•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Friday, November 15, 2019

ஆண்டவனின் அம்மை: பகுதி 5 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-


ள்ளம் உவக்கிறது.
கட்டுரைகளை எழுதுவதன் பயன்,
அதை வாசித்துக் கருத்துரைப்போரின் எழுத்துக்களில்த்தான் கிட்டுகிறது.
கடந்த வாரம் அன்பர் செல்லசாமி அவர்கள்,
காரைக்காலம்மையின் புராணப்பாடல் ஒன்றில்,
சேக்கிழார் பொதித்த நுட்பம் ஒன்றினை எடுத்துக் காட்டியிருந்தார்.
மிக மகிழ்ந்தேன். 

வந்தவர்கள் தந்த மாம்பழத்தை அடியார்க்கு அன்னை இடுகையில்,
அப்பழத்தின் சுவையைச் சுட்டும் சேக்கிழார்,
அதை நன் மதுர மாங்கனி எனக் குறிப்பிடுகிறார்.
பின்னர் இறைவன் தந்த புதுக்கனியை,
கணவர்க்கு இடுகையில் அதனை,
அதிமதுரக் கனி என்று குறிப்பிடுகிறார்.
மனிதர் கொடுத்த மாங்கனியை மதுரமாங்கனி என்றும்,
இறைவன் கொடுத்த மாங்கனியை அதிமதுரக்கனி என்றும்,
தரம்பிரித்து தமிழ்ச் சொற்களால் காட்டும் ஆற்றல் கண்டுதான்,
நமது சேக்கிழாரை தெய்வச் சேக்கிழார் எனத் தமிழுலகம் கொண்டாடிற்று போலும்.
இவ் அரிய கருத்தை உபகரித்த நண்பர்தம் திருவடிகளை,
மனமுவந்து பணிகிறேன்.
இனி விட்ட இடத்திலிருந்து தொடர்வாம்.


(சென்றவாரம்)
ஒன்றிய மனத்தால் அவள் உள்ளம் சிவனில் பதிய, அச்சிவனார்தம் திருவருளால், ஏந்திய அன்னையின் கையில் இனிய ஒரு கனி வந்து வீழ்கிறது. அதிசயித்த நம் அன்னை அகமகிழ்ந்தாள். கையில் வீழ்ந்த கனியால் கணவன்தன் விருப்பினை நிறைவேற்ற எண்ணி, ஆசையோடு அதனை அன்புக்கணவனின் இலையில் இட்டாள் நம்தாய்.

இவ்விடத்திலும் நாம் கவனிக்கவேண்டியதொன்றுண்டு.
சிவனிடம் கணவனுக்காகக் கனி வேண்டிக் கையேந்தி நிற்கிறாள் நம் அன்னை.
அவள் கையில் சிவனருளால் மாங்கனி ஒன்று வந்து சேருகிறது.
நாமானால் ஆச்சரியமாய் நிகழ்ந்த அச்சம்பவத்தால்,
அதிசயிப்போம், ஆனந்திப்போம், அதிர்ந்து நிற்போம்.
ஆனால் அக்கனி கிடைத்ததும் அன்னை,
அத்தகு மெய்ப்பாடுகள் எதனையும் கொண்டதாய்க் காட்டாத நம் சேக்கிழார்,
அவ் அதிசயச் சம்பவத்தால் அன்னை இறையருள் நினைந்து வியந்ததைவிட,
தன் கணவர் வேண்டிய கனி கிடைத்த மகிழ்வினாலேயே திளைத்தார் என்பதனை,
நமக்கு உணர்த்த,
சிவனருளால் கனி கிடைத்ததும் அன்னை அவ் அருள்நோக்கி மகிழ்ந்ததாயோ,
அவ்விடத்தில் சிவனைப் போற்றி நின்றதாயோ உரைக்காமல்,
அக்கனியைக் கணவனுக்கு உடன் சென்று இடுவதாய்க் காட்டி,
அன்னையின் பதிபக்தி  'பதி'பக்தியினும் சிறந்து நின்றதனை,
நமக்குத் தெளிவுற உணர்த்துகிறார்.

மற்(று) அதனைக் கொடுவந்து மகிழ்ந்(து) இடலும் அயின்(று) அதனில்
உற்ற சுவை அமுதினும் மேற்பட உளதாயிட 'இதுதான்
முற் தருமாங் கனி அன்று மூவுலகில் பெறற்(கு) அரிதால்
பெற்றது வேறெங்(கு)' என்று பெய்வளையார் தமைக்கேட்டான்.

காதல் மனைவி இட்ட அக்கனித்துண்டை,
ஆசையோடு அருந்தினான் பரமதத்தன்.
சிவன் தந்த அருட்கனியல்லவா அது?
அக்கனித்துண்டம் அமுதினும் இனிதாய்ச் சுவைத்தது.
வியந்துபோன பரமதத்தன்
'இது முன்னை இட்ட கனியின் இணை அன்று.
இம்மண்ணில் அன்றி மூவுலகிலும் இக்கனிக்கு இணை இன்றாம்.
மோகம் தரும் இக்கனியை எங்கு பெற்றாய் என?'
இயல்பாய் வினவினான்.

கணவன் கேட்ட அவ் வினா அன்னையைக் கவழச்செய்தது.
'இறைவன் தந்த கனி இது' என உரைத்தல் பொருந்துமா?
உரைத்தாலும் நாதன் நம்புவானா?
எங்ஙனம் இறைவனின் இன்னருளை வெளிப்பட உரைப்பது என்றும்,
கணவன் கேட்க உண்மையை உரையாது விடுதல் எங்ஙனம் என்றும்,
நிலைதடுமாறினாள் நம் நேச அன்னை.
அந்நிலைதடுமாற்றத்தால் விம்மி விதுப்புற்றாள்.

அவ்வுரை கேட்டலும் மடவார் 'அருளுடையார் அளித்தருளும்
செவ்விய பேர் அருள் விளம்பும் திறம் அன்று' என்று உரைசெய்யார்
'கைவரு கற்புடை நெறியால் கணவன் உரை காவாமை
மெய் வழியன்று' என விளம்பல் விடமாட்டார், விதிர்ப்புறுவார்

சொல்லவும் முடியாது, சொல்லாமல் விடவும் முடியாது தத்தளித்த எம் அன்னை,
நடந்தவற்றைக் கணவனுக்கு உரைப்பதுவே தன்கடன் என உணர்ந்து,
இக்கனி தந்தது யாரென? வினாத்தொடுத்த கணவனை நோக்கி,
நடந்தவை அனைத்தையும் ஏக்கத்துடன் எடுத்துரைத்தார்.

'செய்தபடி சொல்லுவதே கடன்' என்னும் சீலத்தார்
மை தழையுங் கண்டர் சேவடிகள் மனத்துற வணங்கி
'எய்த அருங்கனி  அளித்தார் யார்?' என்னும் கணவனுக்கு
மொய் தரு பூங்குழல் மடவார் புகுந்தபடி தனை மொழிந்தார்.

சிவன் தந்த கனி இது என்ற செய்தி,
அதிசயமாய்ப்பட்டது பரமதத்தனுக்கு.
உலகியல் வயப்பட்டார் அருளியலை அறிவரோ?
நம்போன்றோரின் நிலையே பரமதத்தனுக்குமாம்.
அன்னை சொன்ன அக்கருத்தில் அவனுக்கு ஐயம்.
ஆண்டவன் வந்து கனி தருவனா?
உண்மை அறிய நினைந்த அவன்,
'ஐயன் அருள் இதுவேல் அடுத்தும் ஒரு கனி கொணர்க!' என்றனன்.
அன்னை திகைத்து நின்றனள்.

'ஈசனருள்' எனக் கேட்ட இல் இறைவன் அது தெளியான்

வாச மலர்த் திரு அனையார் தமை நோக்கி 'மற்றிதுதான்
தேசுடைய சடைப்பெருமான் திருவருளேல் இன்னமும் ஓர்
ஆசில் கனி அவனருளால் அழைத்தளிப்பாய்' என மொழிந்தான்.

இப்பாடலிலும் இல்லத்திற்கு உரியவன்,
இப்பரமதத்தனே என்பதை நமக்கு உணர்த்த,
தெய்வச் சேக்கிழார் மீண்டும் ஒருதரம் அவனை இல் இறைவன் என,
சுட்டுதல் கவனிக்கத்தக்கது.

பரமதத்தனின் வேண்டுகோளால்,
அன்னை பரிதவிக்கிறாள்.
ஆண்டவன் கருணையை ஐயுறும்,
கணவனின் நிலை அன்னையை கவலையுறச் செய்கிறது.
ஆனாலும் கணவனது ஐயம் தீர்த்தல் தன் கடமையென்று உணர்ந்த அவர்,
அவ்விடத்தைவிட்டு அகன்று,
சிவனாரின் முன்னிலையில் சென்று,
'மீண்டும் ஒரு கனி தராது விடுவீரேல்,
என் உரை பொய்யுரையாய் ஆகுமன்றோ?' என வருந்தி வணங்க,
ஐயன் அருளால் மீண்டும் ஒரு அருட்கனி,
அன்னை கையில் வீழ்ந்தது.
ஐயன் அளித்த அவ் அருட்கனியை,
தன் கணவனின் கையில் இட்டாள் அன்னை.
அதிசயித்தான் பரமதத்தன்.

பாங்ககன்று மனைவியார் பணியணிவார் தமைப் பரவி
'ஈங்கிதளித் தருளீரேல் என்னுரைபொய் யாம்' என்ன
மாங்கனியொன் றருளால்வந் தெய்துதலும் மற்றதனை
ஆங்கவன்கைக் கொடுத்தலுமே அதிசயித்து வாங்கினான்.

அன்னை பரமதத்தனின் கையில் அளித்த,
மாங்கனி மறுநிமிடமே மாயக்கனியாய் மறைந்து போயிற்று.
அச்சம் மீதூர அலமந்தான் பரமதத்தன்.
சிவனின் அருட்கருணையை,
அன்னை செய்த வித்தையாய்க் கருதி அச்சமுற்றான்.
அவன் உள்ளம் தடுமாறிற்று.
உரிமைமிக்க தம் மனைவியாம் புனிதவதியை,
இவள் பெண்; அல்லள் தெய்வமடந்தை எனத் தீர்மானித்தான்.
தான் அறிந்த அவ் உண்மையை மற்றவர்க்கு உரைக்க அஞ்சி,
அயலறியாமல் அன்னையை விட்டு விலகி வாழத்தொடங்கினான்.

வணிகனும் தன்கைப் புக்க மாங்கனி பின்னைக் காணான்
தணிவரும் பயம் மேற்கொள்ள உள்ளமுந்தடுமாறெய்தி
அணி குழல் அவரை வேறோர் அணங்கெனக் கருதி நீங்கும்
துணிவு கொண்டெவர்க்குஞ் சொல்லான் தொடர்வின்றி ஒழுகுநாளில்

தன் உள்ளத்து உணர்ச்சியைக் கள்ளத்தால் மறைத்த பரமதத்தன்,
அன்னைக்காய்ச் சிவனார் செய்த திருவருளை,
தன் முன்னைத் தவப்பயன் என்று உணராது எண்ணத்தில் மிரண்டான்.
கரம் பிடித்த கன்னிகையைக் கைவிட்டுப் போகும்,
திறம் தேடி அறிந்தான். தேசத்தார் கேள்விக்கு,
'நெடுங்கடல் கடந்து நீள் நிதி கொணர்வேன்' என்றுரைத்த,
அவன் கருத்தை அயல் ஏற்றது. அன்னையும் ஏற்றாள்.

விடுவதே எண்ண மாக மேவிய முயற்சி செய்வான்
'படுதிரைப் பரவை மீது படர்கலங் கொண்டு போகி
நெடுநிதி கொணர்வேன்' என்ன நிரந்தபல் கிளைஞராகும்
வடு வில்சீர் வணிய மாக்கள் மரக்கலஞ் சமைப்பித்தார்கள்.


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...