பெருக்கத்து வேண்டும் பணிதல் ! - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

 பெருக்கத்து வேண்டும் பணிதல் ! - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
 

ளம் கூசி நிற்கிறார்கள் உண்மைத்தமிழர்கள்.
காரணம், யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த மோதல் சம்பவம்.
இணையங்கள் சம்பவத்தை இயன்றவரை விபரித்து விட்டதால்
அது பற்றிய தனி விபரிப்பைத் தவிர்க்கிறேன்.
சரி, பிழை என்பவற்றிற்கு அப்பால்,
நாடளாவி இச்சம்பவம் தரப்போகும் அதிர்வுகளை நினைக்க மனம் பதறுகிறது.
இத்தனை அனுபவங்களின் பின்னும் பின் விளைவுகளைச் சிந்தியாத
கற்ற இளைஞர்களின் நிதானமற்ற செயற்பாடு சலிப்பைத் தருகிறது.
இரு இன இளைஞர்களையும்தான் சொல்கிறேன்.
இன அடக்குமுறையில் விருப்புக் கொண்ட எதிரிகளின் கருத்தை,
வலிமைப்படுத்தப் போகிறது இச்சம்பவம்.
 



இத்தனைக்கும் நம் தமிழ்ச் சமூகத்தின்,
ஆற்றல்மிகு இளையதலைமுறையினர் கற்கும்,
உயர் கல்விப்பீடத்தில் இச்சம்பவம் நடந்திருப்பதுதான் வேதனைக்குரிய விடயம்.
பாதிப்புற்ற இனத்தைப் பக்குவமாய் வழிநடத்தவேண்டிய,
நாளைய தலைவர்களின் இன்றைய தீர்க்க தரிசனமின்மை,
‘இனத்தின் எதிர்காலம் என்னாகப்போகிறதோ?’ என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
சமூகப் பொறுப்பாளர்கள் அதிர்ந்து நிற்கின்றனர்.



இச் சம்பவம் நடந்து முடிந்து இரண்டு நாட்கள் கழிந்துவிட்ட இன்றைய நிலையிலும்,
தமிழ்த்தலைவர்கள் யாரும் இதுபற்றி
வாய் திறக்காமல் இருப்பது ஆச்சரியம் தருகிறது.
அவர்களுக்கு இனத்தின் எதிர்காலம் பற்றிய கவலையை விட,
அடுத்த தேர்தல் பற்றிய கவலையே அதிகம் போலும்.
பல்கலைக்கழக மாணவர்களின் பகை வந்துவிடுமோ எனும் அச்சத்தில்,
ஞானமின்றி மோனம் காக்கும் அவர்கள் நிலையைக் காண வயிறு எரிகின்றது.
நல்ல தலைவர்கள்!
பெரும்பாலும் இனி வரப்போகும் அவர்களின் அறிக்கைகள்கூட,
எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாய் அமையலாம்.
கடவுள் காக்கட்டும்!



சம்பவத்தின் எதிர் விளைவுகள் நாடளாவிய ரீதியில் மெல்ல ஆரம்பித்திருக்கின்றன.
கதிர்காமம் சென்ற தமிழ் யாத்திரிகள் தாக்கப்பட்டதாய் இணையத்தில் செய்தி வந்திருக்கிறது.
விமல் வீரவம்ச வழமை போல இனப் பகையைத் தூண்டி அறிக்கை விட்டிருக்கிறார்.
இவ் அதிர்வுகளை அரசாங்கம் அலட்சியம் செய்தால்,
பிரச்சினைகள் மேலும் வளரக்கூடும்.
அரசாங்கத்தை வீழ்த்த ஆவலோடு காத்திருக்கும் அணியினருக்கு,
இச்சம்பவம், வெறும்வாய் சப்பியோர்க்குக் கிடைத்த அவல்பிடியாய் ஆகியிருக்கிறது.
நிச்சயம் அவர்கள் இச்சம்பவத்தை தம் சார்பாய்ப் பயன்படுத்த முயல்வார்கள் என்பதில் ஐயமில்லை.
அங்ஙனம் நிகழ்ந்தால்,
அரசு அவர்தம் முயற்சிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
இல்லாவிட்டால் பாதாளத்தில் இருந்து மெல்ல தலைதூக்கத் தலைப்பட்டிருக்கும் தேசம்,
மீண்டும் பாதாளத்தின் அடிவரை சென்றுவிடும் என்பதில் ஐயமில்லை.
இளையோரின், இளமைக்கே உரியதான உணர்ச்சிவயப்பாட்டினை,
பெரிதுபடுத்தாமல் தெளிவுபடுத்த வேண்டியது நல்லோர்தம் கடமையாம்.



இரு இனத்தாரும் தம்மைத்தாம் சமன் செய்து,
நடுநிலையோடு இச்சம்பவத்தைக் காணவிழைதலே,
எதிர் விளைவுகளை நீக்கும் ஒரே வழி.
இரு இனத்திலும் உள்ள நடுநிலையோடு கூடிய சான்றோர்கள்,
இப்பிரச்சினையை ஆழ ஆராயவேண்டும்.
அங்ஙனம் ஆராயத் தலைப்படும் நல்லோர்க்காய்,
ஒருசில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.
முதலில் சிங்கள இனத்தாரின் சிந்தனைக்குச் சில செய்திகள்.



இச் சம்பவத்தால் நீங்கள் ஆத்திரங்கொள்ளும் முன்,
அறிவுபூர்வமாய் சிந்திக்கவேண்டிய சில விடயங்கள் உள்ளன.
சற்று வலித்தாலும் உண்மைகளை அங்கீகரிப்பீர்கள் எனும் நம்பிக்கையில்,
அவற்றைக் கீழே வரிசைப்படுத்துகிறேன்.



இனங்களுக்கிடையிலான பகையுணர்வை,
முதலில் வளர்க்கத் தலைப்பட்டவர்கள் நீங்கள்.
பெரும்பான்மைப் பலத்தை மட்டும் தகுதியாய்க் கொண்டு,
மாற்றினத்தின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் முறைமையை,
இம்மண்ணில் முதலில் விதைத்தவர்கள் நீங்கள்.



கலவரங்கள் என்ற பெயரில்,
தமிழ்மக்களின் உயிர், உடமை என்பவற்றை,
வீதி என்றும் பாராமல் வேட்டையாடிப் பறித்து,
அருவருக்கும் விளையாட்டை ஆரம்பித்தவர்கள் நீங்கள்.



தரப்படுத்தல் எனும் பெயரில்,
தமிழ் இளைஞர்களின் கல்வி பறிக்கப்பட்டபோது,
தமது அறிவு அநியாயமாக்கப்படுகிறதே என்று,
தமிழ் இளைஞர்கள் கதறி அழுகையிலும்,
அதற்காய்ப் பரிதாபப்படாமல் ஆனந்தித்து நின்றவர்கள் நீங்கள்.


போர் முடிந்து தற்போதைய அரசியல் மாற்றம் நிகழும்வரை,
இனவெறியர்கள் தம் அதிகாரத்தை நிறுவுவதாய்க் கூறி,
மாற்றார்தம் மதவழிபாட்டுத் தலங்களைக் கூட உடைத்துச் சிதைத்தபோது,
அதனை அங்கீகரித்து மௌனித்திருந்தவர்கள் நீங்கள்.



தீவிரவாதத்தை அழிக்கிறோம் என்ற பெயரில்,
ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டபோது,
அதுபற்றிய எந்த அனுதாபமும் இல்லாமல்,
வெற்றி மமதையில் இருந்த பழைய ஜனாதிபதியின் அறைகூவலுக்கு ஆட்பட்டு,
இறந்த அப்பாவித் தமிழர்களை எவ்விதத்திலும் கருத்தில் கொள்ளாமல்,
வெற்றிக் கொண்டாட்டம் நடத்தியவர்கள் நீங்கள்.



போரினால் கதியிழந்து தமிழர்கள் தவித்து நிற்கையில்,
அதுவரை தமிழில் பாடி வந்த தேசியகீதத்தைக் கூட,
தமிழர்கள் இனிச் சிங்களத்தில்த்தான் பாடவேண்டும் என,
கடந்த அரசு மறைமுகமாய் வலியுறுத்திய போது,
அதை அங்கீகரித்து நின்றவர்கள் நீங்கள்.



இவ்வளவும் ஏன்?
போர் முடிந்த பின்னர்கூட,
உங்கள் பகுதிப் பல்கலைக்கழகங்களில் நடந்த சில பட்டமளிப்பு விழாக்களில்,
தம் கலாசார உடையோடு கலந்துகொள்ள வந்தார்கள் என்பதற்காக,
மாற்றின மாணவர்களுக்குப் பட்டம் வழங்க மறுத்து,
திருப்பி அனுப்பிய காட்சியை ரசித்துப் பார்த்திருந்தவர்கள் நீங்கள்.



மொத்தத்தில், பெரும்பான்மை பலம் இருந்தால் போதும்,
நீதி பற்றி கவலைப்படத்தேவையில்லை என்ற பாடத்தை,
இம்மண்ணின் இளையோர் மனதில் விதைத்த குற்றம் உங்களுடையதுதான்.



அவ் இழிந்த பாடத்தை,
பெரும்பான்மையினராகிய நீங்கள் தான்,
எங்கள் சிறுபாண்மை இளைஞர்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள்.
இன்று அப்பாடம் உங்களை நோக்கி திரும்ப,
நீங்கள் பதறுவதைக் காணுகையில்,
என்ன இது மானுடம் என சலிப்பு வருகிறது.



உங்கள் மீது குற்றம் சாட்டி எங்கள் இளைஞர்களின் தவறை,
நாங்கள் மறைக்கப் பார்ப்பதாய் தயவு செய்து கருதிவிடாதீர்கள்.
உங்கள் குற்றங்களை வரிசைப்படுத்தியதன் நோக்கம் அதுவன்று.
காலப்பலம் கொண்டு நீங்கள் செய்த தவற்றை,
நிச்சயம் தமிழ் அறிஞர்கள் ஒருக்காலும் செய்யமாட்டார்கள்.
எங்கள் இளைஞர்கள் பிழையான வழியில் சென்றால்,
மூத்தவர்களாகிய நாங்கள் உங்களைப் போல்,
அதைக் கைகட்டி ரசித்திருக்க மாட்டோம்.
நிறுத்துங்கள்! என எம் இளைஞர்களைத் தடுக்கும்,
துணிவும், உரிமையும், நேர்மையும் எங்களிடம் உள்ளன.



இவற்றைக் கூட,
உங்களிடம் இவையெல்லாம் இல்லை என்று,
கேலி செய்யும் நோக்கத்தில் நான் எழுதவில்லை.
எங்கள் கடமையை நாம் சரிவரச் செய்வோம் என,
உங்களுக்கு உறுதிதரும் நோக்கத்திலேயே எழுதுகிறேன்.



எனது அன்புச் சிங்களச் சகோதரர்களே!
நிறைவாக உங்களுக்கு நான் ஒன்றைச் சொல்லவேண்டும்.
அறநெறிகளை ஆயிரமாய்ச் சொல்லிவைத்த,
பெரியோர்தம் வழியில் வந்தவர்கள் நாங்கள்.
தவறை யார் செய்தாலும் இது தவறென்னச் சொல்லும்,
பலத்தை அப்பெரியவர்கள் எங்களுக்குத் தந்திருக்கிறார்கள்.
எனவே இத்தகு பிழைகள் இனி எம் மண்ணில் நடவாமல் தடுக்க,
எம்மால் இயன்றவரை முயல்வோம் என,
உங்களுக்கு உறுதி சொல்ல விரும்புகிறேன்.



உங்களுக்கு மட்டுமென்னவாம்?
உங்களால் வணங்கப்படுகிற புத்தர் பெருமானும்,
‘தர்மம் சரணம் கச்சாமி’ என்று,
உபதேசித்துவிட்டுத்தானே சென்றிருக்கிறார்.
அந்த மகானின் வழியைப் பின்பற்றுவதாய்ச் சொல்லும் நீங்கள்,
அவர்தம் ஆப்த மொழியைப் பின்பற்றாததால்த்தான்,
இத்தேசம் சிதைந்தது என்பதை தயைகூர்ந்து மறந்து போய்விடாதீர்கள்.



எங்கள் மேல் பிழையே இல்லை என்று,
நான் சொல்லவருவதாய் உங்களுக்குப்படும்.
பிழைகள் எல்லாரிடமும் தான் இருக்கின்றன.
பிழைகள் இல்லாத உலகம் என்ற ஒன்று என்றும் இருக்கப்போவதில்லை.
ஆனால் பிழைகளை அங்கீகரிக்கும் உலகம் இருக்கக்கூடாது.
பெரும்பான்மை பலம் இருக்கிறது என்ற காரணத்தால்,
நீங்கள் பிழைகளை அங்கீகரித்தது போல,
தமிழினச் சான்றோர்கள் ஒருக்காலும் பிழைகளை அங்கீகரிக்கமாட்டார்கள் என்பதை,
என்னால் உறுதிபடச் சொல்லமுடியும்.
இதை நீங்கள் நிச்சயம் நம்பலாம்.



ஆயிரம் பேசுகிறாயே!
பெரும்பான்மை என்ற அதிகாரம் பற்றித்தானே,
நாங்கள் செய்த தவறினை,
இன்று உங்கள் இளைஞர்களும் பல்கலைக்கழகத்தில்  செய்திருக்கின்றார்கள்.
இந்நிலையில் எங்கள் குற்றங்களை வரிசைப்படுத்தி நியாயம் கேட்க,
உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என்பீர்கள்.
பதில் சொல்கிறேன்.



என் அன்புக்குரியவர்களே!
உங்கள் கருத்தோடு நான் முரண்படுகிறேன்.
பெரும்பான்மை அதிகாரத்தால் நீங்கள் செய்த தவறுகள்,
பலம் பற்றியும், திமிர் பற்றியும், அடக்கியாளும் எண்ணம் பற்றியும்,
பூனை, எலியை அடித்து விளையாடும் விளையாட்டிற்கு ஒப்பாய் செய்யப்பட்டவை.
சும்மா இருந்த தமிழர்களை,
‘என் அதிகாரத்திற்கு முன் உன்னால் என்ன செய்யமுடியும்?’ எனக் கேட்டு,
சீண்டி விளையாடி வினை செய்தீர்கள் நீங்கள்.
இன்று நடந்திருப்பது அத்தகைய ஒன்றல்ல.
தயைகூர்ந்து நான் சொல்லப் போகும் நியாயத்தை,
நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள்.



கடந்த முப்பதாண்டுகளாய்,
அடிக்குமேல் அடி விழுந்து மனவடுப்பட்டவர்கள் எங்கள் இளைஞர்கள்.
பேரின அரசாங்கங்கள் செய்த கொடுமைகளுக்காளாகி,
கர்ப்பத்திலேயே அல்லல்பட்டு அழத்தொடங்கியவர்கள் எங்கள் இளைஞர்கள்.
தந்தை, தாய், உற்றார், உறவினர், நண்பர் என,
அத்தனை பேரும் காரணமின்றி அழிக்கப்பட்ட காட்சிகளைக் கண்டு,
புத்தி உறைந்து போனவர்கள் எங்கள் இளைஞர்கள்..
எந்த இடத்திலும் எப்போதும் குண்டு விழலாம் எனும் பயத்தில்,
உறைந்து உருகியவர்கள் எங்கள் இளைஞர்கள்.
நம் தாய் மண்ணில் நாம் வாழமுடியுமா? முடியாதா? என்பதுகூடத் தெரியாமல்,
வாடி வதங்கியவர்கள் எங்கள் இளைஞர்கள்.
இந்தக் காயங்கள் எல்லாம் சேர்ந்துதான்,
பல்கலைக்கழகத்தில் அவர்களை எதிர்வினை செய்யத் தூண்டியிருக்கின்றன.



அடுத்தடுத்து பூனையிடம் அடி வாங்கிய வேதனையில்,
எதிர்த்துச் சீறும் எலியின் செயலுக்கு ஒப்பானது இது.
மற்றவர் கை அருகில் வந்ததுமே,
எங்கே மீண்டும் என் புண்ணில் குத்திவிடுவார்களோ எனும் அச்சத்தில்,
சீறிப்பாய்ந்து சினப்பது போல,
மிகை எதிர்ப்புக் காட்டியிருக்கிறார்கள் அவர்கள்.
தயைகூர்ந்து அதைப் புரிந்து கொள்ளுங்கள்.



அன்பை வேண்டி நிற்பதுதான் தமிழர்களின் இயல்பு.
அவர்கள் பகையை வீம்புக்காய் ஒருநாளும் வேண்டி நிற்கமாட்டார்கள்.
நடந்தது வரலாற்றுப் பயத்தால் எழுந்த இளைஞர்களின் எதிர்வினை மட்டுமே.
நிச்சயம் அது தொடர்ந்து நடக்காது.
தமிழ் சான்றோர்கள் அங்ஙனம் நடக்க விடமாட்டார்கள்.
உங்கள் சிங்கள மாணவர்களைக் கேட்டுப் பாருங்கள்.
எங்கள் தமிழ் இளைஞர்களில் பெரும்பான்மையினோர்,
அவர்களோடு எப்படி நட்பாய்ப் பழகுகிறார்கள் என்று.
சகோதரர்களுக்குள் சிறு சண்டை வருவதில்லையா?
அவ்வப்போது அப்பகையை மறந்தால்தான் உறவு நீடிக்கும்.
அதை விடுத்து பூதக் கண்ணாடிகளால் பிழைகளைப் பார்க்கத் தலைப்பட்டால்,
போரும் அழிவும்தான் இத்தேசத்தில் மிஞ்சும்.



எங்கே இடம் கிடைக்கும்? எப்போது பகை விதைக்கலாம்? என எதிர்பார்த்து,
ஏங்கிக் கிடக்கிறது ஒரு குள்ளநரிக் கூட்டம்.
அவர்களுக்கு எங்களைப் பற்றியும் கவலையில்லை,
உங்களைப் பற்றியும் கவலையில்லை.
ஊரை இரண்டுபடுத்திக் கொண்டாட நினைக்கும் கூத்தாடிகள் அவர்கள்.
ஈரை எருமையாய் ஆக்கி இழிவு செய்யக் காத்திருக்கும்,
ஓர் ஈனர் கூட்டம் இருபக்கமும் இருக்கிறது.
அவர்தம் வஞ்சக வலையில் வீழாமல் தப்புதல் நம் கடமையாம்.



மகாபாரதக் கதையில் நடந்த தவறுக்காக,
துரியோதனனோடு போர் தொடுக்கவேண்டும் என்று சகோதரர்கள் சொன்னபோது,
தர்மன் அதை மறுத்து அவர்களை நோக்கி ஓர் உவமை சொல்கிறான்.
காட்டிலுள்ள மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உராய்ந்தால் நெருப்புண்டாகும்.
அந்நெருப்பால் காடு அழிகின்றதோ இல்லையோ,
நெருப்பை உண்டாக்கிய மூங்கில்கள் அழிந்து போகும்.
அதுபோல பகை என்னும் நெருப்பை உண்டாக்கினால்,
மற்றவர்கள் அழிகிறார்களோ இல்லையோ,
உண்டாக்கியவர்கள் அழிந்து போவார்கள்.
எனவே பகை நெருப்பு வேண்டாம் என்கிறான் அவன்.
வயிரமெனும் கடு நெருப்பை மிக மூட்டி வளர்க்கின் உயர் வரைக்காடென்ன
செயிர் அமரில் வெகுளி பொர சேர இருதிறத்தேமும் சென்று மாள்வோம்.



எத்துணை அற்புதமான உவமை.
மற்றவற்றிற்குத் தீ மூட்டவென கொளுத்தப்படும் தீக்குச்சி,
மற்றவற்றை எரிக்கிறதோ இல்லையோ தான் எரிந்து போகிறதே,
அதைக் கண்கூடாகக் கண்டபின்னும்,
பகை வளர்க்க முனைபவன் எங்ஙனம் அறிவாளியாவான்?
தர்மன் அங்ஙனம் சொன்ன பின்பும்,
“அவர்கள் இழைத்த தீங்கை எங்ஙனம் மறப்பது?” என்று கேட்கிறான் வீமன்.
அதற்கு தர்மன்,
'சில வேளைகளில் எங்கள் கையே எங்கள் கண்களைக் குத்திவிடுவதில்லையா?'
எங்கள் கண்ணைக் குத்தியது என்பதற்காக கையை வெட்டமுடியுமா? என்று பதிலுரைக்கிறான்.
“கண் மலரில் கை படாதோ”
என்றோ பாடப்பட்ட இதிகாசங்கள் இன்று கைகொடுக்கின்றன.



நடந்த சிறு தவறுக்காக என் இளையோர் சார்பிலும் தமிழ்மக்கள் சார்பிலும்
உங்களிடம் மன்னிப்புக் கேட்டு நிற்கிறேன்.
விளையாட்டை வினையாக்காதீர்கள்.
பகைவேரை அடியோடு கிளறி எறிந்து,
அன்பு தொடர அனைவரும் அனுமதியுங்கள்.



இனி, சந்தர்ப்பத்தால் சமநிலை தவறிப்போன,
என் தமிழ் இளைஞர்களுக்கு அன்போடு சில வார்த்தைகள்.
தயைகூர்ந்து உணர்ச்சிவயப்பாட்டில் செயலாற்றுவதை உடன் நிறுத்துங்கள்.
உங்கள் ஆத்திரம் எனக்குப் புரிகிறது.
அடுத்தடுத்து இனத்தின் மேல் அநியாயமாய் விழுந்த அடிகளால்,
நீங்கள் கொதித்திருப்பதை என்னால் உணரமுடிகிறது.
ஆனால் ஒன்றை மறந்து போகாதீர்கள்.
அடிவாங்கினோம் என்பது மற்றவர்களை அடிப்பதற்கான அனுமதிப்பத்திரமாகாது.
தீங்குக்குத் தீங்கிழைத்தல் என்பது ஒருக்காலும் தமிழர்தம் மரபாகாது.
நாளைய தமிழுலகின் தலைமை அறிஞர்கள் நீங்கள்.
உங்கள் வழிப்படுத்துதலில்தான்,
நாளை நம் தமிழினம் தலைநிமிர்த்த வேண்டியுள்ளது.
அதை மறந்து போகாதீர்கள்.



போரினால் விளைந்த புன்மைகளை ஆழ அறிந்தவர்கள் நீங்கள்.
எதிரிகள் கேடு விளைத்தபோது,
கேட்பாரின்றி சிதைந்த நம் உறவுகளைக் கண்ணால் கண்டவர்கள் நீங்கள்.
நமது அரசியல்வாதிகள் தமது சுயநலத்திற்காய்,
உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி விளையாட இன்றும் நினைக்கிறார்கள்.
அவர்களின் வஞ்சனை வலையில் வீழ்ந்து போகாமல்,
உறுதிபட்ட நெஞ்சோடு எதிர்காலத்தைச் சந்திக்க வேண்டியவர்கள் நீங்கள்.
பலம் வளர்க்காமல் பகை வளர்த்து என்ன செய்யப்போகிறோம்?
உறவுதான் பலம்.
பகைதான் பலயீனம்.
உணருங்கள்!



உலக அரசியல் பற்றி உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை.
எங்கள் மேல் அக்கறை காட்டும் எந்தத் தேசத்தாரும்,
தங்கள் லாபத்திற்காய் அன்றி எங்கள் லாபத்திற்காய் இங்கு வருவதில்லை.
எம் இனம் பதைபதைத்து அழிந்தபோது பார்த்திருந்தவர்கள்தானே அத்தனைபேரும்.
அவர்கள் துணைவருவார்கள் எனும் நம்பிக்கையால்,
அன்பு அயலில் மீண்டும் துளிர்க்கும் சூழ்நிலையில்,
அதை வளர்க்க நினைக்காமல் அழிக்க நினைக்கலாமா?
மோத நினைப்பது முட்டாள்கள் செயல்.
வெல்ல நினைப்பதுதான் அறிஞர்க்கு அழகு.
வெல்வதற்கு அன்பைத் தவிர வேறு ஆயுதம் உண்டா?



தர்மத்தின் பலம் அறிந்த நாங்கள் தவறிழைக்கலாமா?
பல்கலைக்கழகத்திற்குள் பெரும்பான்மையராய் இருக்கிறோம் என்பதற்காக,
மாற்றாரின் கலை, கலாசாரத்தை நாம் அங்கீகரிக்க மறுத்தால்,
நாட்டில் பெரும்பான்மையாய் இருக்கும் தகுதிபற்றி,
அவர்கள் நம் கலை, கலாசாரத்தை அங்கீகரிக்க மறுத்தது சரி என்று ஆகிவிடாதா?



நாம் வீழ்ந்தது உண்மை.
ஆனாலும் நம் பண்பு வீழவில்லை என்று நாம் நிரூபிக்கவேண்டாமா?
இறையருளால் உலகம் காவல் நின்று,
மீண்டும் இத்தேசத்தின் ஒற்றுமைக்கு வழிவகுத்துப் பார்த்திருக்கிறது.
தமிழர்தான் அதனைச் சிதைத்தார்கள் எனும் பழி  சூழ,
உங்களின் மிகையுணர்ச்சியால் தயைகூர்ந்து வழிவகுத்து விடாதீர்கள்.



மாற்றாரின் மொழி, மதம், கலை, கலாசாரம் என்பவற்றைத் தாழ்த்தித்தான்,
நமது விழுமியங்களை வளர்க்கவேண்டும் என்று நாம் நினைத்தால்,
நாமும் மற்றவர் போல் சிறியராகிவிடமாட்டோமா?
தமிழின் பெருமை நமக்கும் தெரியவில்லை என்றாகிவிடாதா?
எத்தனையோ படையெடுப்புக்களையும், ஆக்கிரமிப்புக்களையும் தாண்டித்தான்,
நம் தமிழ்த்தாய் இன்றும் நிலைத்து நிற்கிறாள்.
பல்லாயிரமாண்டு பண்புப் பலம் கொண்ட அவளை,
மாற்றாரை இறக்கித்தான் உயர்த்தவேண்டுமெனில்,
அது அவளுக்கு நாம் செய்யும் இழிவென்று முதலில் உணருங்கள்.
தயைகூர்ந்து தமிழ்த்தாயை தலைநிமிர்ந்து வாழவிடுங்கள்.



தம்மோடு ஒப்பிடுகையில் தமிழர்கள் உலகளாவிய பெரும்பான்மை கொண்டவர்கள்,
அப் பெரும்பான்மை கிடைத்தால்,
தமிழர்கள் தம்மை நசித்துவிடுவார்கள் எனும் பயத்திலேயே,
அன்று தொட்டு சிங்களவர்கள் நம்மை அடக்க முயன்று வருகிறார்கள்.
பெரும்பான்மை பெற்றுவிட்டால்,
தமிழர்கள், அவர்கள் நினைப்பது போல்தான் நடப்பார்கள் என,
உலகம் பழி சொல்ல வழிவகுத்து விடாதீர்கள்.



பிழைக்குப் பிழை ஒருகாலும் பதிலாகாது.
அதுதான் வழி என்று ஆகிவிட்டால்,
பகைக்கும், போருக்கும் எப்படித்தான் முடிவுவரும்?
பகையினதும், போரினதும் பாதிப்புக்களை உணார்ந்த நீங்களே,
இவ் உண்மையைத் தரிசிக்கத் தவறினால்,
உலகம் நம்மை இழிவு செய்யாதா?
உணருங்கள் !



சிங்களவர்க்கு நான் முன்னே சொன்ன,
பாரதக் கதையைத்தான் உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்.
பகை மற்றவர்களை அழிக்கிறதோ இல்லையோ,
உங்களை அழித்துவிடும் என்பதை மறவாதீர்கள்.



பல்கலைக்கழக எல்லைக்குள் இன்று உங்களுக்கு ஒரளவு பாதுகாப்பு இருக்கிறது.
அப்பாதுகாப்புத்தரும் உற்சாகந்தான் உங்களை நிலைதடுமாற வைத்திருக்கிறது.
சென்ற ஆட்சியில் இருந்திராத பாதுகாப்பு அது.
இன்று ஏதோ உலக நெருக்கடியால் ஓரளவு இறங்கி வந்திருக்கிறார்கள்.
மாற்றாரின் பொறுமையை அவர்களின் மூக்கில் குத்தித்தான் சோதிக்கவேண்டுமா?
‘அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டு செம்மாக்கும் கீழ்’ என்றான் வள்ளுவன்.
அவன் சொன்ன கீழோரில் ஒருவராய் நாம் ஆகலாமா?



அவ்வள்ளுவனே, ‘அச்சமே கீழ்களது ஆசாராம்’ என்றான்.
நாம் அவ் வகையினர் அல்லர் என்று நீங்கள் நிரூபிக்கவேண்டாமா?
சென்ற ஆட்சியில்,
நம் பல்கலைக்கழகத்தில் புரட்சி செய்ய முனைந்த சில இளைஞர்களை,
அரசு மறுவாழ்வு முகாமுக்கு அனுப்பியபோது,
அவர்கள் பணிந்து மன்னிப்புக் கடிதம் கொடுத்து வெளிவந்ததும்,
அவ்விளைஞர்களின் தாயர் யாழ் வந்த மகிந்தவிடம் கால்பற்றி இறைஞ்சி நின்றதும்
இப்போதும் நினைவில் இருக்கிறது.
தேவையற்று துணியக்கூடாது. துணிந்தால் பணியக்கூடாது.
உங்கள் பாதுகாப்பு எல்லைக்குள் மீண்டும் மாற்றாரை நுழைய விட்டு விடாதீர்கள்.



கடுமையாய்ப் போர் நடக்கையிலும் நம் தமிழ் இளைஞர்கள்,
தென் பகுதியில் சிங்களச் சகோதரர்களுடன் சேர்ந்தே படித்தார்கள்.
ஒருசில தீயரைத் தவிர மற்றவர்கள் அவர்களை உறவாய் நடத்தியது உண்மை.
முப்பதாண்டுகளின் பின் எங்கள் இடத்திற்கு அவர்களின் வருகை நிகழ்ந்திருக்கிறது.
தமிழர்தம் பண்பாட்டை நாம் நிரூபிக்கவேண்டிய நேரமிது.
‘பெயக்கண்டு நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்’ என்றானே வள்ளுவன்.
அவர் வழி நின்று நஞ்சைப் பெய்தார்க்கும் நன்மை செய்தல்வேண்டாமா?
சிந்தியுங்கள்.



நம் தமிழினத்தின் தனித்துவங்களைக் காக்கத்தானே போராடினோம்.
இன்றும் போராடுகிறோம்.
அத்தனித்துவங்களை வரையறுத்துத்தந்த வள்ளுவனே,
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல் என்று கூறியிருக்கிறான்.
உயர் பண்புகளை இழந்தா நம் உயிர்த்தமிழைக் காக்கப்போகிறோம்.
தயைகூர்ந்து நினைத்துப்பாருங்கள்.



தமிழர்கள் பெரும்பான்மை பெற்ற இடங்களில் மாற்றார்க்கு,
மத, மொழி, கலை, கலாசார உரிமைகள் அனைத்தும் வழங்கப்படும் என்று,
நீங்கள் நிறுவினால்தான் அவர்கள் நாணுவார்கள்.



இவையெல்லாம் பழங்கதைகள்.
நடைமுறைக்குச் சாத்தியப்படாத இவ்விடயங்களை நம்பச்சொல்லி,
மீண்டும் எங்களை ஏமாறச் சொல்கிறீர்களா? என்று,
உங்களில் ஒருசிலர் குமுறுவது தெரிகிறது.
அதையும் நான் விளங்காதவன் அல்லன்.
இன்று உலகத்தின் மேற்பார்வையில்,
இரு இனமும் வந்திருக்கின்றன.
உலகம் தரும் அழுத்தமே மாற்றாரின் இன்றைய மனமாற்றத்திற்குக் காரணம்.
உலகம் தரும் அவ் அழுத்தம் என்பதே,
சிறுபான்மையினராகிய எமக்குக் கிடைத்திருக்கும் பலமுமாம்.
நம் பெருந்தன்மைகள், மாற்றாரால் ஏற்கப்படாவிடினும்,
நிச்சயம் உலகின் மதிப்பை நமக்குப் பெற்றுத்தரும்.
அதனால் நாம் மேலும் பலம் பெறுவோம்.
நமது முன்கோபத்தால் உலகின் பார்வையில்,
நாம் குற்றவாளிகளாகிவிடக்கூடாது என்பதே எனது கோரிக்கை.



என்னவோ ஏதோ! மாற்றினத்தாரின் கலைக்கு,
நம்மண்ணில் இடந்தராமாட்டோம் எனும்,
உங்கள் பிடிவாதத்தில் எனக்கு உடன்பாடில்லை.
நடந்தது நடந்துவிட்டது.
மாற்றார் தீர்ப்புரைக்க வரும் முன்னர்,
உங்கள் பேராசிரியர்களின் துணைகொண்டு,
முரண்பட்ட அச்சிங்கள இளைஞர்களோடு,
முகம் கொடுத்துப் பேசுங்கள்.
நடந்த தவறுக்கு மன்னிப்புக் கோருங்கள்.
‘அடடா நாமும் தவறிழைத்து விட்டோமே!’ என,
அவர்களையும் எண்ணச் செய்யுங்கள்.
யாழ். பல்கலைக்கழகத்தை இன ஒற்றுமைக்கான முன்மாதிரியாய் ஆக்கிக்காட்டுங்கள்.
அதனால் உங்கள் மதிப்பும் எங்கள் இனத்தின் மதிப்பும் உயரும்.
பகை வேர் அறும் - எம் பார் உயரும்.
அனைவரும் அமைதியுற வாழலாம்.



அரிதாய் நாம் எதிர்பாராமல்  வாய்த்திருக்கும் இச்சந்தர்ப்பத்தை,
நம் உணர்ச்சிக் கொந்தளிப்புகளால் கொச்சைப்படுத்தி விடவேண்டாம் என,
உங்களைக் கைகூப்பிக் கேட்டு நிற்கிறேன்.
வள்ளுவன் வழிவந்த தமிழர்கள் நாம் என,
நிரூபிக்கும் நேரம் இது.
நீங்கள் நிரூபிப்பீர்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது.
இத்தேசத்தில் வேற்றுமையை வேரறுங்கள்.
இவ் அரிய காரியத்தை,
எங்கள் இளைஞர்கள் செய்து காட்டினார்கள் எனும் பெருமையைத் தாருங்கள்.
உங்களை மீண்டும் கைகூப்பி வேண்டி நிற்கிறேன்.



 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.