•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Sunday, June 16, 2019

இரா – பகல் - கவிஞர் ச.முகுந்தன்

அன்றாடம் எங்கள்
அலைமடியில் எழும்கதிரோன்
பின்னேரக்கையில் பிடிபடுவான்
பின் நடக்கும்
இரவு விசாரணையின்
இம்சையினைத் தாங்காமல்
நிலவை மலங்கழிப்பான்
இந்நெடி கண்டு
விண் ஈக்கள் பலகூடி
மொய்க்கும்
பயங்கர ராத்திரிகள்
◐◐◐
விளக்குத் தலையோடு
வீதியெங்கும் நட்டுவைத்த
தூக்கு மரங்கள்!! ஆங்கே
தொடுத்த சணற்கயிற்றில்
நாக்குக் கிழிபட்ட
தென்னங் குருத்துகளாய்
காரணம் தெரியாமல்
கழுவேற்றப்பட்டிருக்கும்
தோரணப் பிணங்கள்
◐◐◐
சில்வண்டும் செல்துண்டும்
சீழ்க்கையடித்திருக்க
நள்ளிரவின் துகிலை
நாய் ஊளைகள் உரியும்
அச்சறுக்கையாக அடைபட்ட
கிடுகுவரிச் செத்தைகளின் இடுக்கில்
பச்சோந்திச் செதில்கள்
பாம்புகளின் கோவணங்கள்
◐◐◐
பத்திரிகை முகத்தில்
'பலி' தார் அப்புண்டு
ரத்தவெறி சுவறி
'ரா' முட்டைக்
கோது உடையும்
◐◐◐
பகற்குஞ்சைத் தேடி
ஆவல் விழிக்கரமாய் நீள
அடிவானில்
பகற்குஞ்சைக்
காணோம்
பாவம்
அடைகாத்த பலன்?
◐◐◐◐◐

Post Comment

Saturday, June 15, 2019

காதலாகி..... -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-தமிழ்நாட்டைச் சேர்ந்த எனது ரசிகர்களும் என் ஆக்கங்களை இப்போது அதிகம் படிக்கத்
தொடங்கியிருக்கிறார்கள். இந்தக்கதை எங்கள் கிராமிய மணம் பொருந்திய கதை. இதனை
ஊர்ப்பாஷையில் எழுதினால்த்தான் கதை சிறக்கும். ஆனால் எங்கள் பேச்சுவழக்குச் சொற்கள் சில தமிழ்நாட்டு மக்களுக்குப் புரிய வாய்ப்பில்லை. அதனால் அவர்களுக்குப் புரியாத சொற்களை
தெளிவுபடுத்தியிருக்கிறேன். நவீனங்களுக்கு அகராதி போடுவதில் எனக்கு உடன்பாடில்லை.
ஆனாலும் பலருக்கும் விளங்கவேண்டும் என்பதால் இக்காரியத்தைச் செய்யவேண்டியிருக்கிறது.

கொண்ணன்மார்- அண்ணன்மார்கள்
உவன-அவனை
உவள்- அவள்
விசரன்-பைத்தியக்காரன்
அல்லனிக்காணி- ஒருநிலத்துண்டின் பெயர்
கதியால்- வேலிக்கு இடும் மரம்
ஆய்க்கினை-கரைச்சல்
எக்கணம் - ஒருவேளை
கேக்கிறனெண- கேக்கிறேன் அம்மா
கதைத்தல் - பேசுதல்
கொப்பன், தேப்பன்- தகப்பன்
கொம்மா - அம்மா
படலை - ஓலைகளால் செய்யப்பட்ட தடுப்பு
போட்டினமே-போய்விட்டார்களா?
அவையள் -அவர்கள்
பிரேதம் - பிணம்
வேலிப்பொட்டு -வேலியிலிருக்கும் ஓட்டை
வெருட்டல் - மிரட்டுதல்
குமர்- குமர்ப்பிள்ளை
உத- அதனை
அரியண்டம்- கரைச்சல்
வளவு - காணி
பெடியன் - மகன்
நிரவுதல் - மூடுதல்
பேயன் -அறிவில்லாதவன்

💢💖💢
லகம் முழுவதும் இன்ப மயமாய்த் தோன்றியது கலாவுக்கு.
இன்றோடு அவள் துன்பங்கள் தொலையப்போகின்றன.
முதன் முதலாய் வசந்த வயலுக்குள் கால் வைக்கப் போகிறாள்.
நினைப்பு, சிலிர்ப்பைத் தர, தலையசைத்துக் கொள்கிறாள் அவள்.
காலைப்பொழுது தாண்டிய வெயிலின் மெல்லிய சூடு,
அவள் உள்ள உணர்ச்சிக்குச் சுவையூட்டுகிறது.
இதுவரை தன் சோகங்களின் பதிவேடாய் இருந்த முல்லைத்தீவு,
சொர்க்கமானாற்போல் ஓர் உணர்வு.
அமைதியுற்றிருந்த கடலை நோக்கியிருந்தன அவள் கண்கள்.
வழக்கத்திற்கு மாறான அலையின்றி வெறித்து உள்வாங்கிய கடல்,
அவளது கவனத்தை ஈர்க்கவில்லை.
அவள் உள்ளத்துள் ஆயிரம் நினைவலைகள்.
இருபதாண்டுகளைத் தாண்டி அவள் எண்ணங்கள் பின் செல்ல,
அமைதியாய்க் கண் மூடுகிறாள்.
அவ்வெண்ணங்களை அசை போட்டது அவள் மனநாக்கு.

💢💖💢

Post Comment

Friday, June 14, 2019

திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 5: "ஓலமிடினும் உணராய்!" -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-


ந்தாம் வீட்டவளின் அழகான நன்முற்றம்,
மெய்யுருகிப் பெண்களெலாம் மேனி சிலுசிலுக்க,
ஐயன்தன் பெயர்சொல்லி அன்போடு பாடுகிறார்.
மார்கழியின் தெய்வீக மாண்பதனால் உளம் உருக,
சீர்பொலியச் சிவனார்தம் செம்மைமிகு நாமமதை,
ஊர்பொலியப் பாடுகிறார், உவந்தேத்திப் பாடுகிறார்.
உய்யும்வழி கண்டு உள்ளமெலாம் உருகுகிறார்.
பொய்யில்லாப் பாவையர்கள் புகழ்ந்திறையைப் பாடிடவும்,
அவ்வீட்டுக் கதவமது அசைந்து திறக்கவிலை.



Post Comment

Sunday, June 9, 2019

வாருங்கள் சேருங்கள் தேருங்கள் - ஸ்ரீ. பிரசாந்தன்


களம்;: வரணி
கதாமாந்தர்: அடியவர், அம்பிகை

அடியவர்:
பேர்புகழ் ஒன்றும் வேண்டிய தில்லைப் பெருமகளே!
ஓர்குவைப் பொன்பொருள் உன்னிடம் நாமென்றுங் கேட்டதிலை
பார் வியக்கின்ற பதவியோ வீடோ பகர்ந்தறியோம்
தேர் வடம் பற்ற அருள்தருவாய் எங்கள் திருமகளே!

கூவிக் கூவி அழைக்கின்றனர் இந்தக் குவலயத்தில்
பாவியேந்தமை பக்கம் மாறென்றுபல் சமயத்தினர்,
தேவியே! உந்தன் திருமுகம் அன்றிப் பிறிதறியோம்
ஆவி போகும்முன் உன்வடம் பற்ற அருள்புரியே.

அம்பிகை: 
வாருங்கள் யாவரும், அன்பெனும் வடம்பற்ற வருத்தமின்றி
ஆர்உங்கள் பாதையை அடைப்பவர்? ஆலய முன்றலிலே
பேரங்கள் கோசங்கள் பிரிவினை வாதங்கள் தாய்க்கிலையே
தேர்உங்கள் சொத்தென்று தேருங்கள் எந்தன் குழந்தைகளே!

۩۩۩۩۩


செய்தி :


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...