'நெஞ்சிருக்கும் வரைக்கும்' - பகுதி 2: 'கேளுங்கள் தரப்படும்' -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
லகம் இறைவனின் படைப்பு.
வெளிப்படையான இவ் உண்மையைக் கூடப் பலர் ஒத்துக் கொள்கிறார்கள் இல்லை.
கையளவும் இல்லாத தம்முடைய புத்தியினால்,
கடலளவையும் தாண்டிய இறையின் கருணையை அளக்க முற்படும்,
அவ் அறிவிலிகளின் செயல் எனக்கு எப்போதும் ஆச்சரியம் தரும்.
தொடக்கம் எது முடிவு எது என்று தெரியாது விரிந்து நிற்கும் ஆகாயம்,
உயிரற்ற சடமாய் இருந்தாலும் ஓர் ஒழுங்குக்குள் தொடர்ந்து இயங்கி வரும் அண்டங்கள்,
உயர்  விஞ்ஞான அறிவாலும் வரையறுத்துக் கணிக்க முடியாத பஞ்சபூதங்களின் கொந்தளிப்பு,
என்பனவான, புத்தியை ஸ்தம்பிக்கச் செய்யும் எத்தனையோ விடயங்கள் நம் கண்முன் விரிந்திருக்க,
நம்மில் மேம்பட்ட சக்தி ஒன்றில்லை என்று வாதம் செய்வார்க்கு இன்றைய நம் அறிவுலகம்,
'பகுத்தறிவாளர்கள்' எனப் பெயரிட்டுள்ளதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.
 
🎀 🎀 🎀
 
நாத்திகத்தைக் கண்டிக்கத்தானா இந்தக் கட்டுரை? கேட்பீர்கள் - நிச்சயமாக இல்லை!
எனது வாழ்க்கையில் நான் பெற்ற ஆத்மிக அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காகவே,
இவ்வாரக் கட்டுரையை வரையத் தொடங்குகிறேன்.
கடவுள் இல்லை என்கின்றவன்,
அன்றும் இருந்தான்! இன்றும் இருக்கிறான்! என்றும் இருப்பான்!
அவனைப் பற்றி நமக்கு என்ன கவலை?
ஒரு பொருளை இல்லை என்று உரைக்க அறிவு தேவையில்லை.     
அது இருக்கிறது என்று நிறுவத்தான் அறிவு தேவை - நாம் அறிவாளிகளாய் இருப்போம்.
 
🎀 🎀 🎀
 
எந்தப் பிறவியில் நான் செய்த புண்ணியமோ தெரியவில்லை.
சிறுவயது முதலே எனக்கு இறைநம்பிக்கை அதிகமாகவே இருந்தது.
அப்போது என் தந்தையின் வேலை மாற்றம் காரணமாக, நாங்கள் சிலாபத்தில் வாழ்ந்து வந்தோம். 
நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
அங்கு நாங்கள் இருந்த வீட்டு வாசலில் ஒரு சண்டிமரம் நின்றிருந்தது.
எது என்னைத் தூண்டியதோ தெரியவில்லை.  
அம்மரத்தின் கீழ் ஒரு சிறு கொட்டகை போட்டு,
நானாகக் களிமண்ணால் ஒரு பிள்ளையார் செய்துவைத்துக் கும்பிடத் தொடங்கினேன்.
 
🎀 🎀 🎀
 
விளையாட்டுக்காகச் செய்த வேலை அது. 
ஆனால் ஆச்சரியமாக என் வீட்டிலுள்ளவர்களும், 
அந்தப் பிள்ளையாரைக் கும்பிடத் தொடங்கினார்கள். 
பின்னர் வீட்டுக்கு வந்து போகிறவர்களும் வழிபாடு செய்தார்கள்.
நான் அங்கு வைத்திருந்த உண்டியல், சில்லறைகளால் நிரம்பத் தொடங்கியது.
(ஓகோ! அந்த வேலை அப்போதே தொடங்கிவிட்டதா? சிலரின் கேலி காதில் விழுகிறது.)
அந்தப் பிள்ளையார் கேட்பதைத் தருவதாக என் தாயார் உறுதியாக நம்பினார்.
இது எனது முதல் வழிபாட்டு அனுபவம்.
பிறகு அந்தக் கோயில் என்னாயிற்று என்று ஞாபகத்தில் இல்லை.
 
🎀 🎀 🎀
 
போகப் போக எனது வழிபாடும் நம்பிக்கையும் மெல்ல மெல்ல அதிகரித்தன.
என் தாயாருக்கு உடல் நலம் குன்றினால் கோயில்களில் பார்த்த அனுபவத்தில்,
வீட்டின் சுவாமி அறையில் கும்பங்கள் பல வைத்து விளக்கேற்றி,
ஐயர்களைப் போல நானே பூசை செய்து அந்தக் கும்பநீரால் அம்மாவைக் குளிப்பாட்டுவேன்.
அம்மாவும் என் வழிபாட்டை 'சீரியஸாய்' எடுத்துக் கொண்டு,
என் செயல்களுக்கெல்லாம் உடன்படுவார்.
நான் இவற்றைச் செய்ததும் அம்மாவின் நோயும் மாறிவிடுவதுதான் பெரிய ஆச்சரியம்!
இப்படியாய் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த எனது பக்தி,
பின்னாளில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தோடு ஓரளவு ஸ்திரப்பட்டது.
அச்சம்பவம் பற்றித்தான் இம்முறை சொல்லப்போகிறேன்.
 
🎀 🎀 🎀
 
அப்போது நான் யாழ் இந்துக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
அக்காலத்தில்த்தான் சாயிபாபா வழிபாடு யாழில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
யாழ் கச்சேரி வீதி என்று நினைவு. டாக்டர் சோமசுந்தரம் என்பவரது வீடு.
வியாழக்கிழமை தோறும் அங்கு சாயி பஜனை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.
அவர்கள் வீட்டிலிருந்த பெரிய சாயிபாபா படத்திலிருந்து,
பாபாவின் முகத்தைத் தவிர மற்ற இடங்களிலெல்லாம் திருநீறு பொங்கிவழியும்.
அதைக் காண்பதே ஒரு புதிய அனுபவமாய் இருக்கும். அந்தப் புதிய அனுபவத்தால்,
யாழில் சாயி பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்தது.
 
🎀 🎀 🎀
 
அந்தப் பஜனைக்கு எனது மாமாவும் மாமியும் வாரந்தோறும் காரில் செல்வார்கள். 
எப்படி நடந்தது என்று தெரியவில்லை. நானும் அவர்களோடு இணைந்து கொள்வேன்.
அந்தப் பஜனை, பெரும்பாலும் வசதிபடைத்தோரின் சங்கமமாய் இருந்தது.
ஒரு மணிநேரம் பஜனை நடக்கும் - பின்னர் வீடு திரும்புவோம்.
வந்தோர்க்கிடையில், பஜனையில் பாட நடக்கும் போட்டியில்,
அவர்களது ஆத்மவளர்ச்சிக் குறைவு தெளிவாய் வெளிப்படும்.
கிறிஸ்தவப் பாங்கான, சிறிது பொய்மை கலந்த, அவர்கள் பேணும் கட்டுப்பாட்டில்,
என்  மனம் பெரிய அளவில் ஈடுபாடு கொள்வதில்லை.
ஆனாலும் அந்தப் பஜனையின் ஈர்ப்பில், இந்தக் குறைகள் எல்லாம் மறைந்துபோகும்.
 
🎀 🎀 🎀
 
இப்படியாய் ஆரம்பித்த எனது 'பாபா' பக்தி, மெல்ல மெல்ல வளர்ந்தது.
அந்தக் காலத்தில் சாயி பாபாவைப் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. 
இறை நம்பிக்கை அதிகம் இல்லாத எனது தந்தையார், 
பாபா செய்யும் சித்துக்களை எப்போதும் கிண்டல் பண்ணுவார்.
என் வீட்டாரின் அலட்சியத்தைத் தாண்டி,
என் சொந்தச் சேமிப்பில் பாபாவின் ஒரு படத்தை வாங்கினேன். 
பூஜை அறையில் அப்படத்தை வைக்க, வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை. 
அதனால் வீட்டின் ஒரு ஓரத்தில் அப்படத்தை வைத்து,
நான் தனியே பாபாவைக் கும்பிடத் தொடங்கினேன்.
 
🎀 🎀 🎀
 
அப்போதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. 
அது சாயிபாபாவின் ஒரு பிறந்த தினம். 
பாபாவின் பக்தர்கள் குறித்த அந்த நாளில் பிரசாதங்கள் செய்து வைத்துப் பாபாவைக் கும்பிடுவார்கள்.
எனக்கும் அப்படிச் செய்யவேண்டும் என்று ஆசை.
கேட்டாலும் எங்கள் வீட்டில் பிரசாதம் செய்து தரமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். 
நானாக ஏதாவது செய்யலாம் என்றால், என் கையிலும் பணமில்லை. மனம் வருந்தியது!
அந்தக் கவலையோடு கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்று விட்டேன்.
 
🎀 🎀 🎀
 
அப்போதெல்லாம் இரண்டு நேரப் பாடசாலை நடக்கும். 
மதிய இடைவேளையில் வீட்டிலிருந்து கொண்டுபோன உணவை உண்டுவிட்டு,
சிறிது ஓய்வெடுப்போம், பின் மீண்டும் வகுப்புக்கள் தொடங்கும்.
அன்றும் அப்படித்தான். மதிய இடைவேளையில் மனம் சோர்ந்து அமர்ந்திருந்தேன்.
என் மனம் முழுவதும் பாபாவின் பிறந்தநாளுக்கு ஒன்றும் செய்யமுடியவில்லையே என்னும் கவலை. 
அந்தக் கவலையில் இருந்த நான்,
தற்செயலாய் என் காற்சட்டைப் பொக்கட்டுக்குள் கையைவிட,
 ஆச்சரியம் காத்திருந்தது!
 
🎀 🎀 🎀
 
சொன்னால் நம்பமாட்டீர்கள்.
எனது பொக்கட்டுக்குள் முழுதாய் ஒரு ஐந்து ரூபாய்த்தாள் கிடந்தது. 
அப்போது ஐந்து ரூபாய், தாளாய் வந்து கொண்டிருந்தது
ஒருகொத்து அரிசி 70 சதம் விற்றகாலம் அது.- அப்போதெல்லாம் அது பெரிய காசு.
அவ்வளவு பெரிய காசு என் பொக்கட்டுக்குள் தவறிக் கிடந்திருக்க வாய்ப்பேயில்லை.
எனக்கு மெய்சிலிர்த்துப் போயிற்று.
உடனடியாய் அரை நேரத்தோடு கல்லூரியைக் 'கட்' பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்தேன்.
பாபாவின் பிறந்தநாளைத் தடல்புடலாய்க் கொண்டாடி முடித்தேன். 
என் பக்தியை ஸ்திரப்படுத்திய சம்பவம் இதுதான்.
 
🎀 🎀 🎀
 
நான் சொன்னதை வீட்டில் யாரும் நம்பவில்லை.
அவர்கள் தங்களது பணப்பெட்டியை எனக்குத் தெரியாமல் சோதித்தார்களோ என்னவோ? 
நான் சொன்னபோது மற்றவர்களும்கூட இதை நம்பத் தயாராய் இருக்கவில்லை.
ஆனால் நான் மட்டும் அது பகவானின் அருள் என்றே உறுதியாய் நம்பினேன். 
இதைப் படிக்கும் உங்களில் பலர் கூட,
என் பாக்கெட்டில் பணம் வந்ததற்கான காரணங்கள் பற்றிப் பலவிதமாய் ஊகிப்பீர்கள்.
'இவர் நல்லா 'டூப்பு' விடுகிறார், தன்னையும் ஒரு சாமியாராய்க் காட்டப் பார்க்கிறார்.' 
இப்படியாய் எனை நோக்கி நையாண்டிக் கணைகள் வரப்போவதையும் நான் அறிவேன்.
 அதுபற்றி எனக்குக் கவலையில்லை. இது எனது வாழ்வனுபவம். அவ்வளவுதான்!
 
🎀 🎀 🎀
 
முடிவுரையாக ஒன்று.
ஆத்மிகம் என்றால் என்ன என்கிறீர்களா? நம்பிக்கைதான் ஆத்மிகம். 
நம்புகிறவனுக்குக் கல்லும் கடவுள், நம்பாதவனுக்குக் கடவுளும் கல்லுத்தான்.
உண்மை மனஒருமைப்பாட்டோடு வணங்கினால் அவ் இறைவன்,
அழைத்தவர் குரலுக்கு வருவான், பார்த்தவர் கண்ணுக்குத் தெரிவான்.
நீங்களும் அழையுங்கள்! பாருங்கள்!
உங்களுக்கும் அந்த அனுபவம் ஏற்படும்.
 
🎀 🎀 🎀
(அனுபவம் தொடரும்)
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்