"சாண் ஏற முழம் சறுக்கும் ஜனநாயகம்" -பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்-

19 போய் 20 வந்தது 'டும்...டும்...டும்'
ல்லோரும் எதிர்பார்த்தது போலவே 20 ஆவது சீர்திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளடக்கமும் எல்லோரும் எதிர்வு கூறியபடியே வந்திருக்கிறது.
தவறே செய்யப்பட முடியாதவர் அதிமேதகு எனக்கருதும் இவ்வியாப்பு, அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வதைத் தடுக்கின்றது.
 
வாக்குரிமை ஆவதற்கு இரட்டைப்பிரஜாவுரிமை தடையில்லை.
ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு வயது குறைக்கப்பட்டுள்ளது.
இவை அந்த யாப்பில் வெறும் மூன்று விடயங்கள் மட்டும்தாம். இம்மூன்று விடயங்களும் எதற்காக - யார்யாருக்காக - உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதை, பச்சைக் குழந்தையும் அறியும்.
என்ன செய்வது?

'பெரும்பான்மை மக்கள் வழங்கிய ஆணை' என்ற ஒன்று நினைத்ததெல்லாம் செய்யும் கண்மூடித்தனமான செயற்பாடுகளைப் பூசி மெழுகுகின்றது.
பெரும்பான்மை வழங்கிய அந்த ஆதரவை விட்டுவிடுங்கள். 
என் கேள்வியெல்லாம் அரசோடு இணைந்து நிற்கும் சிறுபான்மையின மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றியதாகும்.

இந்த மாற்றங்கள் 'ஜனநாயகம்' எனும் நிலையில் எவ்வளவு பின்னடைவு ஆனது என்பது அனைவரும் அறிந்ததே. 
நல்லாட்சி என்று சொல்லப்பட்ட அரசின் ஆட்சியில் பல பலவீனங்கள் இருந்தன. 
ஆனால், அவர்களால் கொண்டுவரப்பட்ட 19ஆவது அரசியல் சீர்திருத்தத்தம் பல்வகைகளில் முற்போக்கானது என்பதை அனைவரும் உடன்படுவர்.

உண்மையான 'ஜனநாயகத்' தன்மையைப் பாதுகாப்பிற்கான பல ஆக்கபூர்வமான விடயங்கள் அதில் இருந்தன. 
மக்கள் பிரதிநிதிகளுக்கு - அவர்களது பாராளுமன்றத்துக்கு அதிகாரத்தை வழங்குவதிலும் நிறைவேற்று அதிகாரமுள்ள அதிமேதகுவிற்கு வழங்கப்பட்டிருந்த எல்லையற்ற ஆணைகளைச் சுருக்குவதிலும் 19 நிறையவே சாதகமான விடயங்களைக் கொண்டிருந்தது.

அந்த 19 இல் மக்கள் பண்பு என்ற சாண் ஏற மீண்டும் அரசியல் யாப்பு 20 இல் முழம் சறுக்கிவிட்டிருக்கின்றது. 
இந்நிலையில் தாம் மக்கள் சார்பினர்கள் என்றும் தம் கட்சிகள் ஜனநாயகமானவை என்றும் குரலிடும் அரச ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களான சிறுபான்மையினப் பிரதிநிதிகள்  என்னசெய்யப் போகிறார்கள் என்பதே என் கேள்வி.  

என்ன செய்வதா? 
இதை நிறைவேற்றுவதற்கு ஆராயாமல் கைதூக்குவதை விட, அவர்களுக்கு என்ன வழி இருக்கின்றது? 
மக்களையும் ஜனநாயகத்தையும் நேசிப்பதாகக் காட்டும் இப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிசயமாக ஏதேனும் புரட்சிகர முடிவு எடுக்கமாட்டார்களா என மக்களில் ஒருவனாக நான் எண்ணியதுண்டு.

ஆனால், 
தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்த - இரு உரைகளைக் கேட்டதில் இந்த நம்பிக்கை தவிடு பொடியாகி விட்டது. 
ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உரை. பழுத்த ஆளுமையுள்ள அரசியல்வாதிதான் அவர்.
சில நேரங்களில் சிறுபான்மையின மக்களின் முக்கிய விடயங்கள் குறித்துப் பேசியவர்தான்.

ஆனால் அவர் கூட 20 ஆவது திருத்தம் அவசியமானது என்கிறார்.  மட்டுமல்ல சரியானது எனவும் பேசுகின்றார்.
மற்றவர் அமைச்சர் காதர் மஸ்தான். அவரும் அப்படியேதான் சொல்கிறார். 
இவர்கள் அனைவருமே கடந்த நல்லாட்சியின் தோல்வியை அவர்கள் கொண்டு வந்த யாப்பின் தோல்வியாகக் காட்டுகிறார்கள்.

அது தவறு.
யாப்பில் தவறில்லை. தவறு கடந்த ஆட்சியாளருடையது.
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம், சகரான் குண்டு வெடிப்பைக் கையாண்ட விதம், மைத்திரி - ரணில் முரண்பாடு
இவைதான் கடந்த அரசின் குளறுபடிகளுக்குக் காரணம்.

இதைப் புரியாதவர்கள் அல்லர், அரச ஆதரவு சிறுபான்மையின பாராளுமன்ற உறுப்பினர்கள்.
எனினும், தாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்காக கை தூக்க வேண்டி வந்து விட்டதற்காக, ஜனநாயகப் பண்பு மிக்கதைத் தவறானது என்றும்,  ஜனநாயகப் பண்பு குறைந்ததைச் சரியானது என்றும் சொல்வது எவ்வளவு வேடிக்கையானது.

அறிவுக் கண் கொண்டு நோக்கும் எவரும் இதை இலகுவில் புரிந்து கொள்வார்கள்.
இந்த ஆதரவுப் பா.உ. க்களுக்கு ஒரு தயவான வேண்டுதல்.
உங்கள் தேவைக்காக கையை உயர்த்துங்கள், காரியமில்லை.
அதற்காக ஜனநாயகத்தை வீழ்த்துவதைச் சரி என்று, சரித்திரப் பழி தேடாதீர்கள்.

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்