•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Sunday, September 15, 2019

"ஆறுமுகம் ஆன பொருள்" -2: -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-


யர்தர வகுப்பு முதலாம் ஆண்டில் நான் படித்தபோது,
எனக்கும் வித்துவான் ஆறுமுகத்திற்குமான சந்திப்பு,
ஒரு சண்டையில் தொடங்கியது.
முப்பது ஆண்டுகள் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் கற்பித்துவிட்டு,
அப்போதுதான் நான் கற்ற யாழ் இந்துக்கல்லூரிக்கு அவர் வந்திருந்தார்.
முப்பது ஆண்டுகள் கற்பித்த விசுவாசத்தால்,
ஸ்கந்தவரோதயாக் கல்லூரியே அவர் மனதில் பதிந்திருந்தது.
எங்கள் இந்துக்கல்லூரியின் ஆற்றல்கள்,
அவர் மனதிற்குப் பெரிதாய் இதந்தரவில்லை.
பேச்சாளனாய் நான் இந்துக்கல்லூரியில் பதிவாகியிருந்த நேரம் அது.
புதிதாய்ப் பல்லு முளைத்த பாலகன்,
எந்நேரமும் 'இறப்பர்' வளையத்தைக் கடிப்பதுபோல,
எனக்கு பேச்சுப்பித்துப் பிடித்திருந்த காலம் அது.
நான் என்னுடைய மற்றொரு ஆசிரியரான,
சிவராமலிங்க மாஸ்டரின் கைப்பிள்ளை.
அவரும், வித்துவான் ஆறுமுகமும் ஒரே ஊரால் உறவு பட்டவர்கள்.
ஒருநாள் அவர்கள் ஒன்றாயிருந்தபோது,
மாஸ்டரைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.
'இவன் பெரிய பேச்சாளன் கி.வா.ஜ. மாதிரிப்பேசுவான்'
மாஸ்டர் தனதன்பால் தகுதியை மீறி பெருமையாய் என்னை அறிமுகப்படுத்த,
வித்துவான் இகழ்ச்சி கொப்புளிக்க என்னைப் பார்த்தார்.
'அப்படியா?' கேட்டு நிறுத்தி, என் சடைத்தலையைப் பார்க்கிறார்.
'ஆளப்பாத்தா அப்படித் தெரியவில்லையே,' என்றவர்,
பின் மாஸ்டரைப் பார்த்து,
'என்னெட்ட ஸ்கந்தாவில ஒருவன் இருக்கிறான்.
அவன் காரைக்காலம்மையாரைப் பேசினால் கண்ணீர் வடிக்கலாம்.' என்றார்.
அவனைப் பாராட்டுகிறாரா? என்னை இகழ்கிறாரா? என்று தெரியாத பேச்சு.
ஏனோ, முதற் சந்திப்பிலேயே எனக்கு வித்துவானைப் பிடிக்காமற்போயிற்று.

❤ ❤ ❤


இரண்டாம் சந்திப்பு மேலும் பகை வளர்த்தது.
எங்கள் உயர்தர வகுப்பு மாணவர்களின் கலைவிழா.
என்னை, என் கல்லூரியில் பெரும் பேச்சாளனாய்ப் பதிவுசெய்த நிகழ்ச்சி அது.
மன்றத்தலைவர் வைகுந்தவாசன்,
என்னையும் நண்பன் ஸ்கந்தமூர்த்தியையும்,வழக்காடுமன்றம் பேசும்படி கேட்டான்.
யாரோடு வழக்காடுவது? கேள்வி பிறக்க,
அப்போது புதிதாய்க் கல்லூரிக்கு வந்திருந்த,
இளைஞர்களான ஒரு சில ஆசிரியர்களை வாதுக்கழைத்தாலென்ன?
நான் 'ஐடியா' கொடுத்தேன்.
புதுப்பல்லு சப்ப ஆசைப்பட்டது.
மாணவர்களோடு வழக்காட ஆசிரியர்கள் வருவார்களா? - ஆராய்ந்தோம்.
சிவராமலிங்கம் மாஸ்டர் சொன்னால் வரக்கூடும் - முடிவெடுத்தோம்.
அசட்டுத்தனமான ஆசையோடு அவரைக் காணச்சென்றோம்.

❤ ❤ ❤

நல்ல 'மூடில்' இருந்தார் சிவராமலிங்கம் மாஸ்டர்.
அவருக்கருகில் வித்துவானும், ஆசிரியர் தேவனும்.
இருவரும் யாழ் முழுவதும் புகழ்பெற்ற தமிழ் ஆசிரியர்கள்.
சற்றுப் பயத்தோடு சிவராமலிங்கம் மாஸ்டரிடம் எங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க,
நாம் முழுவதும் சொல்லமுன் அவர் உற்சாகமானார்.
''வெரிகுட்' செய்தாற்போச்சு.' என்றவர்,
'என்ன தேவன்? இவங்களோட வழக்காடுறியளே?'
எங்கள் நோக்கம் அறியாது,
எங்கள் அம்பின் குறியை, தேவனை நோக்கித் திருப்பினார் மாஸ்டர்.
''நோ ப்ரப்ளம்' செய்வம்.'
ஆலோசனையின்றி,
அடிக்குரலில் ஆங்கிலத்தனமாய் அங்கீகரித்தார் தேவன்.

❤ ❤ ❤

நாம் பதறிக் குறுக்கிடுமுன்,
வாத்தியார் பார்வை வித்துவானிடம் திரும்பியது.
'என்ன வித்துவான்? இவங்களோட வழக்காட நீங்கள் தயாரே?'
மாணவரோடு சமப்பட விருப்பம் இல்லாததை,
மரபிலூறிய வித்துவானின் முகம் சொல்லியது.
ஆனாலும்,
தேவன் அங்கீகரித்ததைத் தான் நிராகரித்தால் தவறாகிவிடுமோ? என்று,
'இந்தச் சின்னப் பயல்களுடனா? எனக்கு ஆட்சேபணையில்லை மோதலாமே'
விருப்பின்றி செந்தமிழிற் சம்மதம் தெரிவித்தார் வித்துவான்.
நாம் திகைத்தோம்.

❤ ❤ ❤

இளம் ஆசிரியர்களுடன் மோதலாம் என்றால்,
தமிழ் மலைகளைப் பிடித்து, தலையில் கட்டிவிட்டார் ஆசிரியர்.
அப்போதே 'டென்ஷன்' ஆனோம். ஆனாலும் உள்ளே ஒரு அனல்.
வித்துவான், 'எனக்கா பேசத்தெரியாது என்று சொன்னார்?
வரட்டும் ஒருகை பார்க்கலாம்.'
இளமையின் அறியாமை துடித்தது.
மோதுவது என்று முடிவு செய்தேன்.

❤ ❤ ❤

நிகழ்ச்சி அன்று,
பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும், மாணவர்களாலும்,
இந்துக் கல்லூரி குமாரசாமி மண்டபம் நிரம்பி வழிகிறது.
ஆசிரியர்களும், மாணவர்களும் மோதுவதால்,
வழக்காடுமன்றம் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
நடுவர் வித்துவான் க. ந. வேலன்.
நான் விரும்பும் ஆளுமைமிக்க பேச்சாளர் அவர்.
நிகழ்ச்சிக்காக மானிப்பாய் இந்துக்கல்லூரியில் இருந்து அழைக்கப்பட்டிருந்தார்,
மேடையில், இளைஞர்களான எங்களையும் மூத்த அவர்களையும் பார்த்ததுமே சிரித்தார்.
வித்துவானோடு அண்ணாமலையில் உடன் கற்றவர் அவர்.
அறிமுகத்திலேயே,
'ஒரு பக்கம் மலைகள், மறுபக்கம்.......' என நிறுத்தி,
கேள்வியாலேயே சபையைச் சிரிப்பூட்டினார்.

❤ ❤ ❤

சபையின் கனம் தேவனையும், வித்துவானையும் கொஞ்சம் ஆணவப்படுத்த,
எங்களைக் கிண்டலாய்ப் பார்த்தார்கள்.
பலியாடுகளைப் பார்ப்பதுபோல் எங்கள்மேல் சபையின் பார்வை,
'வாலிவதை நியாயமானதா?' இது வழக்கின் தலைப்பு.
அவர்கள் கைகளில் 'சிறியன சிந்தியாதான்' எனும் புத்தகம் எட்டிப்பார்த்தது.
அக்காலத்தில் மிகப்பிரபலமாய் இருந்த தமிழகஅறிஞர்,
எஸ். இராமகிருஷ்ணன் வாலிவதை பற்றி எழுதிய நூல் அது.
புத்தகத்தை அவர்கள் கையில் கண்டதும்,
அதை நம்பித்தான் அவர்கள் மேடையேறி இருக்கிறார்கள் என்பது, தெரிந்துபோயிற்று.
நான் உற்சாகமானேன்.

❤ ❤ ❤

காரணம் அப்புத்தகம் முழுவதும் அப்போது எனக்கு மனப்பாடம்.
வழக்குத் தொடங்கியது.
எஸ். இராமகிருஷ்ணனின் கருத்தை தங்கள் கருத்தாய், அவர்கள் பேசத்தொடங்க,
ஒவ்வொரு வசனத்திலும் குறுக்கிடத் தொடங்கினேன்.
அவர்கள் புத்தகம் பார்த்துத் தொடங்கிய பாடலை, நான் மனனமாய்ச் சொல்லி முடிக்க,
சபை ஆர்ப்பரித்தது.
அவர்கள் இருவரையும்,
ஒரு நிமிடத்திற்கு மேல் மேடையில் நிற்கவிடாமல், உட்காரவைத்தேன்.
அவர்கள் புகழில் பொறாமை கொண்டிருந்த ஆசிரியர்கள் சிலர்,
எழுந்துநின்று கைதட்டினார்கள்.
ஆசிரியர்களைப் பார்த்து மாணவர்களும்,
மாணவர்களைப் பார்த்து பெற்றோருமாய்,
மொத்தச்சபையும் எங்களுக்காய் ஆர்ப்பரித்தது.
முயல்கள் சற்றுத்தூங்க, ஆமைகள் வெற்றிக்கனியை எட்டின.
நடுவர் துணிந்து எமக்குத் தீர்ப்பளிக்க,
அவர்கள் இருவரது முகங்களும்  அக்கினிக் குண்டங்களாயின.
பகை அத்திவாரம் பலப்பட்டது.
வித்துவானைப் பழிவாங்கிய உணர்வில் எனக்குள் பரவசம்!

❤ ❤ ❤

அடுத்தநாள் கல்லூரிக்குள் நாங்கள்தான் 'ஹீரோ' க்கள்.
அதிபர் தலை தடவ,
ஆசிரியர்கள் பாராட்ட,
மாணவர்கள் கைகொடுக்க,
அன்று முழுவதும் எங்கள் கால்கள் ஆகாயத்தில் மிதந்தன.
மாலை சிவராமலிங்கம் மாஸ்டரிடமிருந்து அழைப்பு வந்தது. சந்தித்தேன்.
'திருக்கேதீஸ்வரம் 'ஹிண்டுக்ஹொலிச்' திருவிழாவில நீ பேசவேணும்.'
உத்தரவில், முதல்நாள்ப் பேச்சின் அங்கீகாரம் தெரிய, உள்மகிழ்ந்தேன்.
அருகில் வித்துவான் இருந்தார்.
'திருக்கேதீச்சரத்தில இவன் பேசுவதா?
இதென்ன இலக்கியமா? விளையாட, சமயமல்லவா பேசவேணும்?'
மாஸ்டரை முறைத்தார் வித்துவான்.
அவர் விழுப்புண் வேதனை, வார்த்தைகளாய் வெளிப்பட்டது.
'பேசுறன் சேர்' அவரை அலட்சியம் செய்து,
சிவராமலிங்கம் மாஸ்டருக்குப் பதில் சொன்னேன்.
வித்துவானின் முகம் நாவற்பழமாய்ச் சிவந்தது.

❤ ❤ ❤

திருக்கேதீஸ்வரம்.
பல கல்லூரி ஆசிரிய, மாணவர்களுக்குமுன் மேடையில் நான்.
வித்துவான் முன்வரிசையில் முறைத்தபடி உட்கார்ந்திருக்கிறார்.
நான் பேச,
இடையில்வரும் பாடல்களை, சங்கீத மாணவர்கள் பாடுவதாய்த்திட்டம்.
சங்கீத ஆசிரியர் மாணிக்கவாசகர், எனது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்.
அன்று என்னுள் சாத்வீகம் மிகுந்திருந்தது.
அதுவரை நண்பர்கள் இல்லாமலிருந்த நான்,
என் தனிமை போக்க நூலகத்தை நட்பாக்கியிருந்தேன்.
நூலகத்திலிருந்த சமயநூல்கள் முழுவதையும் படித்த,
ஒரே மாணவன் நானாய்த்தான் இருப்பேன்.
பாடல்கள் எல்லாம் அத்துப்படியாய் மனனமாகியிருந்தன.
கற்றவர்கள் நிறைந்த சபை. பேச்சு ஊற்றெடுத்தது.

❤ ❤ ❤

என் பேச்சின் சுருதி பாடவந்தவர்களின் சுருதியோடு மாறுபட,
மாணவர்கள் பாடமுடியாமல் நிறுத்திவிட்டார்கள்.
சங்கீத ஆசிரியர் என்னோடு இசையால் இணைய முயன்றார்.
கருத்துக்கள் வெள்ளமாய்ப் பொங்கின.
ஒரு மாணவன் தொடமுடியாத பல கருத்துச் சிகரங்களை அதிசயமாய்த் தொட்டேன்.
என்னை வெறுக்கும் வித்துவானின் முன்,
இப்படிப் பேசமுடிகிறதே என என்னுள் மகிழ்ச்சி.
பொறாமையில் வித்துவானின் முகம் வேகும் என்று நினைத்து,
அவரைப் பார்த்த நான் அதிர்ந்தேன்.

❤ ❤ ❤

கண்களில் கண்ணீர்சோர, ஒரு பெண்போல விம்மி அழுதபடி,
என்பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தார் வித்துவான்.
திடீரென எழுந்து மேடையேறினார்.
'தம்பி! கொஞ்சம் தள்ளி உட்காரு' உத்தரவிட்டு என்னருகில் அமர்ந்தார்.
ஒரு பக்கம் இயல் வித்துவான், மறுபக்கம் இசை வித்துவான்.
இசை வித்துவானைவிட, எங்கள் இயல் வித்துவான் உருகி உருகிப்பாடினார்.
இடையிடையே விம்மல், இடையிடையே வெடிக்கும் அழுகை.
நான் குன்றிப்போனேன்.

❤ ❤ ❤

இவரையா போட்டியாய் நினைத்தேன்.
தமிழ் கேட்டதும் தன் பகையெல்லாம் மறந்து,
கனிந்துருகும் இம் மாமனிதன் எங்கே? நான் எங்கே?
பக்தியில் கனிந்து, பாலனாய் பக்கத்திருந்து பாடும் இவரெங்கே?
பழிவாங்க நினைத்த நானெங்கே?
தேவாரம் கேட்டு திகைத்து அழும் அத்தெய்வ மனிதன் எங்கே?
பாட்டுரைக்கையிலும் பகைநினைந்த நானெங்கே?
அவர் அருகாமையில் என்னைத் தூசாய் உணர்ந்தேன்.

❤ ❤ ❤

நான்பேச அவர்பாட, அப்பர் சம்பந்தர் சந்திப்பாய், அன்றைய சந்திப்பு முடிந்தது.
சபை திகைத்திருந்து பார்க்க, சிவராமலிங்கம் மாஸ்டர் கண்ணீர் வடித்தார்.
பேச்சு முடிந்ததும், ஒலிபெருக்கியைப் பறித்துப் பேசத் தொடங்கினார் வித்துவான்.
'இது ஒரு மாணவனின் பேச்சல்ல.
என்தமிழ் மேல் சத்தியமாய்ச் சொல்கிறேன்.
இரண்டு மணித்தியாலம் பேசியிருக்கிறான்.
வாரியார், அண்ணாத்துரையைப் பார்த்துச் சொன்னதுபோலச் சொல்கிறேன்.
இவன் அறிஞன். இவன் அறிஞன். தம்பி! நீ அறிஞனடா!
நான் உனக்குப் பட்டம் தருகிறேன், நீ அறிஞனடா'
பித்துநிலை உற்றவர்போல் கூவினார்.
பின் மீண்டும் அழத்தொடங்கினார்.
அவர் கைகள் என் தலைதடவ,
நான் விதிர்விதிர்த்துப் போனேன்.
இதயம் உடைந்து என் கண்களிலும் கண்ணீர்த்தாரை.
கல்வி விதை, ஆணவத்தோல் கழற்றி அன்புத்துளிர் விட்டது.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க,
அன்றுதான் முதன் முதலில், தமிழை அன்பாய்த் தரிசித்தேன்.
வித்துவான் என் இதயத்துள் நுழைந்தார்.

❤ ❤ ❤

ஓரளவு வித்துவானை உணர்ந்திருப்பீர்கள்.
அவரது அறிவு வடிவம் உங்கள் அகம் புகுந்திருக்கும்,
அறிவு அன்பாய்ப் பரிணமிக்க,
சிலவேளைகளில் குழந்தையாகவும் குதூகலிப்பார்.
'மூட்' வந்து விட்டால் கேட்கவே வேண்டாம்.
இளைஞனாய் நின்று எங்களோடு போட்டி போடுவார்.
அவர் ஆனந்தப்பரவசத்தை உணர்த்த, ஒரு சம்பவம் சொல்கிறேன்.

❤ ❤ ❤
                                                                                          (அடுத்தவாரமும் வித்துவான் வருவார்)

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...