•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Friday, August 9, 2019

'நந்தி' -கம்பவாரிதி இ. ஜெயராஜ்-
லகை என்றும் உய்விப்பது நம் சைவசமயம்.
ஸ்தாபகர் இல்லாத பெருமை இதற்குரியது.
காலம் கடந்து நிற்கும் சைவத்தின் வீரியமே,
அதன் உண்மைத் தன்மைக்காம் சான்று.
காலாகாலமாய் இச்சமயத்தை,
வெல்லவும் கொல்லவுமாய்ப் பலர் முயன்றும்,
முடியாது தோற்றனர்.
இயற்கையுடன் பொருந்திய நம் சைவத்தை,
எவராலும் எதனாலும் விழுங்க முடியவில்லை.
எவ்விதப் பரபரப்புமின்றி,
சைவம் காலம் கடந்து நடைபோடுகிறது.
எதிர்க்க நினைத்த சமயங்களையும்,
அழிக்க நினைக்காமல்,
அவற்றின் மூலக் கருத்துகளையும் உள்வாங்கி,
காலம் கடந்து நின்றதால்,
அவற்றிற்கும் சிரஞ்சீவித் தன்மையை ஈந்தது நம் சைவம்.
இத்துணைப் பெருமைகளும் சைவத்தைச் சார,
அச்சமயத்தின் அடிப்படை அமைப்பே காரணமாம்.
அவ் அடிப்படை யாது?
இயற்கையை இறையின் வடிவாய் அறிந்ததால்,
அவ் இயற்கையுடன் பொருந்தி நடத்தலே,
வாழ்வின் உயர்வுக்காம் அடிப்படை என உணர்ந்தனர்,
நம் சைவ மூதாதையர்.
அவ் இயற்கையுடன் பொருந்தி நடத்தலையே,
அறம் என அவர்கள் வகுத்தனர்.
வாழ்வின் கூறுகள் அனைத்தையும் விளங்கி,
அவர்கள் வகுத்துத் தந்த அறம்,
இறைவனை நோக்கிய ஆன்மீகப் பாதையின்,
முதற்படியாம்.
இம் முதற்படி இயங்குபடியாய் (ஆழழஎiபெ ளுவநி) இருந்து,
தன்னில் ஏறிய எவரையும்,
இறைவனை நோக்கி இட்டுச் சென்றது.
இவ் அறப்படியில் ஏறுதல் ஒன்றே,
இறைவனை நோக்கிச் செல்லத் தலைப்படுவார்தம்
வேலையாம்.
அங்ஙனம் அவ் அறப்படியில் ஏறிவிடின்,
அதுவே அவரை அடுத்தடுத்த படிகளினூடு நகர்த்தி,
இறைவனிடம் சேர்ப்பிக்கும்.
இவ் அற்புத வழியை நம் மூதாதையர் உணர்ந்திருந்தனர்.
இவ் ஒப்பற்ற கருத்தினை,
நம் தமிழ்ப் பாட்டன்,
பொய்யாமொழிப் புலவன் திருவள்ளுவனும்,
பதிவு செய்கிறான்.ஒழுக்கத்து நீத்தார் பெருமை 
விழுப்பத்து வேண்டும் பனுவற் துணிபு 

இந் நீத்தார் பெருமை அதிகாரக் குறளுக்கு,
உரை செய்யும் பரிமேலழகர்,
'ஒழுக்கத்து நீத்தார்' எனும் தொடருக்கு,
ஒழுக்கத்தின் கண் நின்று நீத்தார் எனப் பொருள் கொண்டு,
ஒழுக்கத்தின் கண் நின்று நீத்தலாவது எனத் தொடங்கி,
மேற்சொன்ன விடயத்தைப் பதிவு செய்கிறார்.
அறத்தின் வழி நிற்க ஒருவர்க்குப் பாவம் தேயும்.
பாவம் தேய அறியாமை நீங்கும்.
அறியாமை நீங்க,
நிலைத்தவை எவை, நிலையாதவை எவை என்பது பற்றிய,
வேறுபாடுகள் தோன்றும்.
அவ் வேறுபாடுகள் தோன்ற,
அழியும் இயல்புடைய,
இம்மை, மறுமை இன்பங்களில் வெறுப்புண்டாகும்.
அவ் வெறுப்பு உண்டாக,
பிறவித் துன்பம் அறியப்படும்.
அது அறியப்பட,
பிறவிக்குக் காரணமான பயனில் முயற்சிகள் நீங்கி,
வீட்டுக்குக் காரணமான யோக முயற்சி உண்டாகும்.
அது உண்டாக, மெய்யுணர்வு பிறக்கும்.
மெய்யுணர்வு பிறக்க,
நான், எனது எனும் அகங்கார, மமகாரங்கள் நீங்கும்.
அவை நீங்க, இறைவன் திருவடிப்பேறு கிட்டும்.
இங்ஙனமாய்,
தெய்வக் குறளுக்கு,
பரிமேலழகர் உரைக்கும் விரிவுரையை உணரின்,
அறத்தில் நிற்றலே,
இறைப்பேறு அடைதற்காம் வழி என்று உணரலாம்.இப்பேருண்மையை உணர்ந்த நம் சைவசமயம்,
இறைவனுக்கும் அறத்திற்குமான தொடர்பினை,
உலகத்தார் அறிந்து உய்தற் பொருட்டே,
'நந்தி' எனும் வடிவத்தை உருவாக்கியது.
சிவ வாகனமாய் நம் சைவம் உரைக்கும் நந்தி வடிவம்,
அறத்தின் குறியீடேயாம்.
நந்தியைத் தர்மத்தின் வடிவாய் உணர்ந்து நோக்க,
நம் சைவ நடைமுறை பலவற்றிற்கும்,
புதிய விளக்கங்களைப் பெறலாம்.
அவற்றுள் ஒரு சில காண்பாம்.நம் இறையாம் சிவன்,
இடப வாகனத்தூர்பவன் என்பது,
சைவம் தரும் செய்தி.
'வெள்ளை எருதேறி', 'விடையேறி' என்றெல்லாம்,
திருமுறைகள் இச்செய்தியை உறுதி செய்யும்.
இறைவன் நந்தியில் வருவான் என்பதற்கான,
உண்மைப் பொருள்,
இறைவன் தர்மத்தில் உறைவான் என்பதே.
தர்மம் இலா இடத்தில்,
இறைத் தரிசனம் கிட்டாதென்பதையே,
மேற்செய்தி உறுதி செய்கிறது.நந்திக்கும் லிங்கத்திற்கும் குறுக்கே செல்வது,
ஆலயத்தில் செய்யத் தகாத குற்றங்களில் ஒன்றாம்.
நல்லூர் ஆறுமுகநாவலரின் சைவ வினாவிடை,
இக்கருத்தை வலியுறுத்துகிறது.
இக்கருத்து ஆகம அடிப்படையிலானது.
நந்தியைத் தர்ம சொரூபமாய் விளங்க,
லிங்கத்திற்கும் நந்திக்கும் இடையே செல்வதான செயலை,
அறக் குறுக்கீடு செய்து இறைவழிபாடு இயற்றுதற்காம்
அடையாளமாய் உணரலாம்.
அங்ஙனம் அறம் மீறி இறைவழிபாடு செய்வார்க்கு,
இறையருள் கிட்டாது ஒழிவதோடு,
பாவமும் சேரும் என்பதையே,
'நந்திக்குக் குறுக்கே செல்வார் நரகம் செல்வார்.'
எனும் கருத்தினால் நம் மூதாதையர் வலியுறுத்தினர்.பிரதோஷ விரத காலங்களில்,
நந்திதேவரின் கொம்புகளினூடே சிவனை வழிபடுதல்,
விரத விதியாம்.
இக்கருத்தும்,
நந்தியை அறவடிவாய்க் கொண்டு உணரப்பட வேண்டியதே.
நந்தியின் கொம்புகளினூடு சிவனை வழிபடுவதென்பது,
தர்ம எல்லையின் உள் நின்று,
இறையை வழிபடுதலை உணர்த்தும் காரியமேயாம்.சிவன் ஏறுகிற நந்தி வாகனம்,
வெள்ளை நிறமுடையது என்பது வழக்கு.
வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறி
வெள்ளை நிறம் தூய்மையை உணர்த்துவது.
அறமும் தூய்மையின் வடிவமேயாம்.
ஆதலால் நந்தியின் வெள்ளை நிறம் குறிப்பது,
அறத் தூய்மையையே என்று அறிக.கயிலையின் முதற்கோபுர வாயிலில்,
நந்தி தேவர் பொற்பிரம்புடன் காவல் செய்து நின்று,
கயிலாயத்தில் சிவனை வழிபட வருகின்ற தேவர்களை,
ஒழுங்கு செய்து உள் அனுப்புவார் என்பது,
புராணச் செய்தி.

நெற்றியிற் கண்ணர் நாற் பெருந்தோளர் 
நீறணி மேனி அநேகர்
பெற்றம் மேற்கொண்ட தம்பிரான் அடியார் 
பிஞ்ஞகன் நன்னருள் பெறுவார்
மற்றவர்க்கெல்லாம் தலைமையாம் பணியும் 
மலர்கையில் சுரிகையும் பிரம்பும்
கற்றைவார் சடையான் அருளினால் பெற்றான் 
காப்பதற்(கு) கைலைமால் வரைதான்.

என்று இச்செய்தியைப் பெரியபுராணம் உறுதி செய்யும்.
நந்தியின் அருள் பெறாதவர் கயிலையுள் சென்று,
இறை தரிசனம் பெறல் இயலாதாம்.
இங்கும் நந்தியைத் தர்மமாய்த் தரிசிக்க,
தர்ம அங்கீகாரம் பெறாதார்
கயிலைக்காட்சி பெறார் எனும் பேருண்மை வெளிப்படும்.திருநாளைப்போவார் என்றழைக்கப்படும் நந்தனார்,
தன் குலம் காரணமாய் ஆலயத்துள் செல்ல அஞ்சி,
திருப்புன்கூர் எனும் ஆலயத்தில்,
வெளியே நின்று இறைவனை வழிபட,
இறைவனைக் காணா வண்ணம்,
நந்தி மறைத்ததாகவும்,
நந்தனார் உருகி வேண்ட,
நந்தி விலகி,
நந்தனார்க்குச் சிவக்காட்சி கிடைத்ததாகவும்,
புராணம் உரைக்கும்.
சீர் ஏறும் இசைபாடித் திருத்தொண்டர் திருவாயில்
நேரே கும்பிடவேண்டும் என நினைந்தார்க்கது நேர்வார்
கார் ஏறும் எயிற்புன்கூர்க் கண்ணுதலார் திருமுன்பு
போர்ஏற்றை விலங்கஅருள் புரிந்தருளிப் புலப்படுத்தார்.
இப்புராணச் செய்தியிலும்,
நந்தியை அறமாய் உணர்த்தும் குறிப்புண்டு.
தன் குலத்தொழிலாகிய புலைத் தொழிலால்,
அறம் மாறுபட்டு நின்ற நந்தனார்க்கு,
முதலில்,
சிவதரிசனம் கிடைக்காமல்,
அறத்தடை நிகழ்ந்தது.
தன்னையறியாது தானிழைத்த தவறுணர்ந்து,
அன்பு மிகுதியால் அவர் வருந்தி வேண்ட,
தடை செய்த தர்மம் விலகி,
அவர்க்குச் சிவதரிசனம் கிடைத்ததனையே,
மேற் புராணச்செய்தி குறிப்பதாய்க் கொள்ளல் வேண்டும்.மற்றொரு பேருண்மையை நாம் அறிதல் அவசியம்.
உண்மையில் நந்தி என்பது,
சிவனுக்குரிய நாமமேயாம்.
'நந்தி நாமம் நமச்சிவாய' எனும் தேவாரத் தொடராலும்,
'நங்கள் நாதனாம் நந்தி' எனும் திருமந்திரத் தொடராலும்,
இவ்வுண்மையை அறிகிறோம்.
இச் செய்தியால் நந்தியும் சிவனும் ஒருவரே என்பதும்,
சிவரூபம், தர்மரூபமே என்பதும் தெரிய வரும்.
அது நோக்கியே,
அன்னை காரைக்காலம்மையார் சிவனாரை,
'அறவா!' என்றழைத்தனர்.

இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகிறார் 
பிறவாமைவேண்டும் மீண்டும்பிறப்புண்டேல் உனைஎன்றும்
மறவாமை வேண்டும் நான் மகிழ்ந்து பாடி 
அறவா! நீஆடும்போது நின்அடியின் கீழிருக்க என்றார்.சக்தி சிவத்தினின்று வேறுபட்டதாய் உரைக்கப்படினும்,
அது எங்ஙனம் சிவனில் பிரிவில்லாததோ,
அங்ஙனமே நந்தியும் சிவனில் பிரிவில்லாததாம்.
சக்தி சிவத்தின் ஆற்றல்.
நந்தி சிவத்தின் இயல்பு.
ஆற்றலும் இயல்பும்,
குறித்த நேரங்களில்,
ஒருவரிடம் வெளிப்பட்டுத் தோன்றும்.
மற்றைய நேரங்களில்,
அவை அவருள் உள்ளடங்கியிருக்கும்.
அங்ஙனமே,
ஆற்றலும், இயல்புமாய் இருக்கும் சக்தியும், நந்தியும்,
சிவத்தில்,
வெளிப்பட்டும் உட்பொதிந்தும் இருத்தல் இயல்பாம்.
சக்தியைச் சிவம் தன்னுட் பொதித்து இருக்கும் நிலையை,
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று, அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் எனும்,
புறநானூற்றுக் கடவுள் வாழ்த்துப் பேசும்.அங்ஙனமே நந்தியையும் இறைவன் தன்னுள் அடக்குவான்.
இக்கருத்தைப் பெரியபுராணத்தின்,
இளையான்குடி மாறநாயனார் வரலாற்றிற் காணலாம்.
அடியார்க்கு விருந்திட்டு வறுமைப்பதம் எய்திய,
இளையான்குடி மாறநாயனார் வீட்டுக்கு,
சிவனார் நள்ளிரவில் விருந்தாய் வருகிறார்.
அச்செய்தியை உரைக்கும் சேக்கிழார்,
திருமாலும் பிரமனும், பன்றியும் அன்னமுமாய்,
தேடியும் அறிய முடியாத சிவனார்,
ஊர்கின்ற நந்தியுமின்றி உமையுமின்றி,
தவ வேடத்தோடு வந்தார் என்கிறார்.

மற்று அவர் செயல் இன்ன தன்மையதாக 
மால், அயன் ஆன அக்
கொற்ற ஏனமும் அன்னமும் தெரியாத
கொள்கையர் ஆயினார்
பெற்றம் ஊர்வதுமின்றி நீடிய
பேதையாள் உடன் இன்றி ஓர்
நற்றவத் தவவேடமே கொடு
ஞாலம் உய்திட நண்ணினார்.

மேற்பாடலுக்கு உரை செய்த அறிஞர் பலரும்,
நந்தியும் உமையும் இன்றி இறைவன் வருதல்,
சாத்தியமின்றாம் ஆதலால்,
அவற்றை தன் உட்பொதித்து,
இறைவன் எழுந்தருளினார் என்றே உரை செய்தனர்.
இதன் மூலம் நந்தியும், சக்தியும்,
சிவனிற் பிரிவின்றி இருக்கும் உண்மையை
உறுதிபட அறிந்து கொள்கிறோம்.மேற்கூறிய உண்மைகளால்,
நந்தி வடிவம் தர்மக் குறியீடு என்பதும்,
நந்தியின் அருளின்றி,
இறைவனை அடைய முடியாதென்பதும்,
நந்தியே இறை இயல்பாம் என்பதும்,
அதனால், நந்தியும் சிவமும் ஒன்றே என்பதும் தெரியவரும்.
இத்துணைப் பெருமைகள் உடைய நந்தியே,
சைவத்தின் அடையாளமாய்,
சிவத்தின் அடையாளமாய்,
தர்மத்தின் அடையாளமாய்,
நம் சைவக்கொடியில் பொறிக்கப்படுகிறது.நந்தியே சைவத்தின் கொடிச் சின்னமாம்.
இக் கருத்தை ஒருசிலர் ஐயுறுவர்.
அவர் தமக்காய்,
மேற்செய்திக்கான தக்க மேற்கோள் காட்டுதல்,
அவசியம்.
அது காண்பாம்.புறநானூற்றுக் கடவுள் வாழ்த்தாய் அமைந்த,
பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றிய சங்கப் பாடல்,
நந்தியே சிவனின் கொடிச் சின்னம் என்பதை,
உறுதி செய்கிறது.
சங்கநூல்களுள் அமைந்த செய்தியாதலால்,
இச்செய்தியின் தொன்மையை நாம் உணர்கிறோம்.அப்பாடலில் சிவனைப் புலவர் வர்ணிக்கிறார்.
அனைத்து உயிர்களுக்கும் காவலாகும்,
சிவனின் அருளுடைமையைக் காட்ட,
தவமுதிர்ச்சியின் சான்றாய்த் திகழும்,
தாழ்சடையும்,
நீர் வற்றாக் கமண்டலமும் அவனிடத்து உள்ளன.
அச்சிவன்,
தன் தலையிலும், மார்பிலும்,
கொன்றைப் பூவினை அணிந்தவன்.
தனது வாகனமாகவும், கொடியாகவும்,
தூய ஆன் ஏற்றைக் கொண்டிருப்பான்.
அவன் கழுத்தை நச்சுக்கறை அழகு செய்கிறது. .
வேதம் ஓதும் அந்தணரால் அது புகழப்படுகிறது.
பெண்ணுருவைத் தனது ஒரு பாகத்திலே,
வெளிக்காட்டியும் இருப்பான்.
அவளைத் தன்னுள் அடக்கி,
தனித்தும் அவன் விளங்குவான்.
அவனது நெற்றிக்கு அழகு தரும் பிறை,
பதினெண் தேவர்களாலும் போற்றப்படுகிறது என்பதாய்,
அப்பாடலின் பொருள் அமைகிறது.

கண்ணி கார் நறுங்கொன்றை, காமர்
வண்ண மார்பின் தாரும் கொன்றை
ஊர்தி வால் வெள்ளேறே, சிறந்த
சீர்கெழு கொடியும் அவ் ஏறு என்ப
கறைமிடறு அணியளும் அணிந்தன்று, அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே
பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று, அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்
பிறைநுதல் வண்ணம் ஆகின்று, அப்பிறை
பதினெண் கண்ணும் ஏத்தவும் படுமே
எல்லா உயிர்க்கும் ஏமமாகிய 
நீரறவு அறியாக் கரகத்துத், 
தாழ்சடை பொலிந்த அருந்தவத் தோற்கே.

மேற்பாடலில் வரும்,
ஊர்தி வால் வெள்ளேறே, சிறந்த
சீர்கெழு கொடியும் அவ் ஏறு என்ப எனும் அடிகளால்,
நந்தியே சிவனின் வாகனமும் கொடியும் ஆகிறது
எனும் உண்மை,
சித்தாந்தப்படுத்தப்படுகிறது.
நந்தி, சைவத்தின் கொடி என்பதற்கான அர்த்தம்,
தர்மமே சைவத்தின் அடிப்படை என்பதேயாம்.Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...