•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Friday, September 20, 2019

'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு' - பகுதி 3: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-


(சென்றவாரம்)
தொன்னையில் இருந்த ஊனை அன்னை போல் ஊட்டினார். இன்னமும் இறைவர்க்கு இறைச்சி வேண்டும் என நினைந்தார். திண்ணனாரின் பெருங் காதல் கண்டு விண்ணிலே நின்ற சூரியன், நீண்ட தன் கதிர்க் கரங்கள் குவித்து வணங்கினான். இரவு வந்தது.

ண்டான இருள் கண்டு திண்ணனார் உள்ளம் துடித்தது.
இறைவர்க்கு இரவில் விலங்குகள், இன்னல்; செய்யுமோ? எனும்,
எண்ணத்தால் துடித்தார் திண்ணனார்.
நெஞ்சில் அன்பும், கையில் அம்புமாய்,
மலையென நிமிர்ந்து நின்று,
இமைப்பொழுதும் நீங்காது இறையை நேர்படப் பார்த்து,
மூவுலகும் காப்பானை முறைதவறாது காத்து நின்றார்.

     


காலை விடிந்தது.
உருத்தெரியா விடியலே வேட்டைக்கு உகந்த நேரமென்று,
கருத்தறிந்து மீண்டும் புறப்பட்டார் திண்ணனார்.
அவர் வேட்டை தொடங்க வெளிச்சம் வந்தது.
விலங்குகளைக் காட்டித் துணை புரிந்தான் கதிரவன்.

      

திண்ணனார் அகன்று போன அந்த விடியலில்,
ஆகமத்தில் வகுத்தபடி அரும்பூசை செய்வதற்காய்,
பூசனைக்கு ஏற்ற நல்ல பூவும், நீரும் சுமந்து,
மலை மருந்தாம் சிவனவனை மனத்தினிலே உள்ளிருத்தி,
சிவகோச்சரியார் எனும் சீரிய அந்தணர் - வந்தனர்.
வகை வகையாய்  அங்கு சிதறிக் கிடந்த,
வெந்த இறைச்சியும், எலும்பும் கண்டு அகல மிதித்தோடி,
இச் செயல் செய்தவர் யார்? என்று ஏங்கி,
வருந்தி உள் அழிந்தார் சிவகோச்சரியார்.

      

'குற்றம் செய்ய அஞ்சாத வேடுவரே இக் கொடுமை புரிந்திருப்பர்.
தேவ தேவனே! உன் திருமுன் இத்தகு செயலா?' என,
பதறி அழுது பரிதவித்தார் அந்தணர்.
பின்னர் மனம் தேறி மெல்ல எழுந்தார்.
பரமன் திருமுடியில் பதிந்திருந்த செருப்படியையும்,
பரவிக் கிடந்த தசைகளையும் எலும்புகளையும்,
விரைந்து நீக்கினார். திரு அலகிட்டார்.
பின்னர் தெளிந்த பொன்முகலி ஆற்றில் நீராடி வந்து,
அன்போடு அந்த இடத்தை அருமறைகளால் தூய்மை செய்து,
மந்திரங்கள் பல சொல்லி மாண்பாகத் தன் பூசை,
முறைமையின் முடித்தார். முதல்வன் கழல் பிடித்தார்.

    ⺢  

பூசை முடித்து புனித அந்தணரும் அப்பால் போக,
வெந்த இறைச்சியும், விருப்போடு வாய் நிறைய,
மொந்த நீரதுவும் முடி மீது பூவுமாய்,
அன்போடு திண்ணனும் அங்கு வந்தான்.
இங்கு வந்தவர் யாவர்? என வியந்தான்.
அந்தணப் பூசையின் அடையாளங்கள்,
அவனுக்கு இங்கிதமாய்ப் படவில்லை.
மெல்ல அவையெல்லாம் நீக்கிப் பின் அன்பாலே,
முந்தை முறையினிலே முதல்வன் திரு முன்பு,
தன்னுடைய பூசையினைத் தனித்துவமாய் நிகழ்த்தினான்.

      

நாள் ஐந்தாய் இது நடக்க நலிந்தார் அவ் அந்தணரும்,
'யார் இதனைச் செய்கின்றார்? ஐயனே! அவன் தன்னை,
நான் காணேன்!' என்றேதான்  நலிவுற்று! உளமுருகி,
'பாவச்செயல் புரியும் பாதகனை மனம் திருத்தி,
உன் அருளால் அவன் தீமை ஓயும்படி செய்து,
தேற்றிடவே வேண்டுமென' தேம்பி முறையிட்டார்.

      

கவன்று துயின்ற அவ் அந்தணர்தம் கனவில்,
வந்தான் இறைவன். வாய் திறந்து பேசுகிறான்.
'பிழையென்று நீ கருதும் பேதமையாம் பூசையினை,
செய்வோன் புனிதன், சேர் அன்பில் கடலனையான்.
அவன் தன்னை,
வலிய வேடன் என நினைந்து வருந்தாதே!
அன்பில் நிறைந்த அவ்வேடன் செயல்களினை,
நான் உரைக்கக் கேட்பாய் நலிவை அகற்றிடுவாய்.'
என்று இயம்பத் தொடங்கினான் இறைவன்.

அன்றிரவு கனவின்கண் அருள்முனிவர் தம்பாலே
மின் திகழும் சடைமலிவு வேதியர் தாம் எழுந்தருளி
வன்திறல் வேடுவன் என்று மற்று அவனை நீ நினையேல்
நன்றவன்தன் செயல் தன்னை நாம் உரைப்பக் கேள்! என்று

      

'அன்பே அவ்வேடுவனின் வடிவாம்.
அவன் அறிவோ எனை மட்டுமே அறியும் அறிவாம்.
அவன் செயல்கள் அத்தனையுமே எனக்கு இனியவாம்.
அவனுடைய உயர் நிலையை அந்தணனே அறிவாய் நீ'
என்றுரைத்து ஐயனுமே இன்னும் தொடர்கின்றார்.

அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமைஅறியும் அறிவென்றும்
அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாம் என்றும்
அவனுடைய நிலை இவ்வா(று) அறி நீ என்(று) அருள்செய்வார்.

      

'மலைதன்னில் வந்து அந்த மனக்கினிய வேடனுமே,
அன்போடு மனமுருகி ஆசையுடன் பூசனைக்காய்,
செருப்படியால்  என் தலைமேல் சேர்ந்திருந்த மலர்களையும்,
தள்ளுவது முருகனவன் தளிர் அடிகள் படுமாப்போல்,
என்னுடைய மனமதனில் இன்பமதைத் தருகிறது'
என்றுரைத்த சிவனாரும் இனிமையுடன் தொடர்கின்றார்.

பொருப்பினில் வந்து அவன் செய்யும் பூசனைக்கு முன்பு என்மேல்
அருப்புறு மென் மலர் முன்னை அவை நீக்கும் ஆதரவால்
விருப்புறும் அன்பெனும் வெள்ளக்கால் பெருக்கிற்(று) என வீழ்ந்த
செருப்படி அவ் இளம்பருவச் சேயடியிற் சிறப்புடைத்தால்.

      

'அன்புருவாம் அவன்; முகத்தில் ஆசையுடன் அவன் அமைத்த,
வாய்க்கலசம் தனிலிருந்து வளம் பெருகும் எச்சில் நீர், 
புண்ணியமாம் நதிகள் தரும் புனிதமதைத் தருகிறது.'
அன்பே சிவமான ஆண்டவனும் தொடர்கின்றார்.

உருகிய அன்பு ஒழிவின்றி நிறைந்த அவன் உருவென்னும்
பெருகிய கொள்கல முகத்தில் பிறங்கி இனிது ஒழுகுதலால்
ஒரு முனிவன் செவி உமிழும் உயர் கங்கை முதல் தீர்த்தப்
பொரு புனலின் எனக்கு அவன்தன் வாய் உமிழும் புனல் புனிதம்.

      

'மால் அயனும் தேவர்களும் மாண்போடு இடுகின்ற,
மலர்களெலாம் அவ்வேடன் மனத்தன்பால் தன் தலையில்,
சூடித் தருகின்ற சின்மலருக்கு இணையாமோ?'
என்றந்தக் கண்ணுதலார் இன்னும் உரைக்கின்றார்.

இம்மலை வந்து எனை அடைந்த கானவன் தன் இயல்பாலே
மெய், மலரும் அன்பு மேல் விரிந்தன போல் விழுதலால்
செம் மலர் மேல் அயனொடு, மால் முதல்தேவர் வந்து புனை
எம் மலரும் அவன் தலையால் இடு மலர் போல் எனக்கு ஒவ்வா.

      

'தன் அன்பால் வாயிட்டு அதக்கிச் சுவை பார்த்து,
அவ்வேடன் தருகின்ற அருமைமிகு மாமிசமும்,
வேள்வி செய்யும் அந்தணர்கள் விரும்பித் தருகின்ற,
அவி உணவாய் எந்தனுக்கு ஆசை தருகிறது.'
புவியாளும் சிவனாரும் புகன்றேதான் நிற்கின்றார்.

வெய்ய கனல் பதம் கொள்ள வெந்துளதோ? எனும் அன்பால்
நையும் மனத்து இனிமையினில் நையம் மிக மென்றிடலால்
செய்யும் மறை வேள்வியோர் முன்பு தரும் திருந்(து)அவியில்
எய்யும் வரிச் சிலையவன் தான் இட்ட ஊன் எனக்(கு)இனிய.
(நையம்-நேயம்)

      

'எனை அன்றி வேறு எவர் தனையும் அறியாது,
அகத்தோடு முகம் மலர அவ்வேடன் அருகிருந்து,
கூறுகிற வார்த்தைகள் அத்தனையும்,
நிலைத்த வேதங்கள்,
பெரிய முனிவர்கள் மகிழ்ந்து உரைக்கின்ற மந்திரங்கள்,
தோத்திரங்கள் ஆகிய யாவற்றினும்,
எனக்கு சிறந்ததாகும்' என்கின்றார் சிவனார்.

மன்பெரு மா மறை மொழிகள் மாமுனிவர் மகிழ்ந்து உரைக்கும்
இன்ப மொழித் தோத்திரங்கள் மந்திரங்கள் யாவையினும்
முன்பு இருந்து மற்(று) அவன் தன் முகம்மலர அகம்நெகிழ
அன்பில் நினைந்(து) எனை அல்லால் அறிவுறா மொழிநல்ல.

      

'நாளை அங்கு வந்து மறைந்திருப்பாயானால்,
அவ் வேடனுடைய  அன்புச் செயல்களை உனக்குக் காட்டுவேன்.
அப்போது அவன் அன்பின் அதிசயத்தை நீ காண்பாய்.
உன் மனக்கவலையை நீக்குவாயாக!' என்று,
சிவகோச்சரியார்க்கு அருளி,
கங்கையைச் சடையில் சூடிய சிவனார்,
அவர் கனவினின்றும் நீங்கினார்.

உனக்(கு) அவன்தன் செயல் காட்ட நாளை நீ ஒளிந்திருந்தால்
எனக்(கு) அவன்தன் பரிவு இருக்கும் பரிசெல்லாம் காண்கின்றாய்
மனக்கவலை ஒழி! என்று மறைமுனிவர்க்கு அருள்செய்து
புனல் சடிலத் திரு முடியார் எழுந்(து) அருளிப் போயினார்.
(சடிலம்-சடை)

      

மறுநாள் காளத்தியின் உச்சியில்,
இறைவன் ஆணைப்படி சிவகோச்சரியார் மறைந்து நிற்க,
விளையாட நினைந்த இறைவனார்,
இலிங்கத்தின் ஓர் கண்ணிலிருந்து உதிரத்தினைப் பாய வைக்கிறார்.
அன்பு மீதூர உணவு கொண்டு வந்த திண்ணனார்,
அக் காட்சியைத் தூரத்திலேயே கண்டு,
பால்நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து, பதறி,
ஓடி வருகிறார். மனம் வாடி வருகிறார்.

      

வந்தவர், இறைவன் கண்ணில் வடியும் குருதியினைக் கண்டார்.
வாய் நீர் சிதற, கையினின்று ஊனும் வில்லும் வீழ,
தன் உச்சிக் குடுமியிலிருந்த பூக்கள் சோர,
புழுவாய்த் துடித்தார். மெழுகாய்க் கரைந்தார்.
பைந்தழைகளால் கட்டப்பட்ட மாலையை அணிந்தவரான திண்ணனார்,
வெந்து மயங்கி நிலத்தில் வீழ்ந்தார்.

வந்தவர் குருதி கண்டார், மயங்கினார், வாயில் நன் நீர் 
சிந்திடக் கையில் ஊனும், சிலையுடன் சிதறி வீழக்
கொந்தலர் பள்ளித் தாமம் குஞ்சி நின்று அலைந்து சோரப்
பைந்தழை அலங்கர் மார்பர் நிலத்திடைப் பதைத்து வீழ்ந்தார். 

      

இவ்விடத்தில் நமக்கு ஓர் ஐயம்.
காளத்தியானைக் கண்டதும் அன்பால் கட்டுண்டு போனவன் திண்ணன்.
ஐயனுக்கு ஆளான பின்;,
அவன், தன்னை மறந்தான்.
இறைவனை அன்றி ஏதும் நினைந்திலன்.
அன்பின் வடிவாய் நின்ற அவன்
கழுத்தில் மாலையோடு வந்ததாய்,
இப்பாடலில் உரைக்கிறார் தெய்வப் புலவர் சேக்கிழார்.
எல்லாம் இறைவர்க்கே என்றிருந்த திண்ணன்.
தனக்கென மாலை கட்டித் தரித்திருப்பானா?
நிச்சயம் அதைச் செய்திரான்!
அங்ஙனமேல் அவன் கழுத்தில் மாலை வந்தது எங்ஙனம்?
உணர்வுப் பிரதிபலிப்பு துளியுமில்லாக் கல்லின் மேல்; காதல் கொண்டு,
அதன் துன்பம் கண்டு துடிதுடிக்கும் திண்ணனின்,
ஒப்பற்ற அன்பு கண்டு சேக்கிழார் உள்ளம் மகிழ்கிறது.
அத்தகு அன்பனை மரியாதை செய்ய நினைகிறார் சேக்கிழார்.
இல்லாத மாலையைத் தன் தமிழால் இட்டு அவனை ஏற்றம் செய்கிறார்.
இஃதே உண்மையாம்!

    ⺢  

மயக்கம் தெளிந்து எழுந்த திண்ணன்,
ஓடிச் சென்று வழியும் குருதியைத் தொடர்ந்து துடைக்கிறான்.
இறையருளால் குருதி நில்லாமல் ஆறெனப் பெருகுகிறது.
யாது செய்வதென்று அறியாமல் திகைக்கிறான் அவன்.
இக் கொடுஞ் செயல் செய்தார் யாரென?, கொதிக்கிறான்.
தேடித் தேடித் திசைகள் எங்கும் பார்வை பதிக்கிறான்.
வேகத்தோடு வில்லை எடுக்கிறான்.
அம்பினை அதில் தொடுக்கிறான்.
இம் மலையில் எனக்கு எதிரிகள் உளரோ? என,
மனதுள் கேள்வி தொடுக்கிறான்.
விலங்கின் வேலையோ என விதிர்க்கிறான்.
பின் மலையெலாம் தேடி நடக்கிறான்.
நிறைவில் அவ் எண்ணம் விடுக்கிறான்.

விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர் குருதி வீழ்வ(து)
ஒழிந்திடக் காணார், செய்வதறிந்திலர் உயிர்த்து மீள
அழிந்து போய் வீழ்ந்தார். தேறி யாரிது செய்தார்? என்னா 
எழுந்தனர் திசைகள் எங்கும் பார்த்தனர் எடுத்தார் வில்லும்.

      

இறைவன் திருவருள் சிவகோச்சரியாரை,
திண்ணனார் கண்ணினின்று மறைத்தது போலும்,
அவன் கண்ணில் பட்டிருந்தால், அவர் பட்டிருப்பார்.
                                                                                                                                (தொடரும்)

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...