•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Saturday, November 2, 2019

வேலன் என்றொரு வேழம்!: பகுதி 4 -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-


(சென்ற வாரம்)
'சிவபாதம், தமிழையெல்லாம் பிறகு வளர்க்கலாம். முதலில, வீட்டில கொஞ்சம் கோழி வள! அப்பதான், தமிழ் தப்புதோ இல்லையோ நாங்கள் தப்பலாம்' என்று வேலன் சொல்ல, அந்த மென்மையான வித்துவான் அழுதே விட்டாராம். சிவராமலிங்கம் மாஸ்ரரும் வித்துவான் ஆறுமுகமும் இதைச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்கள்.

🔮🔮🔮🔮

உள்ளம் நிறைய அன்பும் உதிரத்தில் வேகமுமாக வாழ்ந்தவர்தான் வேலன்.
அறிவுலகப்பாதையில் என்னையும் கழகத்தையும் நெறி செய்ததில்,
அவருக்குத்தான் முதல் இடம்.
பிற்காலத்தில், நாங்கள் மதுரைத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்குச் செல்ல,
காரணராயிருந்தவர் வேலன்தான்.
திரும்பத்திரும்ப எம்மைத் தூண்டி,
அந்த மாநாட்டிற்குச் செல்லும் பைத்தியத்தை உருவாக்கினார்.
மாநாட்டு அனுபவம்பற்றி, பின்னர் விபரமாய் எழுத இருக்கிறேன்.
எல்லாம் சரிவந்து நாங்கள் இந்தியா புறப்பட்டபோது,
'அங்க போய், வெறுமனே கோயில், குளமெண்டு திரியாதீங்கோ!
அறிஞர்களைப் போய்த் தரிசியுங்கோ!
நல்ல இட்டலி, பூரி சாப்பிடுங்கோ!
தஞ்சைக் கோபுரம், காவிரி ஆறு இதையெல்லாம் பாருங்கோ!
இதெல்லாம் சேர்ந்ததுதான் இந்திய அனுபவம்' என்று,
எங்களுக்கு, வித்தியாசமாக உபதேசம் செய்தார் வேலன்.
அன்றுமட்டும் அவர் எம்மைத் தூண்டி மாநாட்டிற்கு அனுப்பியிராவிட்டால்,
இன்றைய எங்களது விரிந்த இந்தியத் தொடர்புகள் எமக்குக் கிடைத்திருக்காது.

🔮🔮🔮🔮

வேலனை விரும்பும் பெரிய மாணவர் குழாமொன்றே அப்போதிருந்தது.
உண்மையை விரும்பும் மாணவர்கள் அவரோடு ஒட்டியுறவாடுவார்கள்.
மாணவருக்கும் அவருக்குமான உறவு நிலைபற்றி,
அவரது மாணவரான அருமைநாயகம் பற்றி,
அடுத்து வரப்போகும் கட்டுரை ஒன்றில்,
விரிவாய் எழுதப்போகிறேன்.
போதைவஸ்திற்கு அடிமையான அருமைநாயகத்தைத் திருத்துவதற்காக,
அவரைத் தனது வீட்டிலேயே வைத்திருந்து,
அவரை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக,
தானே சென்று, போதைவஸ்து வாங்கிக்கொடுத்த பெருந்தன்மையெல்லாம்,
வேலனையன்றி, வேறு எந்தத் தமிழாசிரியருக்கும் வரவே வராது என்பது நிச்சயம்.

🔮🔮🔮🔮

போர்ச்சூழ்நிலை காரணமாகப் பருத்தித்துறையை விட்டுப் புறப்பட்ட வேலன் தம்பதியர்,
சிலகாலம் எங்கள் கம்பன் கோட்டத்தில் தங்கியிருந்தனர்.
வேலனோடு உடன் வாழக்கிடைத்த அவ்வனுபவம் மறக்க முடியாதது.
அப்போது ஒருநாள், 'டாக்டரிடம் செக்கப்பிற்காகச்' சென்ற வேலன் வீடு திரும்பினார்.
அவர் முகம் இருண்டிருந்தது.
வந்து சிலநேரம் இருந்த பின்பு, என்னைத் தனியே அழைத்தார்.
'ஜெயராஜ், ஒரு விசயம் சொல்லப் போறன் நீ பதட்டப்படாத!
'என்னுடைய இருதயத்தில்,
ஒரு 'ரியுமர்' வளருவதாய் டொக்டர் சந்தேகிக்கிறார்.
ஒரு சோதனை செய்து பார்க்க வேணுமாம்.
அவர் சந்தேகிக்கிறது சரியானால்,
இன்னும் ஒரு சில நாட்கள்தான் நான் வாழ முடியும்' என்று அமைதியாய்ச் சொன்னார்.
நான் பதறிப்போய்விட்டேன்.
நான் விம்மி அழத்தொடங்க, என்னை அருகிலிருத்தித் தலைதடவி,
'நீ கவலைப்படாத! உன்னை முருகன் பார்த்துக்கொள்வான்' என்று சொல்லி,
அவரும் அழுதார்.
இப்போது இதை எழுதும்போதே என் நெஞ்சம் உருகுகிறது.
என் ஆசிரியர்களின் நல்வாழ்த்துக்கள்தான்,
இன்று என்னை நிமிர்ந்து வாழ வைத்திருக்கிறது.
நல்ல வேளை, டொக்டரின் சந்தேகம் தவறாகி,
வேலன் எங்களோடு அதன்பின்பும் நீண்டநாள் வாழ்ந்தார்.

🔮🔮🔮🔮

கடும்போர் நிகழ்ந்த காலமது.
அப்போது, திடீர் திடீரென விமானங்கள் வந்து குண்டு வீசும்.
கம்பன் கோட்டத்தில் அமைத்திருந்த சிறிய பங்கருக்குள்,
நாமெல்லாம் ஓடி உட்கார்ந்து கொள்வோம்.
வேலனின் மனைவி பயத்தில் நடுங்குவார்.
முருகா! முருகா! என்று தானும் சொல்லி, எங்களையும் சொல்லச் சொல்வார்.
அப்போதும், வேலன் சிறிதும் பயப்படாமல் மனைவியைக் கிண்டலடிப்பார்.
'நீ நெடுக முருகனைக் கூப்பிட்டிருந்தா, இப்ப நீ கூப்பிடேக்க அவன் வருவான்!
நீ முந்தி ஒருக்காலும் கூப்பிடாமல், இப்ப திடீரெனக் கூப்பிட்டால் அவன் எப்படி வருவான்?
சும்மா பேசாமல் இரு!' என்பார்.
அவர்களின் சண்டை சுவாரஸ்சியமாய் இருக்கும்.

🔮🔮🔮🔮

ஒரு நல்லூர்த் திருவிழாவின்போது வேலனின் மனைவி,
எல்லோரும் பேசிக்கொண்டிருக்கையில்,
'இப்ப திருவிழாவுக்கு மரக்கறி காய்ச்சிறதால,
எங்கட நாய் ஒண்டையும் தின்னுதில்ல' என்றார்.
உடனே வேலன், 'அப்ப நாயுக்கு மச்சத்த காய்ச்சி வையன்!' என்று சொல்ல,
ரீச்சர், 'அதெப்பிடி, முருகன்ட திருவிழாவுக்க மச்சம் காய்ச்சிறது?' என்று பதறினார்.
கால் நீட்டிப் படுத்துக்கிடந்த வேலன்,
'எடி விசரி, நீ முருகன முழுசா நம்பாதபடியாத்தானே காவலுக்கு நாய வளக்கிற.
ஒண்டு முருகன நம்பு! இல்லாட்டி நாய நம்பு!
முருகன நம்பாம நாய வளத்துக்கொண்டு,
முருகனுக்காக அதப் பட்டினி போடாத!' என்று சொல்ல,
நாங்கள் அதுகேட்டு விழுந்து விழுந்து சிரித்தோம்.

🔮🔮🔮🔮

வித்துவான் வேலனுக்கும் எனக்கும் இடையிலான உறவு விசித்திரமானது.
தனது மாணவர்கள் அத்தனை பேரையும் விட,
என்னைத்தான் அவர் அதிகம் நேசித்தார்.
அது போலத்தான் நானும்.
எப்போதும் உயர்வாய்ச் சிந்திக்கும் வேலன்,
சிலவேளைகளில் தன் சுயபாதிப்பால்,
சுயநலமாகக் கருத்துக்களை வெளியிடுவார்.
அக்கருத்துக்களை என்னால் ஏற்க முடிவதில்லை.
வித்துவான் ஆறுமுகம் அவர்களோடும் சிவராமலிங்கம் மாஸ்ரரோடும் முரண்பட்டு,
எதிர்த்துப் பேசுமாப்போல்,
வேலனோடு ஏனோ என்னால் எதிர்த்துப் பேச முடிவதில்லை.
அவர்மேல் நான் கொண்ட மதிப்பும், அவரது அறிவாளுமையுமே,
அதற்கான காரணங்கள் என்று நினைக்கிறேன்.
ஆனால் என் எதிர்ப்பை அவருக்கு உணர்த்த,
அவரது சுயநலக்கருத்துக்களை அங்கீகரிக்காமல் மௌனம் காப்பேன்.
அவருக்கு அது எரிச்சலைக் கொடுக்கும்.
தான் கதைப்பது எனக்குப் பிடிக்கவில்லை என்பது தெரிந்ததும்,
மேலும் மேலும் அக்கருத்தை வலியுறுத்திப் பேசுவார்.
ஆனால்; ஒரு நாளும் நான் அவரை எதிர்த்துப் பேசியதில்லை.
அதேபோலத்தான் அவரும் என் செயல்கள் அவருக்குப் பிடிக்காத பட்சத்தில்,
என்னை ஒருநாளும் நேராகக் கண்டிக்கமாட்டார்.
முகக் குறிப்பால் தன் எதிர்ப்பை எனக்கு உணர்த்துவார்.
எங்கள் இருவரது இம் மறுதலிப்புக்கள்,
நீர் கிழிய எய்த வடுப்போல் சில நேரம் மட்டுமே நிலைக்கும்.

🔮🔮🔮🔮

பின்னர் சில காலம் வேலனும் மனைவியும்,
கொழும்பில் சென்று வாழ்ந்தார்கள்.
அப்போதும் கடிதம்மூலம் என்னை நெறிப்படுத்தியபடியே இருப்பார்.
அந்தக்காலத்தில் எனது பேச்சுக்கு யாழ்ப்பாணத்தில் பெரிய மதிப்பு.
பேச்சால் பெரிய வருமானம் ஈட்டினேன்.
என் மனம் வேலனுக்கு ஏதாவது குருதட்சணை கொடுக்க வேண்டும் என்று,
விரும்பியபடியே இருந்தது.
சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து,
வேலனுக்கு ஒரு மோதிரம் செய்து அனுப்பி வைத்தேன்.
அவருக்கு அது பெரிய மகிழ்ச்சி.
அதைப் பல பேரிடமும் காட்டி,
'இது ஜெயராஜ் தந்தது' என்று சொல்லி மகிழ்ந்தாராம்.
மற்றவர்கள் வந்து சொல்ல,
நான் மகிழ்ந்து போனேன்.

🔮🔮🔮🔮

1993 இல் சிரமமான பாதைகள் பல கடந்து ஒருமுறை,
குமாரதாஸ், நான், ரத்தினகுமார், பிரசாந்தன், திருமுருகன் எனப்பலரும்,
உதயன் சரவணபவனுடன் 'றோட்டறிக் கூட்டம்' ஒன்றிற்காக,
கொழும்பிற்கு வந்தோம்.
நாம் கொழும்பு வந்து சேர்ந்தபொழுது அதிகாலை 4.30 மணி.
இராமகிருஷ்ண மண்டபத்தில் இடம் கிடைக்கும் என,
நம்பி வந்த எமக்கு அங்கு இடம் கிடைக்காமல் போனது.
என்ன செய்வதென்று தெரியாமல்,
அருகில் வேலன் தம்பதியர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றோம்.
அவர்கள் ஒரு பெரிய வீட்டில், ஓர் அறையில் தங்கியிருந்தனர்.
அந்த விடிகாலை நேரத்திலும் எம்மைக் கண்டதும்,
அவர்கள் மகிழ்ந்த மகிழ்ச்சியை என்றும் மறக்க முடியாது.
அதன் பின்னர் 1995 இல் நாங்களும் இடம்பெயர்ந்து கொழும்பு வந்து சேர்ந்தோம்.
அங்கும் எம் உறவு தொடர்ந்தது.

🔮🔮🔮🔮

பிற்காலத்தில் வேலன் சின்ன விஷயங்களுக்கெல்லாம் மனம் கூம்புவார்.
அதற்கும் அவரது அன்பே காரணமாய் இருந்தது.
நாங்கள் அவரோடு கலக்காமல் சுயமாய் ஏதும் செயற்பட்டால்,
அவருக்கு மனம் சோர்ந்து போகும்.
தனக்குக் கட்டுப்பட்ட பிள்ளைகளாகவே நாங்கள் இருக்க வேண்டுமென்று,
கடைசிவரை அவர் விரும்பினார்.
கொழும்பிலும் சில வேளைகளில் ஏற்படும் முரண்பாடுகளால்,
மனம் சோர்ந்து முகம் கோணி சில காலம் இருப்பார்.
என்னாலும் அவரைப் பிரிந்து தொடர்ந்து இருக்க முடிவதில்லை.
அவரைச் சமாதானம் செய்யும் வழி எனக்குத் தெரியும்.
சந்தைக்குப் போய்க் காய்கறிகள் வாங்கிக்கொண்டு,
நேராக அவர்கள் வீட்டிற்குப் போய்,
ரீச்சரிடம், 'இன்றைக்கு மாஸ்ரருக்கு நான் தான் சமைக்கப் போறன்',
என்று சொல்லிக் குசினிக்குள் சென்று சமைப்பேன்.
அவர் கோபம் எல்லாம் பனிபோல் கரைந்தோடிவிடும்.
நான் சமைத்த உணவுகளை அயல் வீடுகளுக்கெல்லாம் கொண்டு போய்க் கொடுத்து,
'இண்டைக்கு ஜெயராஜ் தான் எங்கட வீட்ட சமைச்சவன்' என்று சொல்லிப் பெருமைப்படுவார்.
ஊருக்கு ராசாவானாலும் வீட்டுக்குப் பிள்ளை என்ற,
பெற்றோரின் உரிமை அவரிடம் கடைசி வரை இருந்தது.
பின்னர் அவர்கள் லண்டன் சென்றார்கள்.

🔮🔮🔮🔮

அவர்கள் லண்டனுக்குச் சென்றபின்பு,
ஒரு முறை நான் லண்டன் சென்றபொழுது,
என்னைக் கண்டு அவர் அடைந்த மகிழ்ச்சியும்,
தன்னோடு இருத்தி என்மேல் காட்டிய பரிவும்,
இப்போது நினைந்தாலும் என் நெஞ்சை நெகிழ்விக்கின்றன.
எங்களை வெறுக்க அவராலோ,
அவரை வெறுக்க எங்களாலோ,
என்றைக்கும் முடிந்ததில்லை.
'அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்.'

🔮🔮🔮🔮

வேலனுடனான என் மனப்பதிவை இன்னும் எவ்வளவு தூரமும் நீட்டலாம்.
கழகத்தைப் பொறுத்தவரை குமாரதாஸனும், நானும் தான்,
அவர்களின் அன்பில் முழுமையாய்த் தோய்ந்தவர்கள்.
அது ஏதோ முன்னைப்பிறவித்தொடர்பு.
இனி வரும் பிறவிகளிலும் அத்தொடர்பு தொடரும் எனத் தோன்றுகிறது.
வேலன் மாஸ்ரரை நான் நினையாத நாளில்லை.
அவரைத் தெரிந்தவர்கள்,
எனது ஆளுமையிலும், நிமிர்விலும் அவரை அடையாளம் காண்பார்கள்.
என் புத்தியிலும், இதயத்திலும் நிறைந்த அவரை,
நினைந்தபடி தான் என்றோ என் உயிர் பிரியும் என்பது திண்ணம்.

🔮🔮🔮🔮

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...