'தமிழன் ஜீனில் இருக்கிறது' - பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன்

து முடியுடை மூவேந்தர் கோலோச்சிய காலம்.
பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு என –
அவரவர்க்குரிய நிலத்தை ஆண்டு வந்தனர்.
மூவரும் தமிழ் மன்னர்கள். 
அப்படி இருந்தால் எப்படி, ஒற்றுமை இருக்க முடியும்...?
தமிழன் என்றோர் இனமிருந்தால்
தனியே அதற்கோர் குணம் இருக்க வேண்டாமா?
இருந்நது.
சேரனைச் சோழன் களங் கண்டதும்
சோழனைப் பாண்டியன் பொருததுமாய்ப் போய் வீணேகழிந்தது
அழகிய காலம்.
தாம் வேறுவேறு எனக் கருதியதால்,
அடுத்தவன் வீழ்ச்சியில் பெரும் அகமகிழ்வு கொண்டார்கள்.
குருதி காணுதலில் ஏக குஷி.
வாள் வீசியதும் தமிழன்,
தோள் குறைந்தவனும் தமிழன்.
மொத்தத்தில் கரை புரண்டோடியது, தமிழ்க் குருதி.
கரம் துணித்தவனும் தமிழன்
சிரங் கொடுத்தவனும் தமிழன்
மொத்தத்தில் கரை புரண்டோடியது, தமிழ்க் குருதி.
இப்படியாக,
தமக்குள் முரண்பட்டு, 
ஒருத்தரை ஒருத்தர் தொலைத்து நின்ற மூவேந்தரும்
ஆச்சரியமாக, 
மிகமிக ஆச்சரியமாக
ஒரு புள்ளியில் ஒற்றுமைப்பட்டார்கள்.
அது எந்தப் புள்ளி?
ஆமாம்,
தமக்குப் 'பிறகு' அரசியல் செய்ய வந்த ஒருவன்
தமிழ் வழங்கும் தேசங்களில்
தம்மைவிடப் புகழ் பெறக் கண்டு
பொருமியது அவர்கள் தமிழ் உள்ளம்.
அப்படி அவர்களை அலைக்கழித்த
அந்த ஒருத்தனுக்குப் பெயர் பாரி. 
அவன் கொடையறிந்து, 
புலவர்கள் அவனுக்குப் பின்னால் போய்விட்டார்கள்.
உலகம் அவனோடு உறவு கொண்டாடியது.
தமிழ்த் தேசத்தில் காலாதி காலம்,
அப்பா – மகன் என மரபுரிமையாகக்
கோலோச்சிவந்த வேந்தர்களுக்கு, 
இந்த 'நேற்று வந்த' சிற்றரசன் 
புகழ் பெறுவது பொறுக்குமா? 
பொறுத்தால் அவர்கள் எப்படி
தமிழர் ஆவார்கள்?
அவர்களிடமும் இருப்பது தமிழ் ஜீன் அல்லவா?
உடனே, 
அந்த முடியுடை மூவேந்தரும் ஒற்றுமைப் பட்டுச்
செய்த காரியம்
அந்தப் புகழ்பெற்று வளர்ந்து கொண்டிருந்த
நேற்று வந்த பாரியை

கொன்றொழித்ததுதான்.
இந்தக் கறுப்பு வரலாற்றை
'அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் 
எம் குன்றும் பிறர் கொளார்.
இற்றைத் திங்கள் இவ் வெண்ணிலவில்....?'

என, இரங்கி இரங்கிக்
கண்ணீர் உகுக்கிறது, சங்கச் செய்யுள்.
இந்தக் கறைபடிந்த வெற்றிக்குப் பிறகென்ன நடந்தது?
பிறகென்னதான் நடக்கும்?
ஓடுவது தமிழ்க் குருதி அல்லவா?
அதன் உள்ளிருப்பது தமிழ் ஜீன் அல்லவா?
பாரியை
வீழித்தியபின்,
வெற்றிக் கொண்டாட்டத்திற்குள்ளாகவே
முரண்பட்டுக் கொண்டார்கள் மூவரும். 
இவன் அவனுக்குச் சேறடிக்க..
அவன் இவனுக்குக் கூழ் முட்டை எறிய
நாறத் தொடங்கியது தமிழ் வழங்கும் தேசம்.
இப்படியாக, ஒரு தமிழ் வேந்தர்
அடுத்த வேந்தரின்
நரகலிலும் நாற்றத்திலும் 
சுகங்கண்டு சுகித்திருந்த வேளையில்
மெல்லமெல்ல தம் நாடுகளுள்
காலூன்றிய களப்பிரரைக் கவனிக்கத் தவறிவிட்டார்கள்.
தம் முரணில் ருசி கண்டு கண்ணயர்ந்தவர்கள்
பொது எதிரியாகக் களப்பிரர் வந்ததைக் கண்டுகொள்ளவில்லை.
அக்களப்பிரர் யார்? - இன்றுவரை தெரியவில்லை.
வரலாறு கையை விரிக்கிறது.
ஒரு கொள்ளைக் கூட்டம் என்று சொல்வாரும் உளர்.
தமக்குள்ளான முரணில்.., தம் அடிபிடியில் ...
நேரம் தொலைத்துவிட்டு, 
தம்மை நம்பியிருந்த 
சேர, சோழ, பாண்டிய நாட்டு மக்களை
யாரென்று தெரியாத கொள்ளைக் கூட்டத்தாரிடம்
அடிமையாக்கினார்கள், தமிழ்த் தலைவர்கள்.
ஆம்.. அவர்களிடம் ஓடியது தமிழ்க் குருதி..
அதன் உள்ளிருந்தது தமிழ் ஜீன்

 

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்