•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Tuesday, December 24, 2019

'கிரகண காலத்தில் ஆலயங்களைப் பூட்டுவது தவறு!' -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-லகம் உய்ய உதித்தது நம் சைவசமயம்.
இறைநிலையுற்ற ஞானியரால் நமது சமயத்தின்,
வழிபாட்டு முறைகள் அனைத்தும்
ஏற்கனவே வரையறுத்துத் தரப்பட்டுள்ளன.
நமது சைவத்தின் பிரமாண நூலாகிய வேதமும் ஆகமமும்,
வழிபாடுபற்றி ஒரு கருத்தை உரைத்தால்,
அக்கருத்திற்கு மாற்றுச் சொல்லும் உரிமை எவர்க்கும் இல்லையாம்.
இவ் உண்மையின் அடிப்படையில் கிரகணங்கள் பற்றிய,
தவறான ஒரு நடைமுறையைப் பற்றிச் சுட்டிக்காட்டவே
இக்கட்டுரையை வரைகின்றேன்.

🌞🌑🌒🌓🌔🌕🌖🌗🌘


சூரிய, சந்திர கிரகணங்களின்போது,
ஆலயங்களைப் பூட்டி வைக்கவேண்டும் என்ற செய்தி
பலராலும் பரவலாக இன்று சொல்லப்படுகிறது.
நம் நாட்டில் மட்டுமன்றி தமிழ் நாட்டிலும்,
இம் மரபைச் சிலர் விபரம் தெரியாது கடைப்பிடிக்கின்றனர்.
கிரகண நேரத்தில் ஆலயங்களைப் பூட்டி வைக்கவேண்டும்
என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் நமது ஆகமநூல்களில்,
சொல்லப்ட்டதாய்த் தெரியவில்லை.
இடைக்காலத்தில் விஞ்ஞான முறையில் கிரகண நேரத்தில்,
தீயகதிர்கள் பூமியில் பரவுவதாய்ச் சொல்லப்பட்டது.
அதனால் அந்நேரத்தில் உணவு முதலியவற்றை
உண்ணக்கூடாது என விஞ்ஞானிகள் உரைத்தனர்.
விஞ்ஞானம் எதைச் சொன்னாலும் அதுவே உண்மை என நம்பிய சிலரே,
மேற்கருத்தை நமது சமய முறையிலும் புகுத்தி,
ஆலயங்களைப் பூட்டச் செய்து அபச்சாரம் செய்து வருகின்றனர்.
இது தவிர கிரகண நேரத்தில் ஆலயங்களைப் பூட்டுவதற்கான காரணம்,
ஏதும் இருப்பதாய்த் தெரியவில்லை.
விஞ்ஞானிகளால் முன்பு சொல்லப்பட்ட இக்கருத்தும்,
இன்று அவர்களாலேயே மறுக்கப்படுகிறது.

🌞🌑🌒🌓🌔🌕🌖🌗🌘

இரண்டாண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்த ஓர் சந்திரகிரகணத்தின்போது,
தமிழ்நாட்டு விஞ்ஞானிகள் அமைப்பைச் சார்ந்தோர்,
அக்கிரகண நேரத்தில் சென்னை மெரீனா கடற்கரையில்,
கூடி உணவுண்டு அக்கருத்தை மறுத்த காட்சியினை,
தமிழ்நாட்டின் தொலைக்காட்சிகள் அனைத்தும் தமது செய்தியில் காட்டின.
ஆனால் நம்முடைய சைவ ஆகமங்கள் கிரகண காலத்தை,
புண்ணியகாலம் என்றே உரைக்கின்றன.
பஞ்சாங்கங்களில்,
கிரகண காலத்தைக் கிரகண புண்ணியகாலம் என்று,
எழுதியிருப்பதை நாம் காணமுடியும்.
அக்கிரகண நேரங்களில் ஆலயங்களில் கிரியைகள் நடத்தப்பட வேண்டும் என்பது,
ஆகமங்கள் சொல்லும் செய்தி.
இதனை அறியாது ஒருசிலர் உண்மைக்கு நேர்மாறாக,
ஆலயங்களைப் பூட்டி அபச்சாரம் செய்கின்றனர்.
இக்கிரகண பூசை பற்றி நமது ஆகமம் கூறுவதையும்,
நம் நாட்டில் வாழ்ந்து மறைந்த பிரபல அந்தண அறிஞர்களான,
அச்சுவேலி சிவஸ்ரீ ச.குமாரசுவாமிக்குருக்கள், பேராசிரியர்
கா.கைலாசநாதக்குருக்கள் ஆகியோர் கூறுவதையும் கீழே காணலாம்.

🌞🌑🌒🌓🌔🌕🌖🌗🌘

அச்சுவேலி சிவஸ்ரீச.குமாரசுவாமிக்குருக்கள்:(மஹோற்சவ விளக்கம்)

சூரிய கிரகணத்திலே தொடக்ககாலம் புண்ணிய காலமாகும்.
சந்திரகிரகணத்திலே முடிவுக்காலம் புண்ணிய காலமாகும்.
சங்கிராந்தி புண்ணிய காலத்திலும்,
கிரகண புண்ணிய காலத்திலும் விஷேட பூசை செய்து உற்சவம் செய்க!

நித்தியாங்க கருமம் என்பது,
சிவராத்திரி, தேய்பிறைஅஷ்டமி, வளர்பிறைஅஷ்டமி,

பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி, சூரிய, சந்திரகிரகணங்கள், மாதசங்கிராந்தி
முதலிய புண்ணியகாலங்களில் விஷேச பூசை செய்தலும் பிறவுமாம்.

🌞🌑🌒🌓🌔🌕🌖🌗🌘

பேராசிரியர் கா.கைலாசநாதக்குருக்கள்:(சைவ திருக்கோயில் கிரியை நெறி)
கிரகணங்கள் நிகழும் வேளையிலும்,
அயனம், விசுபுண்ணிய காலம், சங்கிராந்தி,

அமாவாசை, சடசீதி முதலிய புண்ணியகாலங்களிலும்,
சிவபெருமானை விஷேசமாகப் பூசித்தல் வேண்டும்.
இவ்வாறு நிகழும் விஷேச கிரியையில் ஹோமம் முதலியன இடம்பெறும். 

சிவனை விஷேச திரவியங்களால் அபிஷேகித்து பாயாசம், சக்கரை
அன்னம் முதலியவற்றை நிவேதித்து,
விஷேட தீபாராதனை ஆகியன நிகழ்த்துதல் வேண்டும்.


உத்தரகாமிக ஆகமம்-பிராயச்சித்த விதிப்படலம் 533வது சுலோகம்
அஷ்டமி, சதுர்த்தசி, பௌர்ணமி, அமாவாசை, உத்தராயணம், தட்சணாயணம்,
விசு புண்ணியகாலம், கிரகணம் ஆகிய இவைகளில்,
ஆலயங்களில் நித்திய ஹோமம் இல்லாமலிருந்தால்,
நான்கு மடங்கு அதிகப்படியாக ஹோமம் செய்யவும்.


🌞🌑🌒🌓🌔🌕🌖🌗🌘

நமது பிரமாணநூலாகிய ஆகமநூலிலும்,
நமது சைவத்தில் ஆழ்ந்த அறிவு பெற்ற பெரியோர்களது நூல்களிலும்,
சொல்லப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கருத்தினை தெரிவித்திருக்கிறேன்.
இதனை மறுப்போர் அதற்கான தக்க ஆதாரங்களை எடுத்துக்காட்டுவார்களாக!

🌞🌑🌒🌓🌔🌕🌖🌗🌘

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...