•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Saturday, September 14, 2019

"நீதித்தராசில் கூட்டமைப்பு" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-


யர் ஈழத்தமிழினத்தின் ஒப்பற்ற தலைமைக்கு இன்று உரியவர்கள் யார்?
'மில்லியன் டொலர்' பெறுமதியான இக்கேள்விக்கு,
கடந்த தேர்தல்களில் தாம் பெற்ற பெரும்பான்மையை வைத்து,
அத்தலைமை நமக்கே உரியது என மார்தட்டி நிற்கின்றனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.
அவர்தம் கருத்தின் உண்மையை இனி வரப்போகும் ஒரு தேர்தல்தான் உறுதி செய்யப்போகிறது.
தம்முடைய குழப்பமான செயற்பாடுகளால்,
கட்சியையும் இனத்தையும் மெல்ல மெல்ல உடையவிட்ட காரணத்தால்,
இன்று பலருக்கும் கூட்டமைப்பின்மேல் ஓர் வெறுப்புப் பிறந்திருப்பது மறுக்கமுடியாத உண்மை.
அதனால்த்தான் கடைசியாய் நடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில்,
மாற்றணியினர், கூட்டமைப்பின் பல்லை ஆட்டிப் பார்த்திருக்கின்றனர்.

✠✠✠✠


ஆனாலும் கூட்டமைப்பினருக்கு ஓர் அசைக்கமுடியாத அசட்டு நம்பிக்கை.
'றலி சைக்கிள்', 'சிங்கர் மெஷின்' என சில விடயங்களைப் பற்றிக் கொண்டு,
தமிழினம் அவற்றைக் கடைசிவரை கைவிடாது நிற்பது போல,
தமது கட்சிப்பெயரும் தமிழ் மக்களால் ஏலவே அங்கீகரிக்கப்பட்ட காரணத்தால்,
அப்பற்றுதலைத் தமிழினம் கைவிடாது எனும் நம்பிக்கையில்த்தான்,
கூட்டமைப்பு இயங்குமாப்போல் தெரிகிறது.

✠✠✠✠

தம் கட்சியை மக்கள் மயப்படுத்தும் முயற்சியில்,
கூட்டமைப்பினர் சிறிதளவேனும் முன்னேறியதாய்த் தெரியவில்லை.
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் தந்த எச்சரிக்கையைக் கூட,
அவர்கள் முழுதாய் உள்வாங்கினார்களா? என்பதும் கேள்விக்குரிய ஒன்றேயாம்.
மத்திய அரசின் ஆதரவும் உலக அரசுகளின் ஆதரவும் மட்டுமே,
தம்மைக் காப்பாற்றிவிடும் எனும் நம்பிக்கை அவர்களிடம் வலுப்பெற்றிருக்கிறது.
இன நன்மை என்பதைக் கடந்து கட்சி நன்மை, பதவி நன்மை என்பவற்றுள்,
இவர்கள் மூழ்கிவிட்டதாய்த் தெரிகிறது.
மக்கள் கருத்துக்கு மதிப்பளித்தல் எனும் விடயத்தில்,
இவர்கள் காட்டும் அலட்சியம் அராஜகமானது.
தமது பலத்தின் மீதான நம்பிக்கையைவிட,
எதிராளிகளின் பலயீனத்தின் மீதான நம்பிக்கையிலேயே,
காலத்தை ஓட்டப்பார்க்கிறார்கள் அவர்கள்.
அவர்களின் நம்பிக்கை வெற்றி தருமா? என்பதையும்,
இனி வரப்போகும் தேர்தல் ஒன்றுதான் நிச்சயிக்கப்போகிறது.

✠✠✠✠

உலகநாடுகளின் அங்கீகாரத்திற்கென,
தமக்குத் தேவைப்பட்ட ஜனநாயக முகத்திற்காக,
எந்தவித அடிப்படை ஒற்றுமையும் இல்லாத பலரையும் ஒன்றிணைத்து,
புலிகளால் அவசர அவசரமாக ஆக்கப்பட்ட 'கூட்டாஞ்சோறு'தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
ஈ.பி.டி.பி.யின் பாராளுமன்றப் பரவுதலைத் தடுப்பதற்காய்,
சம்பந்தாசம்பந்தம் இல்லாதவர்களை ஒன்றிணைத்து,
உருவாக்கிய கூட்டமைப்பு எனும் அக்'கூட்டாஞ்சோறு',
புலிகளின் ஆதரவு எனும் முகத்திரையை மட்டுமே வைத்து,
உப்புச் சப்பில்லாமலும் சிலகாலம் வெற்றிப்பாதையில் ஓடிற்று.

✠✠✠✠

கூட்டமைப்பு ஒரு தனிக்கட்சி அல்ல.
இலங்கையின் மிதவாதத் தமிழ்க்கட்சிகள் சிலவும்,
முன்னாள் போராளிக்குழுக்கள் சிலவும் என,
பலரின் இணைப்பில் உருவாகியதுதான் இக் கூட்டமைப்பு.
ஆரம்பத்தில் தமிழர்விடுதலைக் கூட்டணி(தமிழரசுக்கட்சி, தமிழ்காங்கிரஸ்கட்சி),
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்),
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) என்பவற்றை ஒன்றிணைத்தே,
இக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
2001 இல் தேர்தலுக்கு முகம் கொடுத்தபோது,
தமிழர்விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தையே,
இக்கட்சி தனது தேர்தல் சின்னமாய்ப் பயன்படுத்தியது.
அத்தேர்தலில் இவ் அமைப்பு 15 தொகுதிகளில் வெற்றி பெற்று வாகை சூடியது.
அதில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியும் போட்டியிட்டு,
36,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
அதன்பின்னர்தான் கூட்டமைப்பில் முதல் பிளவு ஏற்பட்டது.
இக்கூட்டமைப்பிலிருந்து ஆனந்தசங்கரி விலகிக்கொண்டார்.
புலிகளின் தலைமையை முழுமையாய் ஏற்றுக்கொள்வதில் வந்த முரண்பாடு என்றும்,
சம்பந்தனுக்கும் சங்கரியாருக்கும் இடையில் வந்த பதவிப்போட்டி என்றும்,
இவ்விலகுதலுக்குப் பல காரணங்கள் பேசப்பட்டன.

✠✠✠✠

அதன்பின் தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தை ஒருமுகமாக ஏற்று,
தேர்தலில் போட்டியிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு,
2004 ஆம் ஆண்டில் 22 இடங்களிலும்,
2010 ஆம் ஆண்டில் 14 இடங்களிலும்,
2015 ஆம் ஆண்டில் 16 இடங்களிலும் வெற்றிபெற்று,
தமிழ்மக்களின் ஏகத்தலைமை தாமே என அறிவித்துக்கொண்டது.

✠✠✠✠

தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த இரா.சம்பந்தன் இக்கூட்டமைப்பின் தலைவராகவும்,
மாவை சேனாதிராஜா செயலாளராகவும் இருக்க,
தமிழ்காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த,
அ.விநாயகமூர்த்தி பிரதித் தலைவராகப் பொறுப்பேற்க,
பிரதிச் செயலாளர்களாக முன்னாள் போராளிக் குழுக்களைச் சேர்ந்த,
செல்வம் அடைக்கலநாதனும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் ஆரம்பத்தில் செயற்பட்டனர்.

✠✠✠✠

புலிகள் 'தண்டெடுத்து' நின்ற காலத்தில் பெட்டிப்பாம்புகளாய் அடங்கி,
அவர்கள் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாய் இயங்கிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர்,
ஆரம்பகாலத்தில் தாயகக் கோட்பாட்டின் அடிப்படையில்,
சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி வந்தார்கள்,
பின்னர் புலிகளினுடைய மறைவிற்குப்பின் தமது கொள்கையை மெல்ல இவர்கள் மாற்றிக் கொண்டனர்.
2010 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமது முன்னைக்கோரிக்கையிலிருந்து,
தாயகக் கோட்பாட்டின் அடிப்படையில் என்ற பகுதியை விட்டுவிட்டு,
தனியே சுயநிர்ணய உரிமையை தம் கோரிக்கையாய் முன்வைத்தனர்.

✠✠✠✠

இக்காலத்தில் இக் கூட்டமைப்பில் இணைந்திருந்த,
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும்,
கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளால் அமைப்பைவிட்டு வெளியேறியது.
2009 இல் இறுதிப்போர் முடிவுக்கு வந்த நிலையிலே,
கூட்டமைப்புக்குள் தமிழரசுக்கட்சி,
தனது அராஜகமான ஆளுமையைச் செலுத்தத் தொடங்கியதாய் பலரும் கருதினர்.
2004 தேர்தல் வரை கூட்டமைப்பின் சார்பில்,
பாராளுமன்றம் சென்ற கஜேந்திரகுமாரின் பெயர்,
2010 தேர்தல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.
இது கூட்டமைப்பிலிருந்து காங்கிரஸ் பிரிவதற்கான காரணங்களில் ஒன்றாயிற்று.
வெளியேறியது என்று சொல்வதைவிட, வெளியேறும்படி தூண்டப்பட்டது என்று சொல்வதே,
பொருத்தம் என்று காங்கிரஸ்கட்சியின் ஆதரவாளர்கள் இன்றும் கூறி வருகின்றனர்
'அவர்களுக்குப் பதவி ஆசை' என கூட்டமைப்பும்,
'இவர்களுக்குக் கொள்கைப்பற்றில்லை' என விலகியவர்களும் குற்றம் சாட்ட,
விலகியவர்களை ஓரங்கட்டி கூட்டமைப்பு தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.

✠✠✠✠

அத்தேர்தலில் அதுவரை அரசியல் தொடர்புகள் ஏதும் அற்றிருந்த,
சம்பந்தனின் நெருங்கிய உறவினரான, ஈ.சரவணபவன்,
அவரது ஆசியோடு இத்தேர்தலில் பாராளுமன்றினுள் நுழைந்தார்.
கட்சிக்கு அவரது பத்திரிகைப்பலம் தேவை என்று,
அப்போது அதற்குக் காரணம் சொல்லப்பட்டது.

✠✠✠✠

கூட்டமைப்பின் இன்றைய அதிகாரபீடமாகவும்,
சர்ச்சைகளின் நாயகனாகவும் கருதப்படும் எம். ஏ. சுமந்திரன் அவர்கள்,
2010 இல் நடந்த தேர்தலிலேதான் தேசியப்பட்டியல் மூலம்,
கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றினுள் நுழைந்தார்.

✠✠✠✠

முன் சொன்னாற்போல, இத்தேர்தலில் தேசியப்பட்டியலில்,
பாராளுமன்றில் உள் நுழைந்த எம்.ஏ.சுமந்திரன் அவர்கள்,
சம்பந்தனின் 'உள்ளம் கவர் கள்வனாக' மாறி மெல்ல மெல்ல வளரத் தொடங்கினார்.
கட்சியின் முக்கிய பதவிகள் எதிலும் இருக்காத போதும் அவரது அதிகாரம்,
வானளாவி விரியத் தொடங்கியது.
கூட்டமைப்புக்குள் ஆரம்பம்முதல் இருந்துவந்த மாற்று அணியினரை,
அவர் துச்சமாய் மதித்து நடப்பதாய்க் குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கின.

✠✠✠✠

2013 ஆம் ஆண்டில் இக்கூட்டமைப்பு சற்று விரிவடைந்தது.
இலங்கைத் தமிழரசுக்கட்சி,
ஈழமக்கள் புரட்சிகர முன்னணி (சுரேஸ் அணி),
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) என்பவற்றோடு,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தையும் (புளொட்),
இக்கூட்டமைப்பில் பின்னர் இணைத்துக் கொண்டனர்.

✠✠✠✠

2013 இல் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில்,
யார் முதலமைச்சராய் வருவது? எனும் கேள்வி விஸ்வரூபம் எடுக்க,
கூட்டமைப்புக்குள் இருந்த பலரும் அப்பதவி தமக்கே உரியது என,
போட்டிக்களத்தில் குதித்தனர்.
அந்நேரத்தில் இவர்கள் அனைவரையும் தவிர்க்கவென,
சம்பந்தனும் சுமந்திரனும் திட்டமிட்டுச் செய்த இராஜதந்திரத்தால்,
கூட்டமைப்பைச் சேர்ந்த எந்த அணியையும் சாராத,
சமூகப் பிரமுகரான முன்னாள் நீதியரசர்,
முதலமைச்சர் பதவிக்காய் அழைத்துவரப்பட்டார்.
கல்வியாளர்களை மதிக்கும் வடமாகாணம் அத்தேர்வினை ஏற்றதால்,
அத்தேர்தலில் கூட்டமைப்பு மொத்தம் இருந்த 38 இடங்களில்,
30 இடங்களைக் கைப்பற்றி அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றது.

✠✠✠✠

கட்சித்தலைவர் சம்பந்தனாலும் கட்சியின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரனாலும்,
கெஞ்சிக் கூத்தாடி வலிந்து இழுத்துவரப்பட்ட சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள்,
அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதலமைச்சரானதும்,
தனக்காகப் பதவிப் போட்டியிலிருந்து விலகிய,
'மாவையின் சொல்கேட்டே செயற்படுவேன்' என்று அறிக்கைவிட்டு,
தேர்தலில் தனது வெற்றிக்கு வழிவகுத்த தமிழரசுக்கட்சிக்குப் பகிரங்கமாய் நன்றி பாராட்டினார்.
முதலமைச்சரும் தனது ஆளாக அமைந்து போனதில் தமிழரசுக்கட்சிக்கு அளவற்ற ஆனந்தமாயிற்று.
அதனால் அவர்களது தன்னிச்சை செயல்களும் அதிகரித்தன.

✠✠✠✠

தனித்துச் சென்றால்,
இருக்கும் மக்கள் அங்கீகாரமும் இல்லாமல் போய்விடும் என்ற அச்சத்தாலும்,
பிரிந்து சென்று கூட்டுச்சேர,
மக்களின் பலம் பெற்ற வேறு அணியேதும் இல்லாத காரணத்தாலும்,
கட்சிக்குள் தமக்கு நிகழ்ந்த அவமரியாதைகளையெல்லாம் தாங்கிக் கொண்டு,
பொறுத்திருக்க வேண்டிய நிலை மாற்றணியினர்க்கு.
அவர்கள் கதியிழந்து நின்றனர்.
முன்பு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா,
தம்மை விட்டுப் பிரிந்து போனவர்களைப் பார்த்து,
'இவர்கள் எனது தலையிலிருந்து விழுந்த மயிருக்குச் சமானம்' என்று,
அலட்சியப்படுத்தினாற்போல,
எம்மைக் கேட்பார் எவரும் இலர் எனும் துணிவில்,
தமிழரசுக்கட்சி தம்மோடு இணைந்த மாற்றணியினரை துரும்பளவும் மதியாமல்,
அலட்சியப்படுத்திய நிலையில்த்தான் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
'தன்வினை தன்னைச்சுடும் 'ஓட்டு' அப்பம் 'வீட்டை'ச்சுடும்',
எனும் தொடரை மெய்ப்பிக்குமாப் போன்று,
சம்பந்தனையும் சுமந்திரனையும் அதிரச் செய்த,
யாரும் எதிர்பாராத ஓர் நிகழ்வு நடக்கத் தொடங்கியது.
அதுபற்றி அடுத்தவாரம் சொல்கிறேன்!

✠✠✠✠

                                                                                           (நீதித்தராசு நிறுப்பதைத் தொடரும்)

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...