'ஆகமம் அறிவோம்' பகுதி 21: 'அபரக்கிரியைகளின் வகைகள்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

ங்களுக்கு இதுவரை நமது பிதிர்களை நோக்கிச் செய்யப்படும்,
சிரார்த்தம், தர்ப்பணம் போன்றவற்றைப் பற்றிய விபரங்களை,
விரிவாக எடுத்துச் சொன்னேன்.
இனி, தீட்சையில் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை நீக்கும்,
அபரக்கிரியைகள் பற்றிய விபரங்களைச் சொல்லப்போகிறேன்.
 
🦢  🦢  🦢
 
அபரக்கிரியைகளின் வகைகள்
தீட்ஷையில் ஒருவர் அறியாமல் செய்த பாவங்களைத் தீர்ப்பதற்கு,
செய்யப்படும் அபரக் கிரியைகள் 14 பிரிவுகளாய் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றின் விபரங்கள் பின்வருமாறு:-
01. அந்தியேஷ்டி
02. பாஷாணத்தாபனம்
03. உதகதானம் (தருப்பணம்)
04. பிண்டதானம்
05. அத்தி சஞ்சயனம்
06. நக்கினப்பிரச்சாதனம்
07. ஏகோத்தரவிருத்தி
08. நவச்சிராத்தம்
09. சங்கிதாசிராத்தம்
10. இடப உத்சர்ப்பசனம்
11. ஏகோத்திட்டம்
12. பஞ்சதசசிராத்தம்
13. சோதகும்பசிராத்தம்
14. சபிண்டீகரணம் 
 
🦢​  🦢  🦢
 
மேற்சொன்ன அந்தியேஷ்டி பிரிவுகள் பற்றிய விபரங்களை,
அறிவதற்கு முன்பாக அந்தியேஷ்டி என்பதன் பொருள் என்ன? என்பது பற்றியும்,
அதனை எவ்வாறு செய்வது?  என்பது பற்றியும் அறிதல் அவசியமாம்.
அந்தியேட்டி என்பதன் பொருள்,
கடைசியில் செய்யும் யாகம் என்பதாம்.
(அந்தி - கடைசி, இஷ்டி - யாகம்). 
இதுவே மரணத்தின் பின் செய்யப்படும் முதற் கிரியை என்று சொல்லப்படுகிறது.
தீட்ஷை பெற்ற  ஆசார சீலர்களான சைவர்களுக்கான அந்தியேஷ்டி பற்றி,
முதலில் நாம் அறிதல் வேண்டும்.
சைவர்கள் இறந்தபோது அந்தியேஷ்டி செய்வித்து, 
சிவ வடிவான அவர் தேகத்தைச் சிவாக்கினியில் சேர்த்தலாகிய,
சடங்கினைச் செய்க என்று நூல்கள் கூறுகின்றன.
அந்தியேஷ்டி செய்யின் சமய ஆசாரத்தில் இருந்து  தவறிய,
குற்றம் தீருவதால் அவ் ஆன்மாவுக்கு சிவத்துவ சித்தி உண்டாகுமாம்.
தீட்ஷை பெறாத ஆசாரம் அற்றவர்கள் இறந்தால்,
சிவாக்கினியினால் மந்திரம் இன்றி, 
அவரது உடலை தகனம் செய்து,
ஆசௌச (தொடக்கு) முடிவில், 
அந்தியேஷ்டி செய்து மற்றைய கிரியைகளையும் செய்தல் வேண்டுமாம். 
சுப்பிரபேதம், விமலம் ஆகிய ஆகமங்களின் இவ்விபரங்கள் கூறப்படுகின்றன.
 
🦢​  🦢  🦢
 
அடுத்ததாக அபரக்கிரியைகளில் இரண்டாவதான,
பாஷாணத்தாபனம் என்பது பற்றிய விபரங்களை நாம் அறிதல் வேண்டும்.
பாஷாணம் - கல், 
ஸ்தாபனம் - நடுதல். 
கல் நடுதல் என்பதே இத்தொடருக்கான பொருள். 
இது மரணத்தின் பின் செய்யப்படும் இரண்டாவது கிரியை ஆகும்.
அதனை எப்போது யார் யாருக்கு எங்ஙனம் செய்வது என்பது பற்றியும் நூல்கள் கூறுகின்றன.
அந்தியேஷ்டி முடிந்தபின் பாஷாணத் தாபனம் செய்க என்றும்,
சமய, விசேட, நிர்வாண தீட்ஷைகளைப் பெற்றோர்க்கும்,
அவற்றோடு ஆசாரிய அபிஷேகம் பெற்றவர்க்கும் 'ஈசாதி' நாமங்களாலும்,
சமய தீட்ஷை பெற்றவர்க்கும்,
சமய, விசேட தீட்ஷைகள் பெற்றவர்க்கும்,
கந்தாதி நாமங்களாலும் மும்மூன்று தர்ப்பணம் செய்க என்றும்,
கந்தாதி நாமம் பற்றி இக்கட்டுரைத் தொடரில் முன்னர் சொல்லப்பட்டிருக்கிறது.
பிண்டப் பிரதானமும் ஏகோத்தர விருத்தியும் புரிக என்றும் நூல்கள் சொல்கின்றன.
(சைவ ஆசௌச தீபிகை செய்யுள் - 149).  
 
🦢​  🦢  🦢
 
இனி அபரக்கிரியைகளில் மூன்றாவதான உதகதானம் பற்றி அறியலாம்.
உதகம்- நீர், தானம்- கொடை.
மூதாதையரை நினைந்து எள்ளும், நீரும் இறைத்து செய்யும் தர்ப்பணமே,
உதகதானம் எனப்படுகிறது.
இதுபற்றி முன்னரே விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
 
🦢​  🦢  🦢
 
அடுத்ததாக அபரக்கிரியைகளில் நான்காவதான பிண்டதானம் பற்றி அறிவோம்.
நான்கு வருணத்தாருக்கும் (பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்),
ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொன்றாக,
ஆசௌசம் (தொடக்கு) முடியும்வரை பிண்டம் இடுதலே பிண்டதானம் என்னும் கிரியையாம்.
 
🦢​  🦢  🦢
 
இவ்விடத்தில் ஒவ்வொரு வருணத்தாருக்குமான,
தொடக்கு (ஆசௌசம்) நாட்கள் எத்தனை என்பது பற்றி நாம் அறிதல் அவசியமாம்.
பிராமணருக்கு தொடக்கு பத்து நாட்கள். 
அவர்கள் நாளுக்கொன்றாகப் பத்துப் பிண்டம் இடல் வேண்டும். 
சத்திரியருக்கு தொடக்கு பன்னிரண்டு நாட்கள். 
அவர்கள் நாளுக்கொன்றாகப்  பன்னிரண்டு பிண்டம் இடல் வேண்டும்.
வைசியருக்கு தொடக்கு பதினைந்து நாட்கள். 
அவர்கள் நாளுக்கொன்றாகப்  பதினைந்து பிண்டம் இடல் வேண்டும்.
சூத்திரருக்கு தொடக்கு முப்பது நாட்கள். 
அவர்கள் நாளுக்கொன்றாக முப்பது பிண்டம் இடல் வேண்டும்.
மேற் சொன்ன இவ்விடயத்திற்கான பிரமாணம்,
உத்தரகாமிகம் பிதிர்யஞ்ஞவிதிப்படலம் - 18 இல் கூறப்பட்டுள்ளதாம்.
 
🦢​  🦢  🦢
 
அபரக்கிரியைகளில் ஐந்தாவதான அத்திசஞ்சயனம் பற்றி இனி நாம் அறியலாம்.
அத்தி (அஷ்தி)- எலும்பு, 
சஞ்சயனம் - பொறுக்குதல், 
எலும்பு பொறுக்குதல் என்பதுவே இத்தொடரின் பொருள். 
இக்கிரியையினையே காடாற்றுதல் என்பர். 
மேற்படி காடாற்றுதலை முதலாம், மூன்றாம், ஐந்தாம், 
ஏழாம், ஒன்பதாம் நாட்களுள் ஒன்றினுள்ளே செய்க என்றும்,
எடுக்கப்பட்ட அஸ்தியைப் புண்ணிய ஜலத்தில் இடுக என்றும் நூல்கள் உரைக்கின்றன. 
கபிலமுனிவருடைய விழித்தீயினால்,
சகரபுத்திரர் அறுபதினாயிரம் பேர் பாதாளத்தில் உடம்பு சாம்பலாக,
நரகத்துன்பம் அனுபவித்தனர். 
கங்கா தீர்த்தத்தை அவர்கள் எலும்பில் பாயச்செய்து,
நற்கதி அடைவிக்க விரும்பிய அவர்களின் வழித்தோன்றலான பகீரதன்,
நெடுங்காலம் சிவபெருமானை நோக்கித் தவம் இயற்றினான். 
அவனது தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான் உத்தரவிட,
பிரமலோகத்தில் இருந்த கங்கை வேகமாய்ப் பாய்ந்து வந்தது. 
சிவனார் அதனைத் தடுத்து தமது திருமுடியில் தாங்கி உலகைக் காத்தார். 
பின் பகீரதன் வேண்ட கங்கையின் சிறுதுளியை எடுத்துப் பூமியில் விடுத்தார். 
அது பாதாளத்தில் சென்று பகீரதனின் மூதாதையர் எலும்பில் பாய்ந்தது.
அதனால் அவர்கள் நற்கதி அடைந்தார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.
இச்சரித்திரத்தால் அத்தியைப் புண்ணிய தீர்த்தத்தில் இடுவதனால்,
ஆன்மா புண்ணிய உலகம் அடையும் என்பது நன்கு தெளிவாகிறது. 
 
🦢​  🦢  🦢
 
அடுத்து வரும் அபரக்கிரியைகள் 9 பற்றிய விபரங்களை அடுத்தவாரம் காண்போம்.
 
🦢​  🦢  🦢
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்