'வடிவினை முடியக் கண்டார்?' பகுதி 02: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

லகை உய்விக்கக் காவியம் செய்தவன் கம்பன்.
அவன் தன் காவியத்தில் உண்மை இறைநிலையை உணர்த்தவென,
அமைத்த காட்சிகள் பல. 
அவற்றுள் சிலவற்றைக் காண்பாம்.

🌸 🌸 🌸 🌸

பாலகாண்டம் - ஆற்றுப்படலம்.
கோசலத்தில் பாயும் சரயுநதியின் வெள்ளம் பற்றி,
வர்ணிக்கத் தலைப்படுகிறான் கம்பன்.
இமயமலையின் உச்சியின் ஓரிடத்திலிருந்து பிறக்கும்,
சரயுநதியின் வெள்ளம்,
ஏரி, அருவி, தடாகம் முதலிய பல இடங்களில் பொருந்தி,
பல பெயர்களைப் பெற்று பரவிச் செல்கிறது.
இக்காட்சியை உவமையால் விளக்க நினைக்கும் கம்பன்,
ஒன்றேயான பரம்பொருள்,
பல சமயத்தவரின் சூழ்ச்சிக்கு உட்பட்டு,
பலவிதமாகச் சொல்லப்படுவது போல,
அக்காட்சி இருக்கிறது என்று பாடி முடிக்கிறான்.

கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்
எல்லையில் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈதென்னத்
தொல்லையில் ஒன்றேயாகித் துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்
பல்பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல் பரந்த தன்றே.

இப்பாடலில்,
வேதங்களாலும் சொல்லமுடியாத அப்பரம்பொருள்,
ஆதியில் ஒன்றேயாய் இருந்து,
பின் பல சமயத்தவர்களும்,
தத்தமது சூழ்ச்சியால் வேறு வேறாய் உரைக்கப் பிரிந்துபோனது போல,
சரயுநதி நீரும் பிரிந்து வேறுவேறாயிற்று என்கிறான் கம்பன்.
(சூழ்ச்சி-ஆராய்ச்சி)

🌸 🌸 🌸 🌸

இப்பாடலில்,
இறைப் பொருள் ஒன்றே எனவும், 
ஒன்றேயான அதனைச் சமயங்கள் பலவாய்ப் பிரித்துரைக்க,
அஃது பலவாய் விரிந்தது எனவும்,
சுட்டுகிறான் கம்பன்.
இப்பாடலின் மூலம் ஒன்றேயான பரம்பொருள்,
சமயங்களால் பலவாய்ப் பிரிக்கப்பட்டது எனும் உண்மையை,
கம்பன் வலியுறுத்தலைக் காணலாம்.

🌸 🌸 🌸 🌸

இதே காண்டத்தில் மற்றொரு இடத்தில்,
தாம் இறைவனைக் கண்டுவிட்டதாய் கூறும் சமயிகளும் கூட,
இறையின் ஒவ்வோர் பாகத்தையே கண்டனரன்றி,
அப்பரம்பொருளை முழுமையாய்க் கண்டாரல்லர் என்பதனை,
அழகுபட சொல்கிறான் கம்பன்.
அந்த இடத்தினையும் காண்பாம்.

🌸 🌸 🌸 🌸

பாலகாண்டம் - உலாவியற்படலம்.
மிதிலைவீதியில் இராமன் உலாப் போகிறான்.
அவனைக் காணும் பெண்களின் நிலையை,
கம்பன் பல பாடல்களாலும் வர்ணிக்கிறான்.
அப்பாடல்களில் ஒன்று இஃது.

தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார் ஆரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்.

உலாச் செல்லும் இராமனைக் காணும் பெண்களில் ஒருத்தி,
இராமனின் தோளைக் கண்டு அதன் அழகில் மயங்கி,
தன் கண்பார்வையினின்றும் அவன் மறையும் வரையும்,
அத்தோள்களையே பார்த்து நிற்கிறாள்.
அதுபோலவே மற்றொருத்தி,
இராமனின் தாமரைப்பூவை ஒத்த தாள்களையும்,
வேறொருத்தி அவனது பெரிய கைகளையும் கண்டு மயங்கி,
இராமனின் வடிவினை முழுமையாய்க் காணாமல்,
முதல் பெண்ணினைப் போலவே தாம்தாம் கண்ட,
அவ்வவ் உறுப்புகளை மட்டுமே கண்டு நிற்கிறார்கள்.

🌸 🌸 🌸 🌸

தோளைக் கண்டவள் இராமனின் தாளைக் காணவில்லை.
தாளைக் கண்டவள் இராமனின் தோளைக் காணவில்லை.
தோளையும், தாளையும் கண்டவர்கள்,
அவனது தடக்கையினைக் காணவில்லை.
தடக்கையைக் கண்டவள் இராமனது தோளையும், தாளையும் காணவில்லை.
இவர்தம் இம்மயக்கநிலையைச் சுட்டுதற்காய்,
ஆரே வடிவினை முடியக் கண்டார்? என வினா எழுப்புகிறான் கம்பன்.
ஆனால் இம்மூவருமோ,
தாம் இராமனைக் கண்டுவிட்டதாகவே நினைகின்றனர்.

🌸 🌸 🌸 🌸

இராமனின் ஒருபாகத்தை மட்டும் கண்டுவிட்டு,
இராமனை முழுமையாய்க் கண்டுவிட்டதாய் உரைக்கும்,
இப்பெண்களின் நிலையை உவமிக்க நினைக்கும் கம்பன்,
இறையின் ஒரு கூறினை மட்டும் கண்டுவிட்டு,
இறையை முழுமையாய்த் தாம் கண்டதாய் நினையும் சமயிகளை,
இவர் தமக்கு உவமையாக்குகிறான்.
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்.

🌸 🌸 🌸 🌸

ஊழ் என்ற சொல்லுக்கு முறைமை என்றும் அர்த்தம் உண்டு.
தத்தமக்கென ஒரு முறைமையைக் கொண்டு இயங்கும் சமயிகள்,
இறையின் உருவைத் தாம் கண்டுவிட்டதாய் உரைக்கும் அறியாமைச் செயலை,
இப்பெண்களின் அறியாமைக்கு உவமையாக்குகிறான் கம்பன்.

🌸 🌸 🌸 🌸

மற்றைய உறுப்புக்கள் பலவும் இருக்க,
இப்பெண்கள் இராமனது தோள்களையும், தாள்களையும்,
தடக்கைகளையும் தனித்துக் கண்டதன் காரணம் என்ன?
இக்கேள்விக்கு அழகுறப் பதிலுரைக்கிறார்,
உரையாசிரியர் வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் அவர்கள்.
இராமனின் ஆற்றல்கள்பற்றி முன்னமே கேள்வியுற்றதால்,
அப்பெண்கள், தாடகையை வதம் செய்த தோள்களையும்,
அகலிகைக்கு சாப நீக்கம் தந்த தாள்களையும்,
சுயம்வரத்தில் சிவதனுசுவை முறித்த தடக்கைகளையும்,
குறிப்போடு நோக்கினராம்.
வை.மு.கோவின் இந்த இரசனை உரை,
உரையாசிரியர்களினூடாக மூலநூலைக் கற்கும் அவசியத்தை,
நமக்கு உணர்த்துகிறது.

🌸 🌸 🌸 🌸

இராமனின் முழுவடிவையும் காணாது,
அப்பெண்கள் அவனது ஒவ்வோர் உறுப்பினை மட்டும் கண்டதன் காரணம்.
அவர்தம் கண்களின் குறைபாடோ? என வினாப் பிறக்கும்.
அஃதன்று என மறுக்கிறான் கம்பன்.
பாடலில் வரும் வாள் கொண்ட கண்ணார்  எனும் தொடர்,
அப்பெண்களின் கண்கள் வாளை ஒத்த கூர்மை உடையன என்பதை,
உறுதிப்படுத்துகின்றது.

🌸 🌸 🌸 🌸

வாளை ஒத்த கூர்மையான கண்களைக் கொண்டிருப்பினும்,
அப்பெண்களால் இராமனின் ஓர் உறுப்பினை மட்டுமே காண முடிந்தாற்போலவே,
ஒரே இறையைப் பலகூறாய்ப் பிரித்துக் கொண்ட சமயிகளின் அறிவு, 
எத்துணை கூர்மை பெற்றிருப்பினும்,
இறையின் ஒவ்வொரு பகுதியை மட்டுமே காண்கிறது.
இச்செய்தியை இப்பாடல் மூலம் வலியுறுத்துகிறான் கம்பன்.  
நம் சிற்றறிவு எத்துணை கூர்மையதேனும்,
பேரறிப் பொருளான இறையினை அஃது முழுமையாய்க் காணாதன்றோ!
அங்ஙனம் இறையை முழுமையாய்க் காண முடியாமை,
சமயவாதிகள்தம் அறிவின் குறையன்றாம்.
இறையின் பேரறிவின் பெருமையாமென,
மறைமுகமாய் கம்பன் உணர்த்த மகிழ்கிறோம் நாம்.

🌸 🌸 🌸 🌸

தாம்தாம் தனித்தனி ஒவ்வொரு முறைமையைக் கொண்ட சமயங்களிலே,
ஊழ் கொண்ட சமயத்து (ஊழ்-முறை)
கூறப்படுகிற இறையினது வடிவங்கள் எல்லாம்,
அதனது பகுதிகளேயன்றி முழுவடிவன்றாம்.
எனவே ஒவ்வொரு சமயமும் காட்டும் இறைவடிவங்களும்,
இறையினது முழுமையை உணர்த்தா.
இறையின் ஏதோ ஒரு கூறினையே அவை உணர்த்தும்.
அக்கூறினைக் கண்டவர்கள், 
தாம் இறையைக் கண்டு விட்டதாய் உரைப்பது போலவே,
அப்பெண்களும் இராமனைக் கண்டு விட்டதாய்,
உரைத்து நிற்கின்றனர் என்கிறான் கம்பன்.
அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்.
இங்கு மற்றொரு கேள்வி பிறக்கிறது.

🌸 🌸 🌸 🌸

(அடுத்தவாரம் தொடரும்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்