தவமக்கா -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

தவமக்கா -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-
 
ரே கூடிநின்றது. 
எல்லோர் முகங்களும் விறைத்தபடி.
செல்வராசா தலைகுனிந்து நின்றான்.
அவன்முன் உரு வந்தவர்போல் தவமக்கா.
'என்னடா நினைச்சுக்கொண்ட ..... மேனே,
துணைக்கு ஒருவரும் இல்லையெண்ட நினைப்பிலேயோ,
வளவுக்க கால் வைச்சனீ!,
கோத்தை வட்டிக்கு விட்டு ஊரை மேய,
நீ களவெடுத்து ஊரை மேயிறியாக்கும்,
இந்தச் சேட்டைகள் என்னட்டைச் செல்லாது,
கள்ளத் தேங்காய் பிடுங்கிற வேலையெல்லாம்,
என்ர வளவுக்குள்ள வைச்சா,
காலை முறிச்சுப்போடுவன் பறையா!'
தவமக்கா போட்ட சன்னதத்தில் ஊரே கிடுகிடுத்தது.
பிடுங்கின தேங்காயைப் போட்டுவிட்டு,
செல்வராசா விட்டால் காணுமெண்டு நழுவினான்.
ஆளுக்கொரு அபிப்பிராயம் சொன்னபடி ஊர் கலைஞ்சுது.
குசுகுசுத்த அவர்களின் குரலில்,
தவமக்காவின் மீதான பயம் தெரிஞ்சுது.
 
 

தவமக்கா!
ஊரின் முடிவில் ஐயனார் கோவிலுக்குப் பக்கத்தில் அவர்களின் வீடு.
வயதுபோன தாயுடன் அவ தனிய இருந்தா.
முதற்சொன்ன காட்சியிலிருந்து, 
தடித்த, வலிய முரட்டுத்தனமான தோற்றத்தோடு,
அவவை நீங்கள் கற்பனை பண்ணியிருந்தால்,
பாவம், ஏமாந்து போனீர்கள்.
ஒல்லியோ ஒல்லியான உடம்பு.
சற்று முன்துருத்திய பற்கள்.
சோடாபுட்டிக் கண்ணாடி,
தாண்டித் தாண்டி நடக்கும் நடை. 
இருபது வருஷத்துக்கு முதல்,
குமர்ப்பிள்ளையாய் இருந்தபோது,
'அப்பன்டிசைட்' வெடித்ததால் தொட்ட நோய்,
பிறகு, பல பின்விளைவுகள உண்டாக்கி அவவை முடக்கிப்போட்டுதாம்.
'அக்கா' என்று கையைத்தொட்டாலே,
'விடு! விடு!' என்று நோவுல கத்துவா!
இரண்டுநாள் மருந்தில்லாட்டி,
அவ படுகிற பாட்டைப் பாக்கமுடியாது.
இப்ப அவவுக்கு முப்பத்தைஞ்சு வயசாம்.
 
 
தவமக்கா பற்றி,
இப்போது ஒரு படம் உங்கள் மனசில விழுந்திருக்கும்.
ஒல்லியான ஒரு பிறவிநோயாளி.
இயலாமையால எல்லாரோடையும் சண்டை பிடிக்கிறவ.
இப்படி அந்தப்படம் உங்கட மனசில விழுந்திருந்தா,
நீங்கள் திரும்பவும் பிழை விட்டிட்டீங்கள்.
ஒல்லி உடம்பும் நோயுமாக இருந்தாலும்,
மனவலிமையில பத்து ஆம்பிளயளுக்கு அவ சமமானவ.
அப்ப எனக்குப் பதினைஞ்சு வயசிருக்கும்.
அந்தக் கிராமத்துக்கு நான் போன புதிசு.
எங்கட ஊரே அவவோட 'பிளங்கக்' கொஞ்சம் பயப்படும்.
'பொல்லாத வாய்க்காரி.'
இது அவ பற்றிய பொதுவான ஊர் அபிப்பிராயம்.
அந்த ஊரைப் படிக்கத் தொடங்கியபோது,
அவவை ரசிக்கத் தொடங்கினேன்.
 
 
தனிச்சு வாழுற தெம்பு,
தனிப் பொம்பளயா ஆம்பிளகளையும் பயப்பிடுத்தி வைச்சிருக்கிற துணிவு,
நெருங்கினா இனிமையாப் பழகுற பண்பு,
அவவிட்ட இதெல்லாம் எனக்குப் பிடிச்சிருந்துது.
'அவள் பொல்லாதவள் அங்க அடிக்கடி போகாத' 
அம்மாவின் எச்சரிக்கையையும் மீறி அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி போவேன்.
 
 
எனக்கு அவவைப் பாக்கப் பாவமாயிருக்கும்.
ஊர் எல்லையில அவர்களின் வீடு இருந்ததாலும்,
ஊரார் அவவோட அதிகம் பிளங்காததாலும்,
ஏதோ ஊரால ஒதுக்கிவைச்ச ஆக்கள் மாதிரி,
என்ட மனசுக்குப்படும்.
நல்லா வயசுபோன தாய்க்கிழவியோட வாழுற அவவை,
ஊர் அணைச்சு நடக்காததில,
எனக்குக் கொஞ்சம் கவலைதான்.
 
 
இண்டைய ஊர் இல்லை அது. 
அன்றைய ஊர்.
அந்தக் கிராமம் முழுக்க எங்கட சொந்தக்காரர்தான்.
எங்கட ஒழுங்கைக்க பிறத்தியார் காணி வாங்க முடியாது.
தேவையில்லாமக் கால் வைக்கவும் முடியாது.
பெடியள் நொருக்கிப் போடுவாங்கள்.
ஒருத்தற்ற நன்மை தீமையில,
மற்றவர் வலியக் கலந்துகொள்கிற உறவுக் கிராமம்.
 
 
'குலமணி!
அடுப்பு மூட்டவேணும் கொஞ்சம் தணல் இருந்தா தாறியே?' என்று,
காலம நெருப்புக் கடன்கேட்டு, வறுமை காட்டி வர்ற ஞானரத்தினம் மாமி.
பின்னேரம்,
'இந்தா குலமணி! எங்கட தோட்டத்து மரவள்ளிக்கிழங்கு' என்று,
வளமை காட்டி வருவா.
வளமையும், வறுமையும், பொருள் சம்பந்தப்பட்டு அல்லாமல்,
மனம் சம்பந்தப்பட்டிருந்த கிராமத்துச் சனங்கள்.
இப்ப போல நாகரிகத்தின் பேரால தனிச்சுப்போகாமல்,
கொண்டும், கொடுத்தும் வாழப்பழகிய சனங்கள்.
 
 
'எடேய் இராசரத்தினம்.
பெட்டைக்கு இருபத்திரண்டு வயசு தாண்டுது, 
என்ன இன்னும் வைச்சுக்கொண்டிருக்கிற' எண்டு,
உரிமையாக் கேட்கிற உறவு.
'குஞ்சு அரிசி ஊறவிட்டனான். 
வந்து ரெண்டு உரல் இடிச்சிட்டுப்போறியே?'
'கண்மணீ கலியாண வீட்டுக்குப் போகவேணும்,
உன்ர சங்கிலியையும் காப்பையும் ஒருக்காத் தாறியே?'
என்றெல்லாம் உரிமையாய் உறவு பாராட்டும் ஊரது.
குளறிக் கேட்டா,
அடுத்த நிமிஷம் பகை மறந்து உதவிக்கு ஓடிவர்ற சனம்.
அப்படிப்பட்ட ஊர், தவமக்கா குடும்பத்தை ஒதுக்கி வைச்சிருந்ததில,
எனக்குப் பெரிய மனக்குறை.
அந்த மனக்குறையே அன்பாக,
தவமக்கா எனக்கு சிநேகிதியானா.
 
 
அவவிட ஆளுமை பற்றி,
உங்களுக்குக் கொஞ்சம் சொல்லவேணும்.
கேட்பாரில்லாம இருந்த எங்கட ஐயனாரை,
ஊரையே ஒன்றாகக் கும்பிட வைச்ச பெருமையில,
அவவுக்குப் பெரிய பங்கு இருந்தது.
நடக்கேலாட்டியும் குந்தின குந்தில இருந்தபடி,
பனங்குருத்து வார்ந்து,
சின்னச் சின்னக் 'குட்டான்கள்' பின்னி என்னட்டைத் தருவா,
வீடு வீடாய்க் குடுத்து பிடியரிசி சேர்ப்பன்.
என்ன வறுமையிருந்தாலும்,
அதில ஒருபிடி அரிசி தொடா,
அத்தனையும் வித்துக் காசாக்கி,
கோயிலுக்கு இல்லாத சாமான்களெல்லாம்,
கொஞ்சங் கொஞ்சமாய் வாங்குவம்.
பெடி பெட்டையள எல்லாம் ஒன்று சேர்த்து,
வெள்ளிக்கிழமைகளில பஜனை.
தேங்காய், மாங்காய் வித்த காசில,
எல்லாருக்கும் சுண்டல் அவிச்சுத்தருவா.
சுண்டலுக்காகவே பெடியள் பஜனைக்கு வருவாங்கள்.
திருவிழாவுக்குக் கோயிலில புல்லுச் செதுக்கிறதெண்டா,
தவமக்கா வீட்டை இருந்து,
பெரிய பானையில,
பச்சமிளகாய், வெங்காயம் போட்ட பால்க்கஞ்சி வரும்.
நான் தான் அவவிட கையாள்.
என்ன வைச்சு ஊர்ப்பிள்ளயளை எல்லாம் ஒண்டுசேர்த்து,
கும்பிட ஆளில்லாம இருந்த கோயில,
ஒரே வருஷத்தில எழுப்பினா.
தவமக்காவில நான் வைச்சமதிப்பு இன்னும் உயந்துது.
 
 
அப்பவெல்லாம் ஊரில நல்லாச்சாதி பாப்பினம்.
மரமேர்ற சரவணை ஊர் முழுவதுக்குமாய்ப் பாடுபடுவான்.
வேலி விழுந்திட்டுதா? 'சரவணையைக் கூப்பிடு'!
துலாத் தள்ளவேணுமா? 'சரவணையைக் கூப்பிடு'!
பனையில ஓலை வெட்டவேணுமா? 'சரவணையைக் கூப்பிடு'!
கிணறு கலக்கி இறைக்க வேணுமா? 'சரவணையைக் கூப்பிடு'!
இப்படி சரவணை இல்லாம எங்கட ஊர் இயங்காது.
 
 
ஆனா எல்லா வேலையுஞ் செய்விச்சுப்போட்டு,
அவனைத் தள்ளியே வைச்சிருப்பினம்.
வீட்டுக்க விடாயினம்.
அவனுக்குத்தண்ணி குடுக்கச் சிரட்டை தேடுவினம்.
வெளியூர்களில வாழ்ந்த எனக்கு,
இது எரிச்சலாய் இருக்கும்.
தவமக்கா வீடு மட்டும் விதிவிலக்கு.
'பிளா'க் கோலாம சரவணைக்குத் தட்டில சோறு குடுப்பா.
'கிளாஸி'ல தான் தேத்தண்ணி.
'நளவனோட கொண்டாடுறாள்.'- தவமக்காவை ஊர் திட்டும்.
அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாம இருக்கிற அவவை,
எனக்கு நல்லாப்பிடிக்கும்.
 
 
தவமக்கா குமர்ப்பிள்ளயாக இருக்கேக்க,
நல்ல வடிவாய் இருப்பாவாம்.
பிறகுதான் வருத்தம் வந்ததாம்.
அதனால அவவுக்குக் கலியாணம் நடக்காமலே போச்சுது.
அப்பவெல்லாம்,
குமர்ப்பிள்ளையள கலியாணம் கட்டிக்குடுக்காம வைச்சிருக்கிறத,
கொலைக் குற்றம் மாதிரிப் பெரிய பாவமாய்க் கருதுவினம்.
தாய், தகப்பனை ஊர் துலைச்செடுத்திடும்.
இருபது வயசு தாண்டவே,
ஊர் 'பகிடி' பண்ணுமெண்டு பெட்டையள் ஏங்கிப்போவினம்.
எங்கட ஊர்ல வயசு தாண்டியும் கலியாணங் கட்டாமலிருந்தவை,
ரெண்டே ரெண்டு பேர்தான்.
ஒண்டு மஞ்சு, அடுத்தது தவமக்கா.
இரண்டுபேரும் ஒண்டாப் படிச்சவையள்.
மஞ்சுன்ர பிரச்சினை வேற. அதைப் பிறகு சொல்றன்.
தவமக்கா முப்பத்தைஞ்சு வயசாகியும் கலியாணங் கட்டாம இருந்தா.
ஊரிட தூற்றுதலை எல்லாம் ஒதுக்கி வாழ்ந்த அவவிட கம்பீரம்,
எனக்கு நிரம்பப் பிடிக்கும்.
 
 
மஞ்சு அப்படியில்ல. 
இப்பவும்  அவவுக்குக் கலியாணப்பேச்சு அப்பப்ப நடக்கும்.
கலியாணம் நடக்காத கவலையில,
ஊர் நல்லது கெட்டதுக்கும் மஞ்சு வரா.
தவமக்கா அப்படியில்ல எல்லா விஷேசத்துக்கும் முன்னுக்கு நிப்பா.
'கலியாணங் கட்டாம பொம்பிள வாழமுடியாதெண்டு ஆர் சொன்னது?'
பெண்விடுதலை பேசாத அந்தக் காலத்திலேயே துணிச்சு கேட்பா.
'எனக்குக் கலியாணந் தேவையில்லை' ஊர் அறியச் சொல்லுவா.
'மாப்பிள கிடைக்காத கவலையை மறைக்கப் பாக்கிறாள்.'
ஊர் குசுகுசுக்கும்.
அப்படி மாப்பிளைக்காகத் தவமக்கா கவலைப்பட்டதாக,
எனக்குத் தெரியேல.
நான் அப்படி நினைச்சதுக்குக் காரணம் இருந்துது.
 
 
தவமக்காட தங்கச்சிக்குக் கலியாணம்.
தமக்கையிருக்கத் தங்கச்சிக்குக் கலியாணம்.
ஊரெல்லாம் அப்ப, அதுதான் தலைப்புச்செய்தி.
சொந்த மச்சான் தான் மாப்பிள.
'தமக்கையை விட்டிட்டுத் தங்கச்சியை முடிக்கிறாங்கள்'
இது கொஞ்சப் பேற்ற குசுகுசுப்பு.
'சின்னப்பெடியள் கையைத் தொட்டாலே நோவில கத்துறாள். 
அந்த மல்லன் தொட்டாத் தாங்குவளே?
அவளுக்கென்ன கலியாணம்'- இது வேற கொஞ்சப் பேற்ற 'பகிடி'.
'முப்பத்தைஞ்சு வயசாகுது, 
அவளுக்கு அந்த ஆசை எல்லாம் போயிருக்கும்.'
'போயிருக்குமென்ன போயிருக்கும்.
போயிட்டுது எண்டு சொல்லுங்கோ.'
'உது நல்லகதை தான், ஆசையாவது போறதாவது,
சரவணைக்கு சும்மாவே கோப்பையில சோறும்,
கிளாஸில தேத்தண்ணியும் குடுக்கிறா?'
ஊர் அருவருப்பாய் வக்கிரம் பேசும்.
 
 
தவமக்காவின் காதிலும் இதுகள் விழாமலில்லை.
எதைப் பற்றியும் கவலைப்படாம,
தான் முட்டை வித்தும், கோழி வித்தும்,
சேர்த்த காசெல்லாம் போட்டு,
தங்கச்சிக்குத் தவமக்காவே முன்னுக்கு நிண்டு,
கலியாணம் செய்து வைச்சா.
தங்கச்சிட கழுத்தில தாலி ஏறேக்க,
தவமக்காவிட முகத்தைப் பாக்கிறன்.
மனம் நிறைஞ்சு முகஞ்செழிச்சு நிக்கிறா.
அவவைப்போய் கலியாண ஆசை பிடிச்சவஎண்டு கதைக்கிறாங்களே,
எனக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வரும்.
 
 
ஒருநாள் தவமக்காட வீட்டை போறன்.
தெய்வானை மாவிடிச்சுக் கொண்டிருக்குது.
தெய்வானையிட முகத்தில சோகம்.
'என்னண வழக்கமாப் பல்லு முழுவதும் காட்டுவ,
இண்டைக்கென்ன அழுதுவடிஞ்சுகொண்டு இடிக்கிற' 
தவமக்கா கேட்க,
தெய்வானையிட கண்ணிலயிருந்து கண்ணீர் கொட்டுது.
'ஏன் அழுற? என்ன நடந்ததெண்டு சொல்லண?'
கனிவாய்க் கேட்கிறா தவமக்கா.
'அதையேன் கேட்கிற பிள்ள, 
என்ர மேள் மலரெல்லே ஒருவனைக் காதலிச்சுப்போட்டாள்.'
'அதுக்கென்ன அவனுக்கே கட்டிக்குடன்.'
'அங்கதான் பிள்ள பிரச்சின.
அவன் காதலிச்சுப்போட்டு,
இப்ப காப்பும், சங்கிலியும் கேட்கிறான்.
நான் தனிய ஒரு ஆளா உழைச்சு,
ஏழு பிள்ளைகளுக்கும் சாப்பாடு போடுறதெங்க, 
காப்புச் சங்கிலி வாங்கிறதெங்க'
தெய்வானை விம்மி அழுகுது.
அவளையே பாத்துக்கொண்டிருந்த தவமக்கா,
மெல்ல எழும்பி உள்ள போறா.
 
 
திரும்பி வரேக்க,
அவவிட கையில ஒருசோடி காப்பும், ஒரு சங்கிலியும்.
'இந்தா இப்போதைக்கு இதைக் குடுத்துக் கலியாணத்தை கட்டிவை.
பிறகு வசதி வரேக்க வேண்டித்தா.'
தவமக்கா சொல்ல,
தெய்வானை திகைச்சுக் கையெடுத்துக் கும்பிடுது.
தனக்கு வாழ்க்கையில்ல எண்டு தெரிஞ்சும்,
இன்னொரு பிள்ளயிட வாழ்க்கைக்காக உதவி செய்யிற,
தவமக்கா எனக்கு ஒரு துறவி போலப் படுறா.
தான் வாழ்விழந்த துன்பம் துளியுமில்லாத,
அவவிட பெருந்தன்மையைப் பாத்துத் திகைச்சு நிக்கிறன்.
இமயமா என்ர நெஞ்சில தவமக்கா உயருறா.
 
 
அண்டைக்கு ஊரெல்லாம் ஒரே பரபரப்பு.
'மஞ்சு கார்க்கார அருணாவோட ஓடிட்டாள்.'
இதுதான் பரபரப்பின் காரணம்.
மஞ்சுவும் எங்களுக்குத் தூரத்துச் சொந்தந்தான்.
முதலே அவவைப் பற்றிக் கொஞ்சம் சொன்னனான்.
அவவுக்கும் முப்பத்திநாலு வயசாகுது.
அப்ப ஒரு பெட்டை ஒரு பெடியனோட ஓடுறதெண்டால்,
ஊரே ரெண்டுபடும். 
கலியாணவீடு, செத்தவீடு, திருவிழா எண்டு,
ஒரு வருஷத்துக்கு அதுதான் ஊரில கதையாய் இருக்கும்.
இவ்வளவுத்துக்கும் மஞ்சு ஓடினது,
தூரத்துச் சொந்தக்காரனோடதான்.
ஆனாலும் ஊர் பரபரத்தது.
வேலிக்கிளாலயும்,
சந்தி வழியவும் பெண்டுகள் கூடிக்கூடி கதைச்சினம்.
பரபரப்புக்கு வேறொரு காரணமுமிருந்தது.
 
 
மஞ்சு சாமத்தியப்படாதவா.
அது ஊரெல்லாம் தெரியும்.
வெகுளியான கிராமத்தவருக்கு ரகசியங்களை ஒளிக்கத் தெரியாது.
அதனால மஞ்சு சாமத்தியப்படாதது பரகசியமாய் இருந்துது.
ஒரு பெட்டைக்குச் சின்னக்குறை இருக்குதெண்டு தெரிஞ்சாலே,
அவளுக்குக் கலியாணஞ் செய்துவைக்க முடியாத காலமது.
தேடிப்பிடிச்சு ஆராவது 'கல்லுக்குத்திப்' போடுவாங்கள்.
அப்படியிருக்கச் சாமத்தியப்படாத ஒருத்திக்கு,
கலியாணம் எண்டது நினைச்சும் பாக்கமுடியாதது.
'உவளும் தவம் போல கலியாணம் இல்லாம இருக்கவேண்டியதுதான்.'
படிப்பில்லாத கிராமம் வெளிப்படையாய்ப் பேசும்.
அந்த மஞ்சுதான் அருணாவோட ஓடிட்டா.
கதைச்சு ஓயாமல் ஊரே பரபரத்துது.
 
 
எங்கட கிணத்தடியில் பெரிய சத்தம்.
அது மூன்று பேருக்குப் பங்கான கிணறு.
ஒரு பக்கப் பங்கு தவமக்காக்களுக்கு.
என்ர அக்காவையள் குளிச்சுக்கொண்டு நிக்க,
மற்றப் பக்கம் தவமக்காட பெரிய சத்தம்.
ஏதோ சண்டையோவெண்டு பயந்து ஓடுறன்.
என்னைக் கண்டவுடன தவமக்காட சத்தம் இன்னும் கூடுது.
 
 
'டேய் ஜெயா கேள்விப்பட்டனியே, 
மஞ்செல்லே கார்க்கார அருணாவோட ஓடிட்டாளாம்.'
எனக்கு ஆச்சரியம்.
தவமக்காவா இவ்வளவு சத்தமாய்ப் 'புறணி' பேசுறா?
அவவிடபேச்சு எரிச்சலூட்ட
'விடுங்கோ தவமக்கா எங்களுக்கென்ன,'
அவவின் உரையாடல் பற்றிய என்ர விருப்பின்மையை,
சொற்களில் வெளிப்படுத்துறன்.
'விடுறதோ அவள் சாமத்தியமே படாதவள் உனக்குத் தெரியுமே?'
நான் ஒரு ஆண்பிள்ளை என்பதையும் மறந்து அருவருக்கப் பேசுறா.
'உது என்ன கதை? உங்களுக்கென்ன ஆரும் ஆரையும் முடிக்கட்டுமன்'
விலகப்பாக்கிறன்.
நான் விலக விலக அவ தீவிரப்படுறா. 
 
 
தவமக்காட முகம் முழுவதும் சிவந்து பேய்போல் மாறியிருக்குது.
நிதானமான, அறிவான, அன்பான தவமக்கா தொலைஞ்சுபோயிருந்தா.
கண்களில குரூரம்.
ஏற்கனவே வெளியில்த் தள்ளியிருந்த பல்லுகள் இன்னும் வெளியில்த் தள்ள,
விகாரமாய் இளிக்கிறா.
விசரி மாதிரிக் கையைத் தட்டிக்கொண்டு,
'சாமத்தியப்படாத மஞ்சு அருணாவோட ஓடிட்டாள்.
சாமத்தியப்படாத மஞ்சு அருணாவோட ஓடிட்டாள்.
சாமத்தியப்படாத மஞ்சு அருணாவோட ஓடிட்டாள்.'
அங்கையும் இங்கையுமா ஓடி ஒரு பஜனைபோல பாடுகிறா.
என்ட அக்காமார் முகத்தில் பயம்.
எனக்கு அது தவமக்காவின்ட புதிய தரிசனம்.
ஊரைக்கூட்டி உயர்த்திய தவமக்கா,
சரவணையை மதித்து மனிதம் காத்த தவமக்கா,
தன்ட இழப்பை நிராகரித்து,
தங்கச்சிகுக் கலியாணஞ் செய்துவைச்ச தவமக்கா,
தெய்வானையின் மகளுக்குக் காப்பும், சங்கிலியும் குடுத்த தவமக்கா,
இப்ப ஒரு விசரி மாதிரிக்  குளறினபடி நிற்கிறா.
இழிவே வடிவமாய்த் தவமக்காவின் புதிய தரிசனம்!
தன் இழப்புக்குத் துணையாய் மற்றொருத்தி இருக்கிறாள் என்ற
ஆதரவு தொலைந்துபோக,
தவமக்காவின் அத்தனை நிமிர்வுகளும் உடைந்துபோயின. 
 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.