
அவற்றின் நிலைத்தற் தன்மைக்குக் காரணம் ஆகின்றது.
அவ்வண்டங்கள் இயங்கும் ஒழுங்கு சற்றேனும் மாறுபடுமேல்...
அடுத்த வினாடியே அவை ஒன்றுடன் ஒன்று மோதி சிதைந்து அழிவுறும்.
ஒன்றுடன் ஒன்று மோதி சிதைவுறாத அவ்வொழுங்கு அமைந்தது எங்ஙனம்?
அவ்வொழுங்கு காரியமாயின் அக் காரியத்தின் காரணமாக இருப்பது யாது?
அறிவற்ற சடப்பொருட்களாய் இருக்கும்,
இவ்வண்டங்களில் காணப்படும் அவ்வொழுங்கமைப்பு,
அவற்றினாலேயே விளைதல் சாத்தியம் அன்றாம்.
பின் அச்சடப்பொருட்களின் ஒழுங்குநிலைக்குக் காரணம் யாது?
அறிவுலகத்தை ஆட்டிப்படைக்கும் கேள்வி இது.
இக் கேள்விக்கு விடை காணப் புகுந்த மெய்ஞ்ஞானிகள்,
அவ்வொழுங்கின் காரணத்தை 'இறை' என்றனர்.
விஞ்ஞானிகளோ அவ்வொழுங்கின் காரணத்தை 'இயற்கை' என்றனர்.
மெய்ஞானிகள் கண்ட 'இறை'
மனம், வாக்குக்கு அப்பாற்பட்டு அறிவாரய்ச்சியைக் கடந்து,
'ஒத்துக்கொள்ளப்படும்' ஒன்றாகவே அமைந்தது.
விஞ்ஞானிகள் கண்ட அவ் 'இயற்கையும்'
அதேபோல் கேள்விகளுக்கும், விளக்கங்களுக்கும் அப்பாற்பட்டு,
சிந்தனை கடந்து 'ஒத்துக்கொள்ளப்படும்' ஒன்றாகவே ஆயிற்று.
மொத்தத்தில்,
மெய்ஞ்ஞானிகளாலும், விஞ்ஞானிகளாலும்,
வேறு வேறு பெயரிட்டு அழைக்கப்பட்ட போதிலும்,
அவ்விருவர் பார்வையிலும்,
இயற்கை ஒழுங்கின் அடிப்படை அறிவு கடந்தே நின்றது.
காரணம் அறிவாராய்ச்சிக்கு உட்பட மறுத்தாலும்,
காரியமாகி காணப்படும் ஒழுங்கே,
இவ்வுலகின் நிலைத்தற் தன்மைக்கு அடிப்படையாம்.
அங்ஙனமாய், இவ்வுலகில் இயல்பாயமைந்து தொடரும் ஒழுங்கினையே,
ஒழுக்கம் என்றனர் நம் ஆன்றோர்.

💢  💢  💢


இவ்வண்ட இயக்கத்தில் பொருந்திய ஒழுக்கு,
இவ்வண்டத்திற் பொருந்தி இயங்கும்,
இவ்வுலகில் அமைந்த அத்தனை பொருட்களின் இயக்கத்திலும்...
இயல்பாய் அமைந்தது.
வௌ;வேறான இயல்புடைப் பொருட் தன்மையால்,
அவ்வவற்றிற்காம் ஒழுக்கும் வேறுபட்டன.
தனித்தனி வகுக்கப்பட்ட அவ்வொழுங்கே,
அவ்வப் பொருட்களுக்காம் ஒழுக்கமாம்.
அவ்வொழுக்கத்துக்கு உட்படும் வரை,
அப்பொருள் இவ்வண்டங்கள் நிலைக்குமாற்போல் இயல்பாய் நிலைத்தலும்,
அவ்வொழுக்கம் மாறுபடும் போது,
அதன் காரணமாகவே அப் பொருள் சிதைவுற்று அழிவடைவதும் கண்கூடு.

💢  💢  💢

இவ்வுலகப் பொருட்கள் அறிவுப்பொருள், அறிவில்பொருள் என இருவகைப்படும்.
அறிவற்ற சடப் பொருட்கள், இயற்கை ஒழுங்கினை மீறக் காரணமில்லை.
ஓரறிவிலிருந்து ஆறறிவு வரை விருத்தி பெற்ற உயிர்ப் பொருட்களுள்,
ஐந்து அறிவு வரை பெற்ற ஜீவராசிகள்,
மனம் எனும் சூக்குமக் கருவி வளர்ச்சியுறாமையால்,
தாமாய்ச் சிந்தித்து இயங்கும் தன்மையை பெரும்பாலும் பெறுவதில்லை,
ஆதலால் அவையும் அவ்வொழுங்கினை மீறுதல் இல்லையாம்.
மனம் எனும் சூக்குமக்கருவியின் இயக்கத்தை முழுமையாய்ப் பெற்று,
சிந்திக்கும் திறன் கொண்ட மனிதனே,
இயற்கையை அறிந்து ஒத்து ஒழுகும் தன்மையையும்,
மாறுபட்டு திரியும் இயல்பையும் பெறுகிறான்.

💢  💢  💢

சிந்தித்ததால் பெற்ற சீரிய தெளிவு ஒழுக்கமாக,
புலன் வயப்பட்ட ஈடுபாட்டால் அச்சிந்தனையில் ஏற்படும் ஐயமும், திரிபும்,
ஒழுங்கின்மையானது.
எனவே,
ஒழுக்கம், ஒழுக்கவீனம் எனும் இவையிரண்டும்,
மனித வர்க்கத்துக்கேயுரிய இயல்புகளாயின.
இதனால்,
தம் இயல்பால் தாமே உயர்தலும், தாழ்தலும் மனித வரலாறாயிற்று.
இவ் வரலாற்றை ஊன்றிக் கவனித்த நம் ஆன்றோர்கள்,
உயர்தல், தாழ்தல் ஆகியவற்றின் காரணம் ஆராய்ந்து,
உயர்வுக்குக் காரணமாகிய ஒழுக்கங்களையும்,
தாழ்வுக்குக் காரணமாகிய ஒழுக்கமீறல்களையும்,
தம் நுண்ணறிவால் கண்டு கொண்டனர்.
அவ்வொழுக்கங்களே மனித வாழ்வின் இயல்பு என அறிந்து,
அதனையே வாழ்வியல் அறமாக்கி விதித்து,
அதனைக் கடைப்பிடிக்க வலியுறுத்தினர்.
ஒழுக்கமீறல்கள் இயல்பு நிலையின் மாறுபட்டு,
அழிவுக்குக் காரணமாதல் அறிந்து,
அவற்றை மறம் என வகுத்துக் கண்டித்தனர்.
மொத்தத்தில் அவ்வான்றோர்களால்.
விதித்தன செய்தலும்,
விலக்கியன ஒழித்தலுமே,
இன்று நாம் பேணும் அறங்களாம்.

💢  💢  💢

அவ் அறவொழுங்கிற்கு உட்பட்டே,
நம் வாழ்வு அமைதல் வேண்டும்.
அங்ஙனம் அமையின்,
இறை,
இறையால் ஆக்கப்பட்ட இயற்கை,
இயற்கையின் ஒழுங்காய் அமைந்த அறம்,
என்ற வரிசையின் மறுதலைப் பெறுபேறாய்,
அறவாழ்வால் இயற்கையுணர்வும்,
இயற்கையுணர்வால் இறையின்பமும் எய்தப்படும்.
இயற்கையைப் பகுத்துணர்ந்து உயரவல்ல மனிதர்க்கு,
அதியுயர்ப் பேறாய் அமைவது இறைநிலை எய்தும் தகுதியே.
அவ்விறையின்பம் எய்த அறவாழ்வே அடிப்படையாம்

💢  💢  💢

இறையைப் போலவே அறமும்,
முற்றும் அறிய முடியாதது.
கடைப்பிடிப்பார் அறிவுத் தகுதிக்கேற்ப,
அறம் பலவாய் விளக்கமுறும்.
அதனால் தர்மம், அறம், நீதி எனும் பல சொற்களால்,
அறம் எனும் ஒரு பொருள் குறிக்கப்பட்டது.
பொதுவாய் நோக்க,
தர்மம், அறம், நீதி எனும் சொற்கள்
ஒரு பொருளவாய் கருதப்படினும்
சிறப்பு நோக்கில் அவற்றின் அர்த்தங்கள் வேறு வேறாம்.
தர்மம் என்பது,
இயற்கையின் நுண்மைகளை உட்கொண்ட,
உலகியல் கடந்த உண்மைநெறி.
நீதி என்பது,
அவ் உலகியல் கடந்த உண்மைநெறியில்,
அனைவரையும் நிறுத்தற்பொருட்டு,
அனைவர்க்குமாய் நூலால் வகுக்கப்;பட்ட உலகியற் சட்டம்.
தமிழர் நூல் வழக்கில்,
அறம் என்ற சொல் சந்தர்ப்பத்திற்கேற்ப
தர்மம், நீதி எனும் இரண்டினையும் குறிக்கப் பயன்படும்.

💢  💢  💢

தர்மம் உலக ஜீவராசிகள் அனைத்திற்குமானது.
நீதி மானுடருக்கு சிறப்புரித்தானது.
தர்மம் கடல்.
நீதி ஆறு.
இவ்வுவமையே,
தர்மம், நீதி என்பவற்றின் வேறுபாட்டிற்கான விளக்கமாம்.
ஆறு ஓடி கடலுள் கலக்கும்.
அதுபோலவே நீதி உயர்ந்து தர்மத்துள் சங்கமமாகும்.
ஆறு கடலுள் அடங்கும் கடலோ ஆற்றுள் அடங்கா
அங்ஙனமே,
நீதி தர்மத்துள் அடங்கும் தர்மமோ நீதியினுள் அடங்கா.
தர்மம் முதலறம்,
நீதி சார்பறம்,
சார்பறம் உலகியலின்கண் மானுடத்தை செம்மையுற நிலைநிறுத்தி,
இம்மை இன்பம் பயப்பிக்கும்.
முதலறம் உயிரை செம்மைப்படுத்தி,
மறுமைப்பேறு நல்குவதோடு வீட்டுநெறிக்கும் காரணமாகும்.
சார்பறத்தூடு சென்று முதலறத்தைத் தொடின்,
அம்முதலறமாகிய தர்மம் இறையின்பம் விளைவிக்குமாம்.

💢  💢  💢

அறமே பக்தியின் முதல் நிலை எனும் இக்கருத்து
தமிழர்தம் பண்பாட்டில் பதிவானது.
தமிழர்தம் வாழ்வியலறமான வள்ளுவம்,
இக்கருத்தை தெளிவுற வலியுறுத்தும்.

'ஒழுக்கத்து நீத்தார் பெருமை
 விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு'

எனும் நீத்தார் பெருமை அதிகாரக் குறளுக்கு,
உரைசெய்யும் பரிமேலழகர்,
இக்கருத்தைத் தெளிவு பட விளக்கம் செய்கிறார்.
'ஒழுக்கத்து நீத்தார்' எனும் தொடரினை,
ஒழுக்கத்தின்கண் நின்று நீத்தார் என விரித்து,
ஒழுக்கத்தின்கண் நின்று நீத்தலாவது யாதென,
நுட்பமாய் எடுத்துரைக்கின்றார்.
ஒழுக்கங்களை வழுவாது ஒழுக, அறம் வளரும்.
அறம் வளர பாவம் தேயும்.
பாவம் தேய அறியாமை நீங்கும்.
அறியாமை நீங்க,
நித்த அநித்தங்களின் வேறுபாட்டு உணர்வும்,
அழியும் இயல்புடைய இம்மை மறுமை இன்பங்களில் வெறுப்பும்,
பிறவித் துன்பங்களும் தோன்றும்.
அவை தோன்ற,
வீட்டின்மேல் ஆசை உண்டாகும்.
அஃது உண்டாக,
பிறவிக்குக் காரணமாகிய பயனில் முயற்சிகள் எல்லாம் நீங்கி,
வீட்டுக்குக் காரணமாகிய யோக முயற்சி உண்டாகும்.
அஃது உண்டாக மெய்யுணர்வு பிறந்து,
புறப்பற்றாகிய எனது என்பதும்,
அகப்பற்றாகிய நான் என்பதும் விடும்.
அவ்விரண்டும் நீங்க வீடு எய்தப்படும்.
வீடே இறைநிலையாம்.
இதுவே ஒழுக்கத்தின்கண் நின்று நீத்தல் என்பதாகிய,
அறத்தை முதலாய்க் கொண்டு வீடடையும் வழியாம்.

💢  💢  💢

குறித்த ஓர் இடத்தைச்சார வாகனம் ஒன்றினுள் ஏறுபவன்,
அவ்வாகனத்துள் ஏறியபின்,
தான் செல்ல நினைத்த இடம்நோக்கி நடக்கத்தேவையில்லை.
அவன் ஏறிய வாகனமே அவன் நினைத்த இடத்திற்கு அவனைச் சேர்ப்பிக்கும்.
அதுபோல அறநெறியில் புகுந்தார் முக்திநெறி நோக்கித் தனித்தியங்கத் தேவையில்லை.
அவ்வறநெறியே அவர்தம்மைத் முக்திநெறியிற் சேர்ப்பிக்கும்.
மேற்குறளால் இக்கருத்தே வலியுறுத்தப்படுகிறது.

💢  💢  💢

இவ்வுண்மை உணர,
அறமே இயற்கையின் முதற்கூறு என்பதும்,
இயற்கையே இறையின் வடிவு என்பதும்,
அறத்தின் வழிநிற்க,
இயற்கையுணர்வெய்தி இறைநிலை அடையலாமென்பதும் தெளிவாகும்.
இவ்வுண்மை உணரப்படின்,
அறத்திற்கும் ஆண்டவனுக்குமான தொடர்பு தெளிவாகும்.
அறமே பக்திவாழ்வின் முதற்படி என்பதும் அறியப்படும்.

💢  💢  💢

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...