•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Sunday, September 8, 2019

"ஆறுமுகம் ஆன பொருள்" -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-


ஓர் வெற்று இளைஞனை அறிஞன் போல் ஆக்கி அற்புதம் செய்த பெரியோர்கள் சிலர் எனக்கு ஆசிரியர்களாய் வாய்த்தனர். அவர்களிடம் அறிவை மட்டுமல்ல. அன்பை, அருளை, ஆளுமையை, அறத்தை என, பலவற்றையும் பயின்று பக்குவப்பட்டேன். சிந்தனைச் சிறகடித்து நான் சிறக்க தாய்ப்பறவைகளாய் இருந்து வழிகாட்டியவர்கள் அவர்கள். என்னை அவர்கள் செம்மை செய்தார்கள். அவர்களுடனான எனது அனுபவம் உங்களையும் செம்மை செய்யலாம். அதற்காகவே சிந்தனைத் தொடரை எழுதுகிறேன்.   

 
ஆறுமுகம் ஆன பொருள்

🔮   🔮   🔮
லகம் எக்காரியத்தையும் பயன்கருதியே செய்கிறது.
இது யதார்த்த உண்மை.
துறவிகள் தவிர்ந்த அனைவருக்கும் இவ்வரையறை பொருந்துமாம்.
பயன்கருதிச் செயற்படும் இவ்வுலகில்,
அனைவராலும் விரும்பப்படுவது கல்வி.
வேறுபாடின்றி அனைவராலும் கல்வி விரும்பப்படுகிறதெனின்,
அதனாலும் ஏதோ பயன் இருத்தல் வேண்டும்.
அப்பயன் யாது?
அதனைத் 'தொழில்' என்கின்றது இன்றைய கல்வி உலகு.
உலகியலை முதன்மைப்படுத்தும் மேற்குலகத்தாரின் கருத்து இது.
அனைத்தையும் மேற்குலகத்தாரிடம் கடன் வாங்கிப் பழகிய நாம்,
இக்குறுங் கொள்கையையும்  நம்பெருங் கொள்கையாய்,
இன்று வரைந்துகொண்டோம்.

🔮   🔮   🔮

அருளியலை முதன்மைப்படுத்தி ஆத்மதரிசனம் பெற முயன்ற,
நம் தமிழ்ச் சான்றோர்தம் கொள்கை,
இவ்விடயத்தில் வேறாய் இருந்தது.
அவர்களைப் பொறுத்தவரை,
கல்விப்பயன் தொடர் சங்கிலியாய் நீண்டு,
கடவுளை அடைவதாய் முடிவுற்றது.
அக்கருத்து நோக்கியே,
நம் தமிழ்ப் பாட்டன் வள்ளுவன்,
'கற்றதனாலாய பயன், வாலறிவன் நற்றாள் தொழல்' என வரைவு செய்தனன்.
கல்வியின் பயன் கடவுளை அடைதல் என உரைப்பின்,
இன்றைய கல்விஉலகம் கைகொட்டிச் சிரிக்கும்.
அறியாமையில் மூழ்கிய அவர்தம் அறிவை நிராகரித்து,
நம் மூதாதையர் வழிநின்று,
கல்விப் பயனைக் கணக்கிட முயல்வோம்.

🔮   🔮   🔮

நம் தமிழ்ச்சான்றோர் செய்த வரிசைப்படி,
கல்வியின் பயன் அறிவு, அறிவின் பயன் ஒழுக்கம்,
ஒழுக்கத்தின் பயன் அன்பு, அன்பின் பயன் அருள்,
அருளின் பயன் துறவு, துறவின் பயன் வீடு,
அவ்வீடே வாலறிவன்  நற்றாளாம்.
உண்மைக் கல்விவளர்ச்சியின் ஒழுங்கு இஃதேயாம்.
இவ்வரிசையில் அன்புக்கும் அருளுக்குமான,
வேற்றுமையறியாது சிலர் விழிப்பர்.
தொடர்புடையாரிடம் செய்யப்படுவது அன்பு.
தொடர்பிலாரிடம் செய்யப்படுவது அருள்.
அன்பு இல்லற இலட்சணம்.
அருள் துறவற இலட்சணம்.
அதுநோக்கியே அன்புடைமையை இல்லறவியலிலும்,
அருளுடைமையை துறவறவியலிலும்,
அமைத்தனர் நம் தெய்வத் திருவள்ளுவர்.
அன்பு, பற்றினது வித்து, அருள், பற்றறுத்தலின் வித்து.
இல்லறத்தில் பற்றினை அறமாக்கி,
துறவறத்தில் பற்றறுத்தலை அறமாக்கிய,
நம் மூதாதையர்தம் தீர்க்கதரிசனத்தை என் சொல்ல?
பற்றினூடு பற்றின்மைக்குச் செல்லும் பாதை,
நம் கற்றார் கண்ட காணற்கரிய கருத்தாம்.

🔮   🔮   🔮

இன்று, கல்வியைப் பொருளுலகின் மூலமாய்க்கருதி,
அருளுலகை நிராகரிக்கும் அறிவாளர் தம்மால்,
கல்வி, பகையின் பாதையாயிற்று. கற்றவர் கயவராகினர்.
அறிவின் ஆக்கம் அழிவே என்றாயிற்று.
ஒழுக்கம் அடிமைத்தனமாய் உணரப்பட்டது.
அன்பு துன்பமாக, அருள் மருளாயிற்று.
ஒழுக்கமும், அன்பும், அருளும் ஒழிந்துபோக,
அழிவின் விளிம்பில் இன்று அகிலம்.
காரணம் களைய நினையாது,
அழிவாம் காரியம் பற்றி ஆராய,
ஐ. நா. சபையில் இன்று ஆயிரமாய் அறிஞர் குழுக்கள்.
கலியின் வலியறிந்து கற்றோர் கவன்றார்.

🔮   🔮   🔮

கட்டுரைத் தலைப்புக்கண்டு உட்புகுந்தார்க்கு,
இந்நீண்ட முன்னுரை சலிப்புத்தரலாம்.
வித்துவான் ஆறுமுகம் அவர்களின் உயர்வறிய,
இம்முன்னுரை அவசியமாகிறது.
பட்டங்களை அறிவின் சட்டங்களாக்கிவிட்ட, இன்றைய அறிவுலகிற்கு,
அறிவால் அன்பு தொட்ட இவ் அமரரின், அருமை அறிதற்கரியதாம்.
வித்தையால் செருக்கி  நிற்கும் இன்றைய கற்றார்க்கு,
வினயத்தால் தாழ்ந்து நின்ற வித்துவானை விளங்குதல் கூடுமா?
வினாவின் விளைவே, இவ்விரிந்த முன்னுரை.
அப்பெருமகனின் உயர்வுணர்த்துவது மட்டுமல்ல,
அறிவால் அன்புதொடும் அவசியம் உணர்த்துவதும்,
இக்கட்டுரையின் நோக்கமாம்.

🔮   🔮   🔮

வித்துவான் எனது ஆசிரியர்.
எந்த வகுப்பிலும் அவரிடம் நான் படித்ததில்லை.
ஆனாலும் அவர் எனது ஆசிரியர்.
அது எப்படி? கேள்வி பிறக்கும்.
ஆசிரியன் எனும் சொல்லுக்கு,
'கற்கப்படுபவன்' எனப்பொருள் உரைக்கிறார் நச்சினார்க்கினியர்.
எத்துணை ஆழமான வியாக்கியானம்?
ஆசிரியன் சொல்லும் பாடத்தை அல்ல,
ஆசிரியனையே மாணவன் கற்கிறான்.
புத்தி,  நம்இயக்கத்தின் 'மூலம்'
கல்விக்கருவியால், மாணவனின் புத்தியில் பதிவாகும் ஆசிரியன்,
மாணவனின் அனைத்து இயக்கங்களிலும் பிரதிபலிப்பான்.
தோற்றத்தால், பெற்றோரின் அடையாளம் இனங்காணப்படுதல்போல,
புத்தியால், ஆசிரியனின் அடையாளம் இனங்காணப்படும்.
அது நோக்கியே, கல்வியிலும் சந்ததி சொல்லும் மரபு  உருவாகிற்று.
தமிழரின் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடு அது.
வகுப்பில் கற்பிக்காவிட்டாலும், வாழ்க்கையில் கற்பித்து,
என் புத்தியில் பதிவானவர் வித்துவான் ஆறுமுகம் அவர்கள்.
இன்று என் புத்தியில், நித்தமும் அவர் சாயல் கண்டு சிலிர்க்கிறேன்.
என்புத்தியையும் பக்தியையும் புடம்போட்டு,
கல்வியால் கயமைபெறாது எனைக் காத்த,
வித்தைக்கு வித்துவான் வித்து.

🔮   🔮   🔮

இத்துணை செந்தமிழ் நடையில் ஒரு கட்டுரையா?
உங்கள் சலிப்பை உணர்கிறேன்.
உரையாடற்தமிழிலும், செந்தமிழ்நடையைக் கடைப்பிடித்த,
வித்துவானுக்கு வேறு எங்ஙனம் மரியாதை செய்யலாம்?
'தம்பி இங்கே வாடா!' என்ற வித்துவானின் செந்தமிழ்க் குரல்,
இப்போதும் என் காதில் கேட்டபடி.
அதனால்த்தான்,
அவர் எண்ணம் இத்தமிழ்நடையையும் கூடவே அழைத்து வந்துவிடுகிறது.
அன்பு செய்த மனிதரைப்பற்றி அறிவு நடையில் பேசலாமா?
அறிவுத்தமிழால் பேசி அவரால் அன்பு செய்ய முடிந்ததா?
கேள்விகள் நியாயமானவை.
வார்த்தையின் வலிமை,
பேசும் மொழியில் அல்ல, நினையும் இதயத்தில்.
அவ் இதயம் கனிந்து இருந்ததால்,
அவரால், இவ்வறிவுத் தமிழாலும் அன்பு செய்ய முடிந்தது.
ஓர் ஆட்டுக்காய் அழுத, அவர் எங்கே? நான் எங்கே?
செந்தமிழில் அன்பு சொல்லும் திறமை எனக்கில்லை.
கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழியாய்,
வித்துவானின் செந்தமிழ் நடையில்
இக்கட்டுரை வரைய விருப்பிருந்தாலும்,
வீண்முயற்சி செய்யும் விருப்பம் தவிர்க்கின்றேன்.
வானுயர்ந்த மானுடத்தின் வடிவம் என வாழ்ந்திருந்த,
வித்துவானை உங்கள் கண்முன் கொணர,
என் சொந்தத்தமிழ்தான் துணைநிற்கும்.
பக்தியாய் முனைகிறேன்.
படியுங்கள்.

🔮   🔮   🔮

பிறப்பு  - புங்குடுதீவு.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டம்.
தமிழகப் பல்கலைக்கழகத்தில் பின்னாளில் துணைவேந்தராய் இருந்த,
வ.சுப. மாணிக்கம் அவர்கள் இவருடன் படித்தவர்.
பரீட்சை முடிவில் இவருக்கு '(f)பெஸ்ட் கிளாஸ் (f)பெஸ்ட் ராங்',
சுபமாணிக்கம் அவர்களின் சித்தி இவருக்குப் பிந்தியது.
தமிழகத்தில் அவர் துணைவேந்தராய் வந்தார்.
ஈழத்தில் இவர் இறுதிவரை பாலருக்குப் படிப்பித்தார்.
'யாரொடு நோகோம்? யார்க்கு எடுத்துரைப்போம்?'
வாழ்க! கற்றோரைப்பயன் செய்யும் நம் ஈழத்து அறிவுலகு.
முப்பது ஆண்டுகளுக்கு மேல்,
ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் ஆசிரியர்த் தொழில்.
கடைசி ஓர் ஐந்தாறு ஆண்டுகள்,
இந்துக்கல்லூரியில் எங்களோடு.
வெள்ளை வேட்டி, வெள்ளை நஷனல்,
கழுத்தைச் சுற்றிய 'ம(f)ப்ளர்'.
புத்தக 'ஸ்ராண்டாய்' எப்போதும் பயன்படும் ஒரு கையிடுக்கு.
வெள்ளத்துள் நடப்பதுபோல்,
மற்றொரு கையால் எப்போதும் வேட்டியைச் சிறிது தூக்கி,
அசைந்து நடக்கும் நடையழகு.
அன்பு முதிர்ச்சியின் அடையாளமாய்,
நடையிலும், சிரிப்பிலும் வெளிப்படும் பெண்மை,
பாட்டோடும் பைந்தமிழோடும் ஒட்டிய வாய்,
பக்தியோடு ஒட்டிய கண்.
நீண்ட நெடிய உருவம், அதனால் விளைந்த சிறு கூனல்.
முடிந்தவரை,அவர் வடிவை உங்கள் கண்முன் கொணர முனைந்திருக்கிறேன்.
இது புறவடிவு.
அகவடிவு?தொடரும் பகுதியில் தொடரும்.

🔮   🔮   🔮    🔮   🔮    🔮
                                                                                                 (அடுத்தவாரமும் ஆறுமுகனார் வருவார்)

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...