'முத்தமிழ்க்கம்பன்': பகுதி 02-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
   ✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦


லகம் போற்றும் கவிச்சக்கரவர்த்தி கம்பர்,
முத்தமிழ்த்துறையின் இரண்டாவதான இசைத்துறை பற்றி,
பதிவிடும் செய்திகளை இனிக் காண்போம்.

இசைத்துறை
இசைத்துறை பற்றிய செய்திகள்,
காவியத்தின் பலவிடங்களிலும்,
கம்பனாற் காட்டப்படுகின்றன. 
பல இசைவாத்தியங்களின் பெயர்களும்,
கம்பகாவியத்தினூடு நமக்குத் தெரியவருகின்றன. 
வாய்ப்பாட்டு, 
நரம்பு வாத்தியங்கள், 
காற்று வாத்தியங்கள், 
தோல் வாத்தியங்கள் போன்றவற்றை,
கம்பன் பல இடங்களிலும் குறிப்பிடுகின்றான்.
நரம்பு வாத்தியம், தோல் வாத்தியம் முதலியவற்றை,
பக்கவாத்தியங்களாக அமைத்துக் கொண்டு,
கச்சேரி செய்யும்முறை,
பாலகாண்டத்தின் ஒரு பாடலில்,
கம்பனால் தெளிவுபட விளக்கப்படுகின்றது.

'இறங்குவ மகரயாழ் எடுத்த இன்னிசை
நிறம்கிளர் பாடலான் நிமிர்வ அவ்வழி
கறங்குவ வள்விசி கருவி கண்முகிழ்த்து
உறங்குவ மகளிரோடு ஓதும் கிள்ளையே.'


இதுவே அப்பாடல்,
கண்டத் தொனியும், மகரயாழ் ஒலியும், மத்தள ஓசையும், 
ஒருங்கமைய,
மகளிர் பாடும் பாடல்களில் மயங்கி,
அவர்கள் வளர்க்கும் கிளிகள் உறங்கின எனும்,
செய்தியைச் சொல்லும் இப்பாடலில்,
பக்கவாத்தியங்களின் துணையோடு,
கச்சேரி செய்யும் அமைப்பை விளக்கம் செய்த கம்பன்,
நரம்பு வாத்தியங்களைக் கையாளும் முறைமை பற்றியும், 
அவ்வாத்தியங்களில்  தனித்து வாசிக்கப்பட்ட இசைக்கச்சேரி பற்றியும்,
மிதிலைக் காட்சிப் படலத்தின் ஒரு பாடலில் காட்டுகிறான்.
இதோ அப்பாடல்,

'வள்ளுகிர்த் தளிர்க்கைநோவ மாடகம் பற்றி வார்ந்த
கள்ளென நரம்பு வீக்கிக் கையொடு மனமும் கூட்டி
வெள்ளிய முறுவல் தோன்ற விருந்தென மகளிரீந்த
வெள்விளிப் பாணித் தீந்தேன் செவிமடுத்து இனிது சென்றார்.'


கூர்மையான நகங்களையுடைய, 
தளிர் போன்ற தமது மெல்லிய விரல்கள் நோகும்படி,
வீணையின் முறுக்காணிகளைப் பிடித்துத்திருகி, 
ஒழுகுகின்ற தேன் தாரகைகள் போன்ற,
அவ்வீணை நரம்பை இறுகக் கட்டி, 
கைவிரலின் குறிப்புடன் மனதையும் பதிய வைத்து, 
புன்னகையுடன் பெண்கள், வழங்கும் இசைவிருந்தை,
காதால் பருகியபடி இராம இலக்குவர்கள் சென்றனர்|,
என்பது இப்பாடற் கருத்து.
கோடு, பத்தர், ஆணி, நரம்பு, மாடகம் என்னும்,
யாழ் உறுப்புக்களுள், மாடகம் என்பது,
நால்விரலளவான பாலிகை வடிவாய் நரம்பைவீக்கும் கருவி.
கீதத்திலன்றி வேறொன்றில் மனம் வையாமல்,
வாத்தியத்தில் மனமொன்றி வாசிக்கும் தன்மையையும்,
மனோவேகமாகக் கையை விசைப்படச் செலுத்தி,
வாசித்தலின் அவசியத்தையும்,
'கையொடு மனமும் கூட்டி' எனும் தொடர், குறித்து நிற்கிறது.
ஷவெள்ளிய முறுவல் தோன்ற| என்றதனால்,
அதிக சிரமமில்லாமல்,
அரிய பாடல்களையும் எளிதிற் பாடுந்தன்மையும், 
முற்பயிற்சியின் அவசியமும் உணர்த்தப்படுகின்றன.
அன்றியும், நிறைந்த ஒத்திகையும், முழுமன ஈடுபாடும்,
ஆற்றலும் கொண்ட கலைஞனின் இசைமுயற்சி,
கேட்பார்க்கு மட்டுமன்றி,
அவர்க்கும் இன்பம் பயக்கும் என்பதும் பெற்றாம்.
இவைதவிர, 
இசைத்தமிழுக்கு இயற்றமிழோடு இருக்க வேண்டிய, தொடர்பையும்,
கம்பன் அதே பாலகாண்டத்தில் தெளிவுபடுத்துகிறான்.
🌺 🌺 🌺
இயற்பாடல் கொண்டிருக்கும் பொருள் கணிக்கப்பட்டு, 
அப்பொருளின் அடிப்படையான உணர்வு தீர்மானிக்கப்பட்டு, 
பின்,
அவ்வுணர்வை வெளிப்படுத்தும் இராகத்தைத் தேர்ந்தெடுத்து,
பாடலுடன் பொருத்திப் பாடும் அவசியத்தை,
இசைக்கலையின் அத்தியாவசியத்தேவையாய்,
கம்பன் வெளிப்படுத்துகின்றான்.
இயல், இசை தொடர்பினை,
பருந்தினைத் தொடர்ந்து செல்லும் நிழலோடு ஒப்பிடும்,
கம்பன் பாடல் இஃது.

'பொருந்திய மகளிரோடு வதுவையிற் பொருந்து வாரும்,
பருந்தொடு நிழல் சென்றென்ன இயல்இசைப் பயன்துய்ப்பாரும்,
மருந்தினும் இனிய கேள்வி செவியுற மாந்துவாரும்,
விருந்தினர் முகம் கண்டன்ன விழா அணி விரும்புவாரும்'


இப்பாடலில் வரும்,
'பருந்தொடு நிழல் சென்றென்ன இயல்இசைப் பயன்துய்ப்பாரும்,'
எனும் அடி ஆழ்ந்த பொருள் கொண்டது.
பருந்தொடு நிழல், இயல், இசை எனும் சொற்கள்,
நிரல், நிரையாய் இணைக்கப்பட்டுள்ளதால்,
இயல் பருந்துக்கும்,
இசை அதன் நிழலுக்கும் உவமையாவதை உணரலாம்.
இயலையும் இசையையும்,
பருந்தாகவும் நிழலாகவும் உவமித்ததால்,
வடிவில் நின்று நிழல் என்றும் பிரியாதிருப்பதுபோல்,
இயலும் இசையும் என்றும் பிரியாதிருத்தல் வேண்டும் எனும்,
உண்மை உணர்கிறோம்.
வடிவுக்கும், நிழலுக்குமான தொடர்பில்,
சிலவேளை, வடிவைவிட நிழல் முந்துதலும்,
சிலவேளை, நிழலைவிட வடிவு முந்துதலும் இயல்பு.
அவ் அடிப்படை கொண்டு,
தேவைநோக்கி இயலை, இசை முந்துதலும்,
இசையை, இயல் முந்துதலும்
இவ்வுவமைமூலம், மறைமுகமாய் உணர்த்தப்பட்டது.
நிலத்திலுள்ள பொருளொன்றின் நிழல்,
உச்சிவேளையில், வெளிப்படாது அவ்வடிவுள் ஒடுங்கும்.
வானத்தில் உள்ள பொருளின் நிழலோ என்றும் தோற்றி நிற்கும்.
அதுபோலவே,
இயல், இசைக் கலப்பில்,
என்றும் ஒன்றையொன்று முழுமையாய் விழுங்குதல் ஆகாதாம்.
வடிவத்தினதும், நிழலினதும் தொடர்பிற்கு,
பருந்தின் நிழலை உவமையாக்கியது,
இக்கருத்து நோக்கியே.
இயற்பாடல் கருத்து வானளாவி விரிய,
அவ்விரிந்த கருத்தை, 
இசை, மண்ணிற்கு உணர்த்தும்.
எளிமையாய்த் தொடமுடியாத உயர்ந்தோர் கருத்தை,
பாமரர்க்கும் உரியதாக்கும் கருவி இசையாம்.
இக்கருத்தை விளக்கம் செய்யவே,
வானத்திலிருக்கும் பருந்து இயலுக்கும்,
மண்ணிலிருக்கும் நிழல் இசைக்குமாய் உவமிக்கப்பட்டன.
பருந்து வானத்திற் பறந்தாலும்,
எப்போதும் மண்நோக்கியபடியே இருக்கும்.
அதுபோலவே, 
இயற்பாடல்கள் வான்நோக்கி உயரினும்,
பொருளால் மண்நோக்கி இருக்க வேண்டும் எனும்,
இயற்றுறைசார் உண்மையையும்,
கம்பனின் உவமை மறைமுகமாய்ச் சுட்டிநிற்கிறது.
இங்ஙனம், குறித்த ஒரு தொடர்மூலம்,
இயல், இசை தொடர்பினை,
தெளிவாய்க் கம்பன் நமக்கு விளக்கம் செய்கிறான். 
இவை, இசைபற்றிக் கம்பன் தரும் செய்திகள்.
(தொடரும்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்